ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இன்று (12) காலை சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டை அவரது அமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பில் காலநிலை மாற்றம், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சூழல் பாதிப்புக்கள், அதனை வராமல் தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து  இருவரும் விரிவாகக் கலந்துரையாடினர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் பசுமைப் பொருளாதார முயற்சி மற்றும் சுற்றாடல் பாதிப்புக்கள் தொடர்பில் இலங்கையின் தொலைநோக்கு பார்வை குறித்தும் அமைச்சர் நசீர் அஹமட் இந்த சந்திப்பின் போது விளக்கினார். 

சுற்றாடல் அமைச்சில், காலநிலை மாற்றம் குறித்த பல்துறை நிபுணர்கள் கொண்ட "மனிதவள" அலகு ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பிலும் இங்கு முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் காலநிலை மாற்றம் தொடர்பிலான சவால்களை முறியடிப்பது தொடர்பில் சர்வதேசத்தின் உதவிகளையும் ஒத்தாசைகளையும் பெறுவது குறித்தும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டது.

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் சமாதான தூதுவராக நீண்ட காலம் செயற்பட்டு வந்த எரிக் சொல்ஹெய்மும், அமைச்சர் ஹாபிஸ் நசீரும் கடந்த காலத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள்,  பின்னடைவுக்கான காரணங்கள்,குறித்தும் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது சுற்றாடல் அமைச்சின் செயலாளர் Dr. அனில் ஜெசிங்க மற்றும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் பங்கேற்றிருந்தனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினராக மூன்று முறை பதவி வகித்த சாபி ரஹீம், கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டதனை தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.