டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கல் உட்பட அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கான பரிந்துரைகளை தமது உபகுழு உடனடியாக தேசிய சபைக்கு சமர்ப்பிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை கண்டறிவதற்கான தேசிய சட்டமன்றத்தின் துணைக்குழு, எம்.பி தலைமையில் கூடியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம், இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் உபகுழுவின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

E-தேசிய அடையாள அட்டையை விரைவுபடுத்துவதற்கு தேவையான தரவுகளை சேகரிப்பது மற்றும் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தரவு பாதுகாப்பு முறைமையை விரைவாக நிறுவுவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

மேலும், பொதுச் சேவையை டிஜிட்டல் மயமாக்கல் மூலம் புதுப்பிப்பதற்கு தற்போதுள்ள சட்டத் தடைகளை நீக்குவதற்கான கட்டளைச் சட்டங்களைத் திருத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் துணைக் குழுவில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை 02 வாரங்களுக்குள் சமர்பிக்குமாறு பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவிடம் உபகுழு பரிந்துரைத்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.