றிப்தி அலி

கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் தவிசாளர்களுக்கும், அவர்களுக்கான பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கும் கடந்த பல வருடங்களாக வழங்கப்பட்டு வந்த பல்வேறு வகையான கொடுப்பனவுகளில்  குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த குறைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் PS/CSA/11-18(1) எனும் இலக்க விசேட சுற்றறிக்கையொன்று கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானத்திற்கமையவே இந்த சுற்றறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது.

'அரச செலவு முகாமைத்தும் - மாகாண சபைகள்' எனும் தலைப்பிலான இந்த சுற்றறிக்கை - மாகாண ஆளுநர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் ஆளுநர்களின் செயலாளர்கள் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் பிரகாரம், கடந்த 2018.10.12ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதியின் செயலாளரான உதய ஆர்.செனவிரத்னவினால் வெளியிடப்பட்ட PS/CSA/11-18ஆம் இலக்க சுற்றறிக்கை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.  

இதுவரை காலமும் மூன்று வாகனங்களும், 1,500 லீற்றர் எரிபொருளும் பெற்று வந்த கலைக்கப்பட மாகாண சபையின் தவிசாளருக்கு புதிய சுற்றறிக்கையின் பிரகாரம் ஒரு வாகனமும், 150 லீற்றர் எரிபொருளுமே வழங்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்று,  தவிசாளர்களுக்கும் அவர்களுக்கான பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கும் கடந்து பல வருடங்களாக வழங்கப்பட்டு வந்த மாதாந்த சம்பளம், வாகன வசதிகள் மற்றும் எரிபொருள் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளிலும் குறைப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டன.

கடந்த பல வருடங்களாக கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் தவிசாளர்களுக்கும் அவர்களுக்கான பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கும் 25 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட நிதி அரசாங்கத்தினால் செலளிக்கப்பட்டு வந்தது.

தகவல் அறியும் சட்டத்தினை பயன்படுத்தி 'தமிழன் பத்திரிகை' கடந்த மார்ச் 13ஆம் திகதி இந்த விடயத்தினை அம்பலமாக்கியமை குறிப்பிட்டத்தக்கதாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.