பெற்றோலியத்துக்கு எட்டப்படும் தேவைப்பாடு, பெற்றோலியத்தை இறக்குமதி செய்வது மற்றும் பெற்றோலியத்தை களஞ்சியப்படுத்துவது சம்பந்தமான ஒரு விஞ்ஞான ரீதியான ஆய்வொன்றை மேற்கொள்ளவது மற்றும் இவ்வாறானதொரு திட்டத்தை பொறுப்பற்ற ஒரு நிறுவனம் கையாள்கையில் ஊழல் மோசடிகள் நடைபெறுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாகவும் 2021 கோப் அறிக்கை சுட்டிக்காட்டியது.

மேலும் எதிர்காலத்தில் பெற்றோல், டீசல், விமான எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய்க்கான கேள்வி வெகுவாக அதிகரிக்கக்கூடும் என்பதனால் நாட்டின் பெற்றோலிய களஞ்சியப்படுத்தலின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியதன் தேவையும் அதற்கான திட்டம் தொடர்பாகவும்  கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட அறிக்கையில் கவனம் செலுத்தி அதற்கான திட்டங்களை வழங்கியிருந்தது.

குறித்த அறிக்கையில், 

பெற்றோலியம் களஞ்சியப்படுத்தும் முறைகளாக சப்புகஸ்கந்த மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள பெற்றோலியக் களஞ்சியத் தொகுதிகள் தவிர்ந்த ஏனைய எண்ணெய்க் குதங்கள் இலங்கைப் பெற்றோலியக் களஞ்சியத் தொகுதி கம்பெனியால் நிர்வகிக்கப்படுதல், இன்று வரை டீசல் களஞ்சியக் கொள்ளளவானது 48 நாட்களுக்குப் போதுமானதாக ‌தக்கவைத்துக்கொள்வதற்கு ஏற்ற வகையில் விருத்தி செய்யப்பட்டிருந்தல், பெற்றோல் களஞ்சியக் கொள்ளளவானது 30 நாட்களுக்குப் போதுமானதாக தக்கவைத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் விருத்தி செய்யப்பட்டிருத்தல், மெற்றிக்தொன் 15,000 கொள்ளளவுடைய 3 குதங்கள் அமைக்கப்பட்டிருத்தல், மெற்றிக்தொன் 10,000 கொள்ளளவுடைய 03 குதங்கள் பழுதுபார்க்கப்பட்டிருத்தல், கொலன்னாவையில் 09 புதிய எண்ணெய்க் குதங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் 3,000 கியூபிக் (கன) மீற்றர் களஞ்சியக் கொள்ளளவு கிடைத்துள்ளமை, முத்துராஜவெல பிரதேசத்தில் புதிய எண்ணெய் குதத் தொகுதி அமைக்கப்படுதல், நிறுவனத்தின் உள்ளக பொறியியலாளர்களின் அபிப்பிராயத்தின் படி எமது நாட்டில் நிலவும் பெற்றோலியத் தேவைக்காக 45 நாட்களுக்கும் 60 நாட்களுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்திற்கு களஞ்சிய வசதிகளை கொண்டிருக்க வேண்டும் ‌போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

இந்த வருடத்தின் ஆரம்பப்பகுதியில் இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்புடன் திருகோணமலை எண்ணெய்த் தாங்கி அபிவிருத்தித் செயற்திட்டத்தினை  முன்னெடுப்பதற்காக  ஜனவரி மாதம்  ஒப்பந்தமொன்று கையொப்பமிடப்பட்டது.

திறைசேரி செயலாளர்,காணி ஆணையாளர் நாயகம், கனிய வள கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஒ.சி மற்றும் திருகோணமலை பெற்றோலியம் டெர்மினல்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 9  மாதங்களாகியுள்ள நிலையில் எந்த அபிவிருத்தி நடவடிக்கையும்  இதுவரை நிறைவடையவில்லை.

இந்த நடவடிக்கைகளின் தாமதம் குறித்து ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலிதவிடம் வினவினோம்,

ஜனவரி 6 ஆம் திகதி இந்த திட்டம் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டது. எனினும் திருகோணமலை எரிபொருள் களஞ்சியசாலையில் இதுவரை எந்த செயற்பாடுகளும் நடைபெறவில்லை.அந்த பணிகளை மேற்கொள்ள தனியாக குழுவொன்றும் அமைக்கப்பட்டது. இருப்பினும் எந்தவொரு செயற்பாடுகளும் நடைபெறவில்லை என ஆனந்த பாலித தெரிவித்தார்.


இந்த தாங்கிகளில் 24 எண்ணெய் தாங்கிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு(CPC) உரிமை கொண்டது. எனினும் அந்த தாங்கிகளுக்குரிய எந்த ஒரு செயற்பாட்டையும் இதுவரை காணவில்லை. 10 மில்லியன் டொலர் செலவாகும் இதனை அவசரமாக முடிக்கலாம் என்று அரசு கூறியிருந்தது என்றாலும் செயற்பாடற்று காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

IOC இடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்ட போது பவுசர் மூலம் விநியோகம் நடைபெற்றது.எனவே இங்கு போக்குவரத்திற்கு மாத்திரமே கோடிக்கணக்கான செலவை  மேற்கொண்டனர். IOC இன் upper tank farm இல் தான் CPC இன் தாங்கிகள் இருக்கின்றது.அதிலும் எந்தவித செயற்பாடுகளும் நடைபெறவில்லை.அத்தோடு எஞ்சிய 61 தாங்கிகள் அதிலும் எந்தவித நடவடிக்கைகளும் இதுவரை இடம்பெறவில்லை.இருந்தாலும் IOC அவர்களது உலக வர்த்தகத்தை மேற்கொண்டு தான் இருக்கின்றதாக பாலித சுட்டிக்காட்டினார்.

அதாவது, 2003ஆம் ஆண்டு இலங்கை-இந்தியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU-Memorandum of understanding  ) ஒன்று  கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஆறு மாதத்துக்காக மட்டும் கைச்சாத்திடப்பட்டது. எனினும் குறித்த காலப்பகுதியில் மீள் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அந்த ஆறு மாத நம்பிக்கை ஒப்பந்தத்தில்  வருடமொன்றுக்கு  ஒரு எண்ணெய் தாங்கிக்கு 1000 டொலர் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது ஒப்பந்தத்துக்கு செல்வதாயின் இந்த ஒழுங்குமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமனெ குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கடந்த 2018,2019 இல் அரசாங்கம் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள இருந்தது. அந்த ஒப்பந்தத்தில்,11 எண்ணெய் தாங்கிகள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு கொடுத்து விட்டு எஞ்சிய தாங்கிகளை இரண்டு பக்கமும் இணைந்து 99 வருட குத்தகை அடிப்படையிலான ஒப்பந்தமாக இருந்தது. அது மஹிந்த அமரவீர காலத்தில் தடைப்பட்டது. பின்னர் அர்ஜுன ரனதுங்க காலத்திலும் சென்று தடைப்பட்டது.

2022 ஆம் ஆண்டு ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பயங்கரமான விடயம் என்னவென்றால் 30 வருடத்துக்கு மேற்கொள்ளப்பட இருந்த ஒப்பந்தம் 50 வருடமாக அதிகரிக்கப்பட்டது தான். குறிப்பிட்ட 2022 ஒப்பந்தத்தின் முன்னரான காலப்பகுதியில் IOC எந்தவித ஒப்பந்தமும் இல்லாமலே செயற்பட்டது. குறிப்பாக எந்த ஒரு இடத்திலும்  IOC களஞ்சியப்படுத்தி வைக்கும் எரிபொருளை நாட்டினுள் விநியோகம் செய்ய வேண்டும் என்ற எந்தவொரு ஒப்பந்தமும் இருக்கவில்லை. இந்த களஞ்சிய நிலையங்கள் IOC  இன் இறக்குமதி ஏற்றுமதிக்கான சேமிப்பு நிலையமாகவே காணப்பட்டது. 2003 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தஹம் விமலசேன கடிதம் ஒன்றின் மூலம் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 5% த்தை விநியோகிக்குமாறு தெரிவித்திருந்தார்.

2002 ஒப்பந்தத்தின் படி CPC இன் முத்துராஜவல,கொலன்னாவ உட்பட 11 பிரதேச சேமிப்பு   நிலையங்களின் 33%மான உரிமை 35  வருடத்துக்கு IOC க்கு வழங்கப்பட்டது.

மேற்குறிப்பிட்டவாரே 2002 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் படி குறிப்பிடத்தக்க  பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. குறிப்பாக இறக்குமதி , ஏற்றுமதிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் நாட்டினுள் விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்யப்படவில்லை. மேலும்  சீனக்குடா ( China Bay ) பகுதி இந்த ஒப்பந்தத்துக்கு உட்படவில்லை. மேலும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒப்பந்தத்தின் படி, வேறு எந்த ஒரு நிறுவனமும் குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒப்பந்தங்கள் செய்ய முடியாது, CPC க்கு வழங்கப்பட்ட குதங்களை அவர்களால் புனர்நிர்மானம் செய்ய முடியாது  ஏனெனில் அது கூட்டு உடன்படிக்கையில் உள்ளது. அதன் அதிகாரம் LIOC வசம் நேரடியாகவே செல்லும். ஆக மொத்தம் குறிப்பிட்ட 2022 ஒப்பந்தத்தின் 100% வீத நோக்கமானது 710 ஏக்கர் காணி உட்பட 99 தாங்கிகளையும் IOC க்கு வழங்குவது ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னர் முதுராஜவெல,கொலன்னாவ , 11 மொத்த நிலையங்களுக்கும் சேர்த்து மாதம் ஒன்றிற்கு சாதாரணமாக 8 அல்லது 9 கப்பல்களின் மூலம் எரிபொருள் கொண்டுவரப்பட்டது. அண்ணளவாக ஒரு கப்பல் 36000 மெற்றிக்டொன் கொண்டது. இது போக கச்சா எண்ணெய் கப்பல் 90000 மெற்றிக் கொண்ட இரண்டு கப்பல்கள் கொண்டு வரப்பட்டது. இன்றைய நிலையில் இவை எதுவும் இல்லை. இன்று ஒரு மாதத்திற்கு  அண்ணளவாக 4 கப்பல்களே  வருகிறது. முன்னர் கொண்டுவரப்பட்ட எரிபொருளை விட இப்போது கொண்டு வரும் எரிபொருள் அண்ணளவாக 35% ஆகவே உள்ளது. குறிப்பாக இந்த  35% த்தில் டீசல், பெற்றோல் மாத்திரமே உள்ளடங்குகிறது.

மற்றையவை இன்னும் குறைவாகவ உள்ளது.

 சீனக்குடா  (chaina Bay )பகுதி மொத்தமாக IOC க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக  சீனக்குடா (Caina Bay) மூலம் எமது கப்பல் ஒன்று சென்றால் நாங்கள் IOC க்கு பணம் செலுத்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறோம். மேலும் இந்த ஒப்பந்தத்தில் எந்த எரிபொருளுக்கும் தடையோ, நிபந்தனைகளோ விதிக்கப்படவில்லை. எனவே,இந்தியாவின் அனுமதியின்றி  எதுவும் செய்ய முடியாது. இதன் காரணமாகவே IOC இன் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் இந்தியாவின் தூதுவர் தலையிடுகிறார் என ஆனந்த பாலித தெரிவித்தார்.

 இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அதன் செயற்பாடுகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. இது தொடர்பில் முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் நாம் வினவினோம்,

நான் ஜனவரி மாதத்தில் குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டேன். இருப்பினும் குறிப்பிட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒரே மாதத்தில் அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். இருப்பினும் நான் அறிந்த வகையில் தாங்கிகள் புனர் நிர்மாணப்பணியில் இருக்கின்றது. நீண்ட காலமாக பாவிக்காததனால் அவற்றை பாரியளவில் புனர்நிர்மாணங்கள் செய்ய வேண்டியுள்ளது.

 திருகோணமலை பெற்றோலியம் டெர்மினல்ஸ்  (Trinco Petrolium Terminal ltd) எனும் நிறுவனத்தினாலேயே திருகோணமலை எண்ணைக்குதங்கள் நிர்வகிக்கப்படுகின்றது. 2022ல் இடப்பட்ட ஒப்பந்தம் ஒரு கூட்டு ஒப்பந்தம் என்பதால் CPC க்கு 51 வீதமும்,  LIOC க்கு 49 வீதம் என்ற அடிப்படையில் முதலிடும் நோக்கிலேயே கைச்சாத்திடப்பட்டது. இதற்கான முதலீடு 31 மில்லியன் டொலர்களாகும். ஆனால் அது முழுமையாக கிடைக்கப் பெற்றதா  என்ற எந்த தகவலும்  தெரியாது என முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு கொடுத்தமை தொடர்பில் அதனை இரத்துச் செய்ய கோரி தேசிய பிக்குகள் முன்னனியின் செயலாளர் வாகமுல்ல உதித்த தேரர், சட்டத்தரணி சுனில் வட்டகல  ஊடாக  கடந்த ஜனவரி 7 ஆம் திகதி இந்த அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பில் சட்டத்தரணி சுனில் வட்டகலவிடம் நாம் வினவினோம்,

இந்த செயற்பாடு அரசியலமைப்புக்கு முரணாக உள்ளது. வழக்கு இதுவரை ஆரம்ப கட்டத்திலே இருக்கின்றது. எவ்வித முன்னேற்றமும் இல்லை. அமைச்சரவை மாற்றத்தை காரணம் காட்டி வழக்கு மேலும் பின்தள்ளி போடுகின்ற நிலையிலே இருக்கின்றதாக சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவின் (கோப் )அறிக்கையில் முறையான திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தும் ஏன் அரசாங்கம் அதனை செயற்படுத்தவில்லை  என்ற கேள்வியை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் கேட்ட போது அதற்கான பதில் கிடைக்கவில்லை. மேலும் திருகோணமலை எண்ணெய் குதங்கள் அபிவிருத்தி நடவடிக்கைகள் தாமதம் குறித்து  கேட்டறிய லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தாவை தொடர்பு கொண்டோம் எனினும் பதில் கிடைக்கவில்லை.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.