முஸ்லிம் மாணவிகளின் ஹிஜாப் தொடர்பான வழக்கில் இந்திய உச்சநீதிமன்ற இரு நீதியரசர்களும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். இதனால், இவ்வழக்கு தொடரவுள்ளது.


கர்நடாக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் பலர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் (ஐகோர்ட்), ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியம் இல்லை என்றும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் கடந்த மார்ச் 15 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் இரு நீதியர்கள் முன்னிலையில் கடந்த மாதம் நடைபெற்றது. நீதியரசர்கள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் இந்த மனுக்களை விசாரித்தனர்.

இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

இதில்,  நீதியரசர் ஹேமந்த் குப்தா, மாணவிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார். கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப்பிற்கு விதித்த தடை சரியானது என நீதிபதி ஹேமந்த் குப்தா தீர்ப்பளித்தார்.  ஆனால் மற்றைய நீதியரசர் சுஷாந்த் துலியா கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தார்.

இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பையடுத்து, கூடுதல் நீதியர்கள் கொண்ட குழாமுக்கு இவ்வழக்கை மாற்றுமாறு இந்திய பிரதம நீதியரசரிடம் கோரப்பட்டுள்ளது. அதேவேளை விசாரணை நடக்கும் வரை ஹிஜாப் தடை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.