கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) நிறுவனத்தின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி தின நிகழ்வுகள் நேற்றைய தினம் (16) காலை 09.00 மணி முதல் MLSC கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
MLSC நிறுவனம் மற்றும் சியன ஊடக வட்டம் ஆகியவற்றின் தலைவரும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஆரம்ப நிகழ்வாக முதல் முஸ்லிம் பரீட்சை ஆணையாளர் கஹட்டோவிட்ட (மர்ஹூம்) ஏ.எம்.முஸ்தகீம் நினைவரங்கமாக பிரதேச பாடசாலைகளுக்கு இடையிலான விவாதப்போட்டி இடம்பெற்றது.
இதில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா ம.வி., கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா ம.வி. மற்றும் உடுகொட அறபா ம.வி. ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்டன.
அதனை தொடர்ந்து பேச்சுப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர் எம்.எஸ்.எம்.ஸாபித்தின் பேச்சு இடம்பெற்றதுடன், அவருக்கான பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கலாநிதி ரவூப் ஸெய்ன் தலைமையில் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெற்றது.
இரண்டாவது கட்ட நிகழ்வாக மர்ஹூம் நாஸிர் லெப்பை நினைவரங்கமாக மௌலவி அல்ஹாஜ் இஜ்லான் காஸிமி தலைமையில் மௌலித் மஜ்லிஸ் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மூன்றாவது கட்ட நிகழ்வாக மர்ஹூம் ஷாபி சேர் நினைவரங்கமாக கவிஞர் கிண்ணியா அமீர் அலி தலைமையில் மீலாத் கவியரங்கம் இடம்பெற்றது.
நிகழ்வுகளில் பிரதம அதிதியாக மெலிபன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன தலைவர் அல்ஹாஜ் இல்யாஸ் கரீம் சார்பில் அவருடைய புதல்வர் அல்ஹாஜ் இர்பான் கரீம் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதியாக சிகாமணி ஆமினா முஸ்தபா (தேசிய தலைவர், முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில், கொழும்பு) கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் அல்ஹாஜ் எம்.டி.எம்.இக்பால், முன்னாள் தேர்தல்கள் ஆணையாளரும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினருமான எம்.எம்.மொஹமட், முன்னாள் உதவி பரீட்சைகள் ஆணையாளர் ஏ.எஸ்.மொஹமட் மற்றும் MLSC அங்கத்தவர்கள், உலமாக்கள், பாடசாலை அதிபர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பிரதேச தக்கியாக்கள், ஸாவியாக்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.