உணவுப்பணவீக்கம் கூடிய முதல் 10 நாடுகளின் பட்டியலில் கடந்த செப்டெம்பர் மாதம் 3 ஆவது இடத்திலிருந்த இலங்கை, கடந்த அக்டோபர் மாதம் 6 ஆவது இடத்திற்குச் சென்றிருக்கின்றது.
உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம் உரிய தரவுகளின் அடிப்படையில் கணிப்பிடப்பட்ட ஆண்டுக்கு ஆண்டு சராசரி உண்மை உணவுப்பணவீக்கம் கடந்த செப்டெம்பரில் 30 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது அக்டோபரில் 14 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

கடந்த ஜுன் – செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளினதும் உணவுப்பணவீக்கம், உணவுப்பொருட்களுக்கான கேள்வி மற்றும் நிரம்பல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு அந்நாடுகளின் உணவுப்பாதுகாப்பு நிலை எவ்வாறான மட்டத்தில் உள்ளது என்பதை மதிப்பீடுசெய்து, அதனை அடிப்படையாகக்கொண்டு உலக வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இலங்கை மேற்குறிப்பிட்டவாறான நிலையிலிருப்பதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.

நாடு கடந்த சில மாதங்களாகப் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், உணவு, உணவல்லாப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பினால் வெகுவாக உயர்வடைந்த உணவு மற்றும் உணவல்லாப்பணவீக்கம் என்பன இப்போது மீண்டும் வீழ்ச்சியடைந்துவருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த சில மாதங்களில் உலகநாடுகளில் அவதானிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலையேற்றம், அவற்றுக்கான கேள்வி – நிரம்பல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு உணவுப்பணவீக்கம் கூடிய முதல் 10 நாடுகளின் பட்டியலை உலக வங்கி அதன் அறிக்கையில் உள்ளடக்கியிருக்கின்றது.

அதில் ஆண்டுக்கு ஆண்டு உண்மை உணவுப்பணவீக்கத்தின்படி 68, 36, 32, 15, 15, 14, 14, 14, 12, 10 என்ற சதவீதங்களில் முறையே சிம்பாவே, லெபனான், ஈரான், ஹங்கேரி, கொலம்பியா, இலங்கை, ஜிபூட்டி (வடகிழக்கு ஆபிரிக்காவிலுள்ள தீவு), ருவாண்டா, புர்கினா பாஸோ, கொஸ்டா ரிகா ஆகிய நாடுகள் உணவுப்பணவீக்கம் கூடிய முதல் 10 நாடுகளாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

அதன்படி உணவுப்பணவீக்கம் கூடிய நாடுகளின் பட்டியலில் (உணவுப்பாதுகாப்பு குறைவான நாடுகள்) கடந்த செப்டெம்பரில் 3 ஆவது இடத்திலிருந்த இலங்கை, தற்போது உணவுப்பணவீக்கம் படிப்படியாகக் குறைவடைந்து வருவதன் விளைவாகக் கடந்த அக்டோபரில் 6 ஆவது இடத்திற்குச் சென்றிருக்கின்றது.

அதேவேளை ஆண்டுக்கு ஆண்டு பெயரளவிலான உணவுப்பணவீக்க மதிப்பீட்டின் பிரகாரம்  இலங்கை (86 சதவீதம்) 4 ஆவது இடத்திலிருப்பதுடன் முதல் 5 இடங்களில் முறையே சிம்பாவே, லெபனான், வெனிசூலா, துருக்கி மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.