மத்திய சிறைகளில் இருந்து விடுதலையான முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரும் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைப்பு மத்திய சிறை வளாகத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

திருச்சி மத்திய சிறைகளில் இருந்து விடுதலையான முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரும் திருச்சியில் உள்ள வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.மத்திய சிறை வளாகத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் என்ற பெயரில் தனியாக ஒரு வளாகம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவது வழக்கம். இதன்படி, இங்கு இதுவரை, சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் சுமார் 75 பேர் உள்பட நைஜீரியா, பல்கேரியா, வங்கதேசம், இந்தோனேசியா நாட்டினர் என்று சுமார் 130 வெளிநாட்டினர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கி உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்படும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.

இங்கு தங்கி இருக்கும் வெளிநாட்டினருக்கு தமிழக அரசு சார்பில் தினசரி உணவுப்படியாக ரூ.175 வழங்கப்படுகிறது. சிறப்பு முகாமிற்குள் சமைத்து உண்ணும் வசதி, வெளியில் இருந்து தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவு வகைகளை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது. மேலும் செல்போன் பயன்படுத்தும் வசதி உள்ளிட்ட சில வசதிகளும் அனுமதிக்கப்பட்டு இருந்தன. சமீபத்தில் இங்கு அடைக்கப்பட்டு இருந்த இலங்கை தமிழர் ஒருவர் கேரளாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறி என்.ஐ.ஏ. அதிகாரிகள் இங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது இங்குள்ள வெளிநாட்டினர் சிலர் லேப்டாப், செல்போன் போன்றவை மூலம் உறவினர்கள் மட்டுமின்றி வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சிறப்பு முகாமில் அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்தவர்கள் பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

அன்று முதல் இன்று வரை சிறப்பு முகாம் வளாகத்திற்குள் இருப்பவர்கள் செல்போன் கேட்டும், சிறப்பு முகாமில் இருக்கும் காலத்தை வழக்கின் தண்டனைக் காலமாக கருத வேண்டும். வழக்கு முடிந்தவர்களை விடுதலை செய்து, வழக்கமான முகாம், வெளிப்பதிவு, இலங்கைக்கு என அவர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இவர்களில் பலர் உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி என பல வடிவங்களில் அடிக்கடி போராட்டங்களை நடத்துகிறார்கள். தற்போது கூட அவர்களின் காத்திருப்பு போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் இருந்தும், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் சென்னை புழல் சிறையில் இருந்தும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு நேற்று நள்ளிரவு அழைத்துவரப்பட்டனர். இதில் சனிக்கிழமை இரவு 11.15 மணி அளவில் முருகனும், சாந்தனும், இரவு 11.20 மணி அளவில் ஜெயக்குமாரும், ராபர்ட் பயாசும் சிறப்பு முகாமுக்கு வந்தனர். அவர்களின் வருகையை வருவாய்த்துறையின் சார்பில் சிறப்பு முகாமின் பொறுப்பு அதிகாரியான துணை ஆட்சியர் வேலுமணி முறைப்படி பதிவு செய்தார். பின்னர் அவர்கள் அங்குள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

முன்னதாக இவர்கள் 4 பேரும் இங்கு அழைத்து வரப்பட்டதையொட்டி, திருச்சி மத்திய சிறை வளாகத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில், ஸ்ரீதேவி தலைமையில் உதவி கமிஷனர்கள் சுந்தரமூர்த்தி, சுரேஷ்குமார் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் தங்க வைக்கப்பட உள்ள அறைகளில் ஜன்னல்கள் கதவு இல்லாததால் அட்டைகள் கொண்டு அடைக்கப்பட்டன. 

இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: திருச்சியில் உள்ளது இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு முகாம் அல்ல. குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்டு, பிணையில் இருக்கும் வெளிநாட்டினரை தங்க வைத்துள்ள முகாம். இதில், இலங்கை மட்டுமின்றி பிற நாட்டினரும் உள்ளனர். பிணையில் வெளிவரும் வெளிநாட்டினர் தப்பிச் சென்று விடுவதால், இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு வழக்கு முடிந்திருந்தாலும் வேறு வழக்கு முடியாமல் இருக்கும். ஆகையால் அவர்கள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். வழக்கு முடிந்த சிலரை விடுதலை செய்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன்படி முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் அவர்கள் வெளிநாட்டினர் என்பதால் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சொந்த நாட்டுக்கு செல்வதும், வெளிநாட்டினருக்கான பதிவு செய்து இந்தியாவில் தங்கி இருப்பதும், இலங்கை தமிழர் நலவாழ்வு முகாமுக்கு செல்வதும் அவர்களின் விருப்பம். உள்துறை அனுமதி கிடைத்ததும் விரைவில் அவர்கள் இங்கிருந்து விடுவிக்கப்படுவார்கள். சிறப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுதலை செய்வது குறித்து உள்துறையும், மாவட்ட ஆட்சியரும் தான் முடிவு செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

(திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.