றிப்தி அலி
அபிவிருத்திக்கான கட்டார் நிதியத்தினால் 4.7 தொன் அவசர மருத்துவ உதவி இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை பிரிவிற்கு தேவையான கட்டில்கள், எக்ஸ்ரே இயந்திரங்கள், நெபுலைசர் போன்ற இலங்கை மக்களுக்கு மிகவும் அத்தியவசியமான மருத்துவ உபகரணங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாஸிம் பின் ஜாபிர் ஜாஸிம் ஆல் ஸரூரினால் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிடம் கடந்த செவ்வாய்க்கிழமை (01) சுகாதார அமைச்சில் வைத்து இந்த மருத்துவ உதவி உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக சந்தரகுப்தா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்த்தன மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ உதவிகளுக்கான இணைப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு உதவு நோக்கிலேயே இந்த மருத்துவ உதவி அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவ உதவி இலங்கையின் சுகாதாரத் துறையினை மேம்படுத்துவதுடன் சுகாதார அமைச்சின் சுமையினையும் குறைக்கும்.