தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அபாரமான ஆட்டத்தால் வெற்றிபெற்று கிரிக்கெட் உலகை மீண்டும் ஒருமுறை வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது நெதர்லாந்து.

இந்தப் போட்டியின் முடிவால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து தென்னாப்பிரிக்கா வெளியேறி இருப்பதுடன், இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.

முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 158 ரன்கள் எடுத்த நிலையில் அந்த ரன்களை எடுக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி சுருண்டது. 13 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.

சிறப்பான பேட்டிங், அற்புதமான பீல்டிங், கிரேட் கேட்ச்கள் என நெதர்லாந்து அணி ஆட்டம் முழுவதுமே ஆக்கிரமித்திருந்தது.

போட்டியின் முடிவில் பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா, 'இது ஜீரணிக்க முடியாத தோல்வி' என்று கூறினார். அது உண்மைதான் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் மிகப்பெரிய அதிர்ச்சிகளில் ஒன்றாகவே இது கருதப்படுகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் நெதர்லாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை. ஆனால் அடுத்த உலகக் கோப்பை டி20 போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றிவிட்டது. அதாவது இந்த ஆண்டைப்போல இனி தகுதிச் சுற்றில் ஆட வேண்டியதில்லை.

போட்டியில் என்ன நடந்தது?

தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் முதலில் பேட்டி செய்தது நெதர்லாந்து. தொடக்க ஆட்டக்காரர்கள் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சிறப்பாகச் சமாளித்து ரன்குவித்தனர்.

அணியின் முதல் நான்கு வீரர்களுமே கணிசமாக ரன் எடுத்தனர். தென்னாப்பிரிக்காவின் முக்கியப் பந்துவீச்சாளர்களான ரபாடா, லுங்கி நிகிடி ஆகிய இருவரின் பந்துகளையும் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினர். இறுதியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்களை எடுத்தது.

நெதர்லாந்தின் காலின் ஆக்கர்மன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 41 ரன்களை எடுத்தார்.

இந்த இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்க அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்தினார்கள். பீல்டர்கள் சில அற்புதமான கேட்ச்களைப் பிடித்தார்கள். அதனால் தென்னாப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அந்த அணி 13 ரன்களில் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரன்ரேட்டும் பாகிஸ்தானை விடச் சரிந்தது.

வங்கதேசம் - பாகிஸ்தானுக்கு வாழ்வா, சாவா போட்டி

தென்னாப்பிரிக்க அணி போட்டியில் இருந்து வெளியேறிருப்பது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளுக்குமே சாதகமாக அமைந்திருக்கிறது. இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், வங்கதேசமும், பாகிஸ்தானும் வெற்றி பெற்றாலே போதும். ரன் ரேட்டை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

அதே நேரத்தில் மழையால் ஆட்டம் ரத்தானால் அது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்துவிடும். ஏனென்றால் பாகிஸ்தானும், வங்கதேசமும் 5 புள்ளிகளைப் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அந்தச் சூழலில்கூட 5 புள்ளிகளைப் பெற்றிருக்கும் தென்னாப்பிரிக்கா ரன்ரேட்டில் குறைந்துவிட்டதால் அரையிறுதிக்குச் செல்ல முடியாது.

உண்மையில் வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான போட்டி அவ்விரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போராட்டமாக இருக்கும். வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

ஞாயிற்றுக் கிழமையன்று டி20 உலகக் கோப்பை குரூப்-2 பிரிவில் நடக்கும் இந்த மூன்று போட்டிகளுமே அரையிறுதிக்குச் செல்லும் அணிகளைத் தீர்மானிப்பவையாகவே கருதப்பட்டன.

இந்தப் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய 5 அணிகளுக்கும் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டதால் இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் உள்ளவையாக கருதப்பட்டன. முதல்போட்டி முடிவடைந்த நிலையி்ல் வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது

இந்தப் பிரிவில் இருக்கும் 6 அணிகளுக்குமே இவை தங்களது கடைசிப் போட்டிகள். வெற்றி தோல்விகள் மாத்திரமல்லாமல் மழையால் ஆட்டங்கள் ரத்தாவதும்கூட அணிகளின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும் என்ற நிலை இருந்தது.

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்லுமா?


பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்திருக்கிறது. அதனால் 4 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அணியின் ரன்ரேட் 1.117. அடுத்ததாக அந்த அணி வங்கதேசத்துடன் மோத இருக்கிறது.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அந்தப் போட்டி தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணி 6 புள்ளிகளைப் பெறும். இதன் மூலம் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
இந்தியாவுக்கு ஜிம்பாப்வேயுடனான போட்டி எந்த அளவு முக்கியம்?

நெதர்லாந்து அணியுடன் தென்னாப்பிரிக்க தோற்றுவிட்டதால் இந்திய அணி ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது.

இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. ஜிம்பாப்வேயுடனான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கி நடக்க இருக்கிறது.
வங்கதேசத்துக்கு வாய்ப்பிருக்கிறதா?

வங்கதேச அணி இப்போது 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்தாக பாகிஸ்தானுடன் ஆடவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்தியா - ஜிம்பாப்வே போட்டி


இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கும் மெல்போர்ன் மைதானத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. ஞாயிற்றுக்கிழமை என்பதும் இந்தியாவுக்கு இது முக்கியமான போட்டி எனக் கருதப்பட்டதுமே இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆனால் மெல்பர்ன் மைதானத்தைப் பற்றிய ஒரு சிக்கல் இருக்கிறது. இதுவரை நடந்த 5 போட்டிகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்துப்போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஏதேனும் நடந்து விடக்கூடாது என இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயினும் இந்திய அணி தோற்றாலும் அதன் அரையிறுதி வாய்ப்பு பாதிக்கப்படப்போவதில்லை. காரணம், அதற்கு சற்று முன்பாக நடந்து முடியும் பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான போட்டியின் முடிவில் எந்த அணியும் 6 புள்ளிகளுக்கு மேல் எடுக்கப் போவதில்லை.

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த வரலாறு உண்டு. ஆனால் டி20 உலகக் கோப்பை போட்டி ஒன்றில் இந்தியாவும் - ஜிம்பாப்வேயும் மோதுவதும் இதுவே முதல்முறை.

இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரைப் போல ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ரஸாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மாவும், துணை கேப்டன் கே.எல். ராகுலும் சிறப்பான தொடக்கத்தை அளிக்கத் தவறிவிடுகிறார்கள். புள்ளி விவரங்களின்படி இந்திய அணியின் தொடக்க இணை இந்தத் தொடரில் அடித்த சராசரி ரன்கள் 13 மட்டுமே. 

BBC Tamil

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.