இலங்கை அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்!

இலங்கை அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்!

 இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் 60 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது.

 கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் இப்ராஹிம் சத்ரான் 106 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

 ரஹ்மட் சாஹ் 52 ஓட்டங்களையும், ரஹ்மானுல்லா குர்பாஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

 பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸங்க 85 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 66 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஃபசல் ஹக் 4 விக்கெட்டுக்களையும், குல்பதின் நயீப் 3 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.
யாமின் அஹ்மத்ஸாய் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக 106 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட இப்ராஹிம் சத்ரான் தெரிவு செய்யப்பட்டார்.

 இந்த வெற்றியை தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

கருத்துகள்