காதலிக்கு பிறந்த பெண் குழந்தையை 3 இலட்சத்திற்கு (இந்திய ரூபா) விற்பனை செய்த கார் சாரதி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் 26 வயதான கார் சாரதியான சந்திரசேகர் என்பவர்  அதே மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைக் காதலித்துள்ளார். திருமணம் குறித்து பேசியபோது இருவரது வீடுகளிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறி சென்னை டி-நகர் சீரணிபுரத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து திருமணம் செய்துகொள்ளாமல் கணவன், மனைவி போல சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது சந்திரசேகருக்கு பிடிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொண்டதை அறிந்தால் உறவினர்களும், நண்பர்களும் வேறு வகையில் பேசுவார்கள். எனவே, நாம் இந்த குழந்தையை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு முறைப்படி திருமணம் செய்து கொண்ட பின்னர் வேறு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் எனக் காதலியிடம் சந்திரசேகர் தெரிவித்த நிலையில், அதற்கு அப்பெண் சம்மதிக்கவில்லை

ஆனால், காதலியை வற்புறுத்தி சம்மதிக்க வைத்து, ஈரோட்டில் குழந்தை இல்லாத தம்பதிக்கு, இடைத்தரகர் மூலம் ரூ.3 இலட்சத்துக்கு குழந்தையை சில மாதங்களுக்கு முன்னர் விற்றுள்ளனர். இருந்தாலும், அப்பெண் தனது குழந்தை ஞாபகமாகவே இருந்துள்ளார். விற்ற குழந்தையை மீண்டும் வாங்கி வரும்படி சந்திரசேகரிடம் அடிக்கடி கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சந்திரசேகர் காதலியைப் பிரிந்து, வேறு ஒரு பெண்ணை திருமணம்செய்து கொண்டுள்ளார். பெற்ற குழந்தை விற்கப்பட்டதோடு, காதலனும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பிரிந்து சென்று விட்டதால் அப்பெண் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளார்.

இதுகுறித்து, தேனாம்பேட்டை அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் 6 மாதங்களுக்கு முன் புகார் அளித்தார். ஆனால், பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, அப்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதிகள், குழந்தையை மீட்டு, தாயிடம் கொடுப்பதோடு குழந்தையை விற்பனை செய்தவர்கள், துணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் பொலிஸ் நிலைய ஆய்வாளர் தலைமையிலான பொலிஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், குழந்தை ஈரோட்டைச் சேர்ந்த, தம்பதிக்கு ரூ.3 இலட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அந்த தம்பதி குழந்தையை நல்ல முறையில் வளர்த்து வருவதால் உடனடியாக குழந்தையை அவர்களிடமிருந்து பிரித்தால் குழந்தை பாதிக்கப்படும் என்பதால் குழந்தையைத் திரும்ப ஒப்படைக்க பொலிஸார் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.

மேலும், குழந்தையை விற்பனை செய்ததாக சந்திரசேகர், இடைத் தரகராக செயற்பட்ட திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் எனக் கூறப்படும் 14 வயதான பிரான்சிஸ், ஈரோடு மாவட்டம், ஒட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த 44 வயதான தேன்மொழி  ஆகிய 3 பேரைக் கைது செய்த நிலையில்,. தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.