புதிய முதலீடுகள் குறித்து கலந்துரையாட ஜப்பானிய உயர்மட்ட குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தது !

புதிய முதலீடுகள் குறித்து கலந்துரையாட ஜப்பானிய உயர்மட்ட குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தது !

இலங்கையில் சாத்தியமான புதிய முதலீடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக எஸ்.எல்.டி.பியின் தலைவரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளருமான கலாநிதி அன்வர் எம் முஸ்தபாவின் ஒருங்கிணைப்பில் ஜப்பானிய உயர்மட்ட தொழில்முனைவோர் குழுவொன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தது.

தூதுக்குழுவில் ஜப்பானின் அரச குடும்ப உறுப்பினரும் டோக்கியோ பெருநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான திருமதி சைகோ அயுமி மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு புகழ்பெற்ற சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் ஜப்பானுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவால் வழங்கப்பட்ட ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனாவுக்கு ஜப்பானில் நினைவுச்சின்னத்தை நிர்மாணித்த தொழில்முனைவோர் குடும்பத்தைச் சேர்ந்த திரு கமிசகமோட்டோ யுஜி மற்றும் திருமதி கமிசகமோட்டோ ஹிசாகோ ஆகியோர் பிரதமருடனான இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு ஜப்பானுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், விவசாயம், மீன்பிடி, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், மருந்து மற்றும் விருந்தோம்பல் தொழில் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்யுமாறு ஜப்பான் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார். இருதரப்பு உறவுகளை மேலும் ஆழமாக்குவதற்கும் விரிவுபடுத்துவதற்குமான வாய்ப்புகளை ஆராய்வதற்கு இலங்கை திறந்திருப்பதாகவும், அதிக வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பால் மட்டுமல்லாமல், ஜப்பானிய மொழி கற்பித்தல் உள்ளிட்ட கல்வித் துறை பற்றியும் அக்குழுவுக்கு விளக்கினார். மேலும் ஜப்பானிய நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதாக தூதுக்குழுவினர் பிரதமருக்கு உறுதியளித்தனர்.

ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட்ட ஜே ஆர் ஜெயவர்த்தனா பற்றிய புத்தகத்தை திரு கமிசகமோட்டோ பிரதமரிடம் வழங்கினார். பின்னர் மறைந்த ஜனாதிபதி தொடர்பிலான புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் பேரன் பிரதீப் ஜெயவர்த்தனவிடமும்  கையளித்தார்.

இந்த தூதுக்குழுவில் சடோஷ் ரியோசுகே, ஜைடோ ஆயா, யமடா ஹிரோகோ, நகாடே ரியோஷின், நோஸ் ஹிரோஷி, செட்டோ தட்சுஹிகோ, கவாய் தோஷிஹிகோ, மியுரா யோசுகே, சுசுகி நட்சுவோ, டான்கா டாரோ, சடோ இச்சிரோ மற்றும் இகேடா கவுட்சு ஆகியோருடன் பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன மற்றும் இந்த சந்திப்புக்கு காரணகர்த்தாவாக அமைந்த எஸ்.எல்.டி.பியின் தலைவரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளருமான கலாநிதி அன்வர் எம் முஸ்தபா, கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளர் சபை உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நூருல் ஹுதா உமர்

கருத்துகள்