ஆசிய கண்டத்தில் உலகக் கிண்ணப் போட்டியை நடத்திய முதலாவது நாடுகள் என்ற பெருமையை தென் கொரியாவும் ஜப்பானும் பெற்றுக்கொண்டன. அத்துடன் அப்போது 72 வருட வரலாற்றைக் கொண்டிருந்த உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இரண்டு நாடுகள் கூட்டாக நடத்தியது அதுவே முதல் தடவையாகும்.

கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட பரந்த உலகில் கால்பந்தாட்ட விளையாட்டை விரிவுபடுத்தி சந்தைப்படுத்தும் முயற்சியாக உலகக் கிண்ணப் போட்டியை இரண்டு நாடுகளில் கூட்டாக நடத்த பீபா தீர்மானித்திருந்தது.

17. பதினேழாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - இரண்டு நாடுகளில் கூட்டாக நடத்தப்பட்ட முதலாவது உலகக் கிண்ணம்

மூன்று கண்டங்களில் சம்பியனான முதலாவது நாடு பிரேஸில்

பதினேழாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி தென் கொரியாவிலும் ஜப்பானிலும் 2002இல் கூட்டாக நடத்தப்பட்டது. இதன் காரணமாக உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக 3 நாடுகள் நேரடியாக இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன. வரவேற்பு நாடுகளாக தென் கொரியாவும் ஜப்பானும் நடப்பு சம்பியனாக பிரான்ஸும் நேரடியாக இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

தென் கொரியாவில் 10 நகரங்களிலும் ஜப்பானில் 10 நகரங்களிலும் 2002 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன.

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் 199 நாடுகள் பங்குபற்றின. அவற்றிலிருந்து 29 நாடுகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

சீனா, ஈக்வடோர், செனகல், ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றன.

1998இல் போன்றே எட்டு குழுக்களில் 32 அணிகள் பங்குபற்றிய முதல் சுற்று நிறைவில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் தலா 2 அணிகள் வீதம் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

1998இல் உலக சம்பியனான பிரான்ஸ், ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டியிலும் சம்பியனாகி இருந்ததால் 2002இலும் சம்பியனாவதற்கு அனுகூலமான அணியாக கருதப்பட்டது. ஆனால், செனகல், டென்மார்க் ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்த பிரான்ஸ், உருகுவேயுடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டு முதல் சுற்றுடன் நாடு திரும்பியது.

அதேபோன்று மற்றொரு முன்னாள் உலக சம்பியன் ஆர்ஜன்டீனா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளும் முதல் சுற்றுடன் நடையைக் கட்டின.

2002 உலகக் கிண்ணப் போட்டியில் தென் கொரியா அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி அரை இறுதிவரை முன்னேறியிருந்தது.

போலந்து, போர்த்துக்கல் ஆகிய அணிகளை முதல் சுற்றில் வெற்றிகொண்ட தென் கொரியா, ஐக்கிய அமெரிக்காவுடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டு நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

2ஆவது சுற்றில் இத்தாலியை மேலதிக நேரத்தில் 2 - 1 என்ற கோல்கள் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த தென் கொரியா, கால் இறுதியில் ஸ்பெய்னை 5 (0) - 3 (0) என்ற பெனல்டி முறையில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

ஆனால் அரை இறுதியில் ஜேர்மனியிடம் 0 - 1 என்ற கோல் அடிப்படையில் தோல்வி அடைந்தது.

மற்றைய அரை இறுதியில் துருக்கியின் கடும் சவாலை முறியடித்த பிரேஸில் 1 - 0 என வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதனை அடுத்து ஜேர்மனியும் பிரேஸிலும் இறுதிப் போட்டியில் மோதின. உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அப்போதைய 70 வருட வரலாற்றில் ஜேர்மனியும் பிரேஸிலும் ஒன்றையொன்று எதிர்த்தாடியது அதுவே முதல் தடவையாகும்.

அப் போட்டியில் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5ஆவது தடவையாக பிறேஸில் சம்பியனானது. இதன் மூலம் 5 தடவைகள் உலக சம்பியனான முதலாவது நாடு  மற்றும் 3 கண்டங்களில் சம்பியனான முதலாவது நாடு என்ற இரட்டை வரலாற்றுச் சாதனையை பிரேஸில் படைத்தது.

பங்குபற்றிய நாடுகள் 32: ஆர்ஜன்டீனா, பெல்ஜியம், பிரேஸில், கெமறூன், சீனா, கொஸ்டா ரிக்கா, குரோஏஷியா, டென்மார்க், ஈக்வடோர், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, நைஜீரியா, பரகுவே, போலந்து, போர்த்துக்கல், அயர்லாந்து, ரஷ்யா, சவூதி அரேபியா, செனகல், ஸ்லோவேனியா, தென் ஆபிரிக்கா, ஸ்பெய்ன், சுவீடன், டியூனிசியா, துருக்கி, ஐக்கிய அமெரிக்கா, உருகுவே.

18. பதினெட்டாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - இத்தாலி நான்காவது தடவையாக உலக சம்பியனானது

பதினெட்டாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி ஜேர்மனியின் 12 நகரங்களில் 2006 ஜூன் 9ஆம் திகதியிலிருந்து ஜூலை 9ஆம் திகதிவரை நடத்தப்பட்டது.

1989இல் பேர்லின் சுவர் தகர்க்கப்பட்டு ஒரு வருடம் கழித்து கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் இணைந்த பின்னர் ஜேர்மனியில் நடைபெற்ற 2006 உலகக் கிண்ணப் போட்டி அந் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

2006 உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்கு முன்னோடியாக நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் 198 நாடுகள் பங்குபற்றின. 2002 உலகக் கிண்ணப் போட்டியுடன் வரவேற்பு நாட்டுக்கு மாத்திரமே இறுதிச் சுற்றில் நேரடியாக பங்குபற்ற முடியும் என்ற தீர்மானம் பீபாவினால் தீர்மானிக்கப்பட்டது. இதன் காரணமாக 2002இல் சம்பியனான பிரேஸிலும் தென் அமெரிக்க வலயத்திற்கான தகதிகாண் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டது.

வரவேற்பு நாடான ஜேர்மனியுடன் தகுதிகாண் சுற்றின் மூலம் தெரிவான 31 நாடுகள் உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன. அவற்றில் அங்கோலா, கானா, ஐவரி கோஸ்ட், டோகோ, ட்ரினிடாட் அண்ட் டுபாகோ, யூக்ரெய்ன், செக் குடியரசு ஆகிய நாடுகள் முதல் தடவையாக இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

இந்த 9 அணிகளில் பிரபல்யம் குன்றிய கானா, யூக்ரெய்ன் ஆகிய இரண்டு அணிகளும் நொக் அவுட் சுற்றுவரை முன்னேறியிருந்தன. யூக்ரெய்ன் கால் இறுதிவரை முன்னேறி இத்தாலியிடம் 0 - 3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.

அதனைத் தொடர்ந்து அரை இறுதியில் ஜெர்மனியை எதிர்த்தாடிய இத்தாலி 2 - 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

மறுபக்கத்தில்  கால்  இறுதியில் பிரேஸிலையும் அரை இறுதியில் போர்த்துக்கலையும் 1 - 0 என்ற ஒரே கோல் எண்ணிக்கையில் வெற்றிகொண்ட பிரான்ஸ் இறதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இறுதிப் போட்டியின் 7ஆவது நிமிடத்தில் ஸினேடின் ஸிடேன் போட்ட கோல் பிரான்ஸை முன்னிலையில் இட்டது. ஆனால், அடுத்த 12 நிமிடங்களில் இத்தாலி சார்பாக மார்க்கோ மெட்டராஸி கோல் நிலையை சமப்படுத்தினார்.

அதன் பின்னர் 90 நிமிட நிறைவிலும் மேலதிக நேர நிறைவிலும் இரண்டு அணிகளாலும் வெற்றி கோலை போட முடியாமல் போனது.

இதனை அடுத்து மத்தியஸ்திரினால் அமுல் படுத்தப்பட்ட சமநிலை முறிப்பு பெனல்டி முறையில் 5 - 3 என வெற்றிபெற்ற இத்தாலி 4ஆவது தடவையாக உலக சம்பியனானது. இதன் மூலம் பிரேஸிலுக்குப் பின்னர் நான்கு தடவைகள் சம்பயினான இரண்டாவது நாடு என்ற பெருமையை இத்தாலி பெற்றுக்கொண்டது.

ஹீரோவிலிருந்து ஸீரோவான ஸிடேன்

1998 உலகக் கிண்ணப் போட்டியில் பிரான்ஸை உலக சம்பியன் தரத்திற்கு உயர்த்தி ஹீரோவான ஸினேடின் ஸிடேன் 8 வருடங்கள் கழித்து வெறும் ஸீரோவானார்.

இத்தாலிக்கு எதிரான இறுதிப் போட்டியின் மேலதிக நேரத்தில் 110ஆவது நிமிடத்தில் இத்தாலியின் பின்கள வீரர் மார்க்கோ மெட்டராஸி வீரர் ஏதோ முணுமுணுக்க அதனால் ஆத்திரம் அடைந்த ஸிடேன் அவரது நெஞ்சில் தனது தலையால் பலமாக முட்டி கீழே வீழ்த்தினார்.

இதனை பிரதான மத்தியஸ்தர் கவனிக்காதபோதிலும் உதவி மத்தியஸ்தர் அதனைக் கண்டு உடனடியாக பிரதான மத்தியஸ்தருக்கு அறிவித்தார். இதனை அடுத்து ஸினேடின் ஸிடேனுக்கு நேரடி சிவப்பு அட்டையை மத்தியஸ்தர் காட்டி அவரை அரங்கைவிட்டு வெளியேற்றினார்.

பங்குபற்றிய நாடுகள் 32: அங்கோலா, ஆர்ஜன்டீனா, அவுஸ்திரேலியா, பிரேஸில், கொஸ்டா ரிக்கா, ஐவரி கோஸ்ட், குரோஏஷியா, செக் குடியரசு, ஈக்வடோர், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கானா, ஈரான், இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, தெர்லாந்து, பரகுவே, போலந்து, போர்த்துக்கல், சவூதி அரேபியா, சேர்பியா அண்ட் மொன்டேநீக்ரோ, ஸ்பெய்ன், சுவீடன், சுவிட்சர்லாந்து, டோகோ, ட்ரினிடாட் அண்ட் டுபாகோ, டியூனிசியா, யூக்ரெய்ன், ஐக்கிய அமெரிக்கா.

19. பத்தொன்பதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - தென் ஆபிரிக்காவில் முதலாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம்

ஸ்பெய்ன் முதல் தடவையாக சம்பியனானது

பத்தொன்பதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி முதல் தடவையாக தென் ஆபிரிக்காவில் அரங்கேற்றப்பட்டது. இதன் மூலம் ஐந்து கண்டங்களிலும் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் அரங்கேறியிருந்தது.

தென் ஆபிரிக்காவின் 10 நகரங்களில் 19ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் 2010 ஜூன் 11ஆம் திகதியிலிருந்து ஜூலை 11ஆம் திகதிரை நடைபெற்றது. இறுதிச் சுற்றுக்கு முன்னோடியாக ஐந்து கண்டங்களிலும் நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் முதல் தடவையாக 200க்கும் மேற்பட்ட நாடுகள் பங்குற்றின. மோத்தமாக 204 நாடுகள் தகதிகாண் சுற்றில் பங்குபற்றியன.

போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்ற வகையில் தென் ஆபிரிக்கா நேரடியாக இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றது. தகுதிகான் சுற்றின் மூலம் இறுதிச் சுற்றுக்கு தெரிவான 31 நாடுகளில் ஸ்லோவேக்கியா, சேர்பியா ஆகியன அறிமுக அணிளாக இடம்பெற்றன.

1994 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்த மொரோக்கோ விண்ணப்பித்த போதிலும் 7 - 10 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் அந்த வாய்ப்பை ஐக்கிய அமெரிக்கா தனதாக்கிக்கொண்டிருந்தது. எனினும் 2010இல்  ஆபிரிக்கக் கண்டத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அமைய தென் ஆபிரிக்காவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. எகிப்து  , மோரோக்கோ ஆகிய நாடுகளும் விண்ணப்பித்தபோதிலும் அவற்றுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பிரேஸில். ஜேர்மனி,  ஆர்ஜன்டீனா, ஸ்பெய்ன் ஆகிய நான்கு நாடுகளில் ஒன்று சம்பியனாகும் என அனுமாணிக்கப்பட்டது. ஆர்ஜன்டீனாவுக்கு மரடோனா பயிற்சி அளித்ததுடன் அவ்வணியில் லயனல் மெஸி இடம்பெற்றார்.

ஆர்ஜன்டீனா திறமையாக விளையாடிய போதிலம் கால் இறுதியில் ஜேர்மனியிடம் 0 - 4 என தோல்வி அடைந்து வெளியேறியது.

முதலாவது சுற்றில் தனது ஆரம்பப் போட்டியில் முற்றிலும் எதிர்பாராத விதமாக சுவிட்சர்லாந்திடம் 0 - 1 என தோல்வி அடைந்த ஸ்பெய்ன் அதன் பின்னர் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றிபெற்று முதல் தடவையாக உலக சம்பியனானது.

கால் இறுதியில் பரகுவேயை 1 - 0 எனவும் அரை இறுதியில் ஜேர்மனியை 1 - 0 எனவும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட ஸ்பெய்ன் தகுதிபெற்றிருந்தது.

மறுபுறத்தில் கால் இறுதியில் பிரேஸிலை 2 - 1 எனவும் அரை இறுதியில் உருகுவேயை 3 - 2 எனவும் வெற்றிகொண்ட நெதர்லாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மிகவும் விறுவிறுப்பைத் தோற்றுவித்த இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட வண்ணம் இருந்தன. போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது ஸ்பெய்னும் நெதர்லாந்தும் கோல் எதனையும் போட்டிருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து ஆட்டம் மேலதிக நேரம்வரை நீடிக்கப்பட்டது. மேலதிக நேரத்தின் இரண்டாவது பகுதியில் 115ஆவது நிமிடத்தில் அண்ட்ரெஸ் இனியெஸ்டா போட்ட கோல் ஸ்பெய்னை முதல் தடவையாக உலக சம்பியனாக்கியது.

பங்குபற்றிய நாடுகள் 32: அல்ஜீரியா, ஆர்ஜன்டீனா, அவுஸ்திரேலியா, பிரேஸில், கெமறூன், சிலி, ஐவரி கோஸ்ட், டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கானா, கிரேக்கம், ஹொண்டுராஸ், இத்தாலி, ஜப்பான், வட கொரியா, தென் கொரியா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூஸிலாந்து, நைஜீரியா, பரகுவே, போர்த்துக்கல், சேர்பியா, ஸ்லோவேக்கியா, ஸ்லோவேனியா, தென் ஆபிரிக்கா, ஸ்பெய்ன், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, உருகுவே.

20. இருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - ஜேர்மனிக்கு 4 ஆவது உலக சம்பியன் பட்டம்

இருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி பிரேஸிலின் 11 நகரங்களில் 2014 ஜூன் 12ஆம் திகதியிலிருந்து ஜூலை 13ஆம் திகதியிலிருந்து நடைபெற்றது. பிரேஸிலில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்றது அது இரண்டாவது தடவையாகும். 64 ஆண்டுகளுக்கு முன்னர் 1950இல் பிரேஸிலில் முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்றிருந்தது.

பிரேஸிலில் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதுடன் கட்டுமாணப்பணிகள் மற்றும் விளையாட்டரங்குகளை புனர்நிர்மாணித்தல் ஆகியவற்றில் தாமதம்  ஏற்பட்டது.

புதிய விளையாட்டரங்குகளைக் கட்டுவதற்கும் புனர்நிர்மாணம் செய்வதற்கும் ஏகப்பட்ட பணம் செலவிடப்பட்டதற்கு அந் நாட்டு மக்கள் எடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மரக்கானா விளையாட்டரங்கை மாத்திரம் புனர்நிர்மாணம் செய்வதற்கு 335 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டது.

அத்துடன் கட்டுமானப் பணிகளின்போது இடம்பெற்ற விபத்துக்களில் தொழிலார்கள் பலர் பலியாகினர். இதன் காரணமாக விளையாட்டரங்குகள் நிர்மாணிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வதிவிடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இத்தகைய பிரச்சினைகள் காரணமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் கால்ப்நதாட்டப் பித்துபிடித்த பிரேஸில் நாட்டில் உலகக் கிண்ணப் போட்டிகள் தங்குதடையின்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக பிரேஸில் நேரடியாக இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றது. மற்றைய 31 நாடுகள் தகுதிகாண் சுற்றின்மூலம் தெரிவாகின. தகுதிகாண் சுற்றில் 207 நாடுகள் பங்குபற்றியிருந்தன.

பொஸ்னியா - ஹேர்சிகோவினா  முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றிருந்தது.

எட்டு குழுக்களில் 32 அணிகள் பங்குபற்றிய முதல் சுற்று நிறைவில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் தலா 2 அணிகள் வீதம் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

2014 உலகக் கிண்ணப் போட்டியை முன்னின்று நடத்திய பிரேஸில், தனது சொந்த நாட்டில் வெற்றிபெற்று சம்பியனாகும என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பொதுவாக தென் அமெரிக்க நாடுகள் தங்கள் சொந்த நாட்டில் ஆதிக்கம் செலுத்திவருவதன் காரணமாகவே இந்த எதிர்பார்ப்பு நிலவியது.

மேலும் அமெரிக்க கண்டத்தில் ஐரோப்பிய நாடுகள் உலக சம்பியனானதில்லை. ஆனால் அந்த வரலாற்றை ஜேர்மனி மாற்றி அமைத்தது.

அரை இறுதிப் போட்டியில் பிரேஸிலை 7 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் துவம்சம் செய்த ஜேர்மனி, உலகக் கிண்ண அரை இறுதி வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

மற்றைய அரை இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 4 (0) - 2 (0) என்ற பெனல்டி முறையில் ஆர்ஜன்டீனா வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ஆர்ஜன்டீனா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் அவ்வணி வெற்றிபெற்று சம்பியனாகும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆர்ஜன்டீனாவும் ஜேர்மனியும் சம அளவில் மோதிக்கொண்டதால் ஆட்டம் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை. இதனை அடுத்து மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

ஜேர்மனியின் நட்சத்திர வீரர் மிரஸ்லவ் க்ளோஸுக்கு பதிலாக போட்டியின் 87ஆவது நிமிடத்தில் மாற்றுவிரராக களம் நுழைந்த மரியோ கோட்ஸே 112ஆவது நிமிடத்தில் ஹீரோவானார்.

இடதுகோடியிலிருந்து பரிமாறப்பட்ட பந்தை தனது நெஞ்சினால் கட்டுப்படுத்திய கோட்ஸே, இடது காலால் கோலினுள் புகுத்தி ஜேர்மனியை உலக சம்பியனாக்கினார்.

இதன் மூலம் பிரேஸில், ஸ்பெய்ன் நாடுகளை அடுத்து வேற்றுக்கண்டத்தில் சம்பியனான பெருமையை ஜேர்மனி சம்பாதித்துக்கொண்டது.

பங்குபற்றிய நாடுகள் 32: அல்ஜீரியா, ஆர்ஜன்டீனா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பொஸ்னியா-ஹேர்ஸ்கோவினா, பிரேஸில், கெமறூன், சிலி, கொலம்பியா, கொஸ்டா ரிக்கா, ஐவரி கோஸ்ட், குரோஏஷியா, ஈக்வடோர், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கானா, கிரேக்கம், ஹொண்டுராஸ், ஈரான், இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, நெதர்லாந்து, நைஜீரியா, போர்த்துக்கல், ரஷ்யா, ஸ்பெய்ன், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, உருகுவே.

21, இருபத்தொன்றாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - பிரான்ஸுக்கு 2 ஆவது உலக சம்பியன் பட்டம்

இருபத்தொன்றாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி ரஷ்யாவில் 2018 ஜூன் 14ஆம் திகதியிலிருந்து ஜூலை 15ஆம் திகதிவரை நடைபெற்றது. ரஷ்யாவில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்றது அதுவே முதல் தடவையாகும். வரவேற்பு நாடாக ரஷ்யா இறுதிச் சுற்றில் நேரடியாக விளையாட தகுதிபெற்றது. 210 நாடுகள் பங்குபற்றிய தகுதிகாண் சுற்றிலிருந்து மற்றைய 31 நாடுகள் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

ஐஸ்லாந்து, பணாமா ஆகிய நாடுகள் முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றிருந்தன.

உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக வீடியோ உதவி மத்தியஸ்தர் முறைமை ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பிரதான மத்தியஸ்தரின் தீர்ப்புகள் மீளாய்வுக்கு உட்படுத்தி மாற்றப்படும் நிலை உருவானது. குறிப்பாக பெனல்டி எல்லைக்குள் நிகழும் ஹாண்ட்போல்கள், ஓவ்சைட் நிலைகள் என்பன வீடியோ உதவி மத்தியஸ்தரின் மூலம் தீர்மானிக்கப்பட்டன. அத்துடன் மத்தியஸ்தர் தவறவிடும் சில விடயங்களை தகவல் தொழில்நுட்ப முறை மூலம் உதவி மத்தியஸ்தர்கள் அறிவிக்கும் முறைமையும் ரஷ்யாவில் அறிமுகமானது.

பிரான்ஸுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டியிலேயே முதல் தடவையாக வீடியோ உதவி மத்தியஸ்தர் முறைமை மூலம் பெனல்டி ஒன்று தீர்மானிக்கப்பட்டு பிரான்ஸுக்கு வழங்கப்பட்டது.

போட்டி முறைமையில் மாற்றமின்றி 2018 உலகக் கிண்ண முதல் சுற்று 8 குழுக்களில் லிக் முறையில் நடத்தப்பட்டது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் நொக்-அவுட் சுற்றுக்கு தெரிவாகின.

2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய நாடுகளில் பீபா தரவரிசையில் கடைசி இடத்தில் இருந்த ரஷ்யா, தனது குழுவில் சவூதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளை வெற்றிகொண்டு 3ஆவது போட்டியில் உருகுவேயிடம் தோல்வி அடைந்தது.

எனினும் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்ற ரஷ்யா, இரண்டாம் சுற்றில் ஸ்பெய்னை 4 (1) - 3 (1) பெனல்டி முறையில் வெற்றிகொண்டது. ஆனால் கால் இறுதியில் குரோஏஷியாவிடம் 3 (2) - 4 (2) என்ற பெனல்டி முறையில் தோல்வி அடைந்து வெளியேறியது.

ரஷ்யாவில் சம்பியன் ஆவதற்கு அனுகூலமான அணிகள் என கருதப்பட்ட ஸ்பெய்ன், போர்த்துக்கல். ஆர்ஜன்டீனா ஆகிய அணிகள் 2ஆம் சுற்றுடன் நடையைக் கட்டின.

நடப்பு சம்பியனாக எவ் குழுவில் இடம்பெற்ற ஜெர்மனி மிக மோசமான பெறுபேறுகளுடன் முதல் சுற்றுடன் வெளியேறியது. அக் குழுவில் மெக்சிகோவிடம் 0 -1 என தோல்வி கண்ட ஜேர்மனி, தென் கொரியாவிடம் 2 - 0 என தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டியில் தென் கொரியா உபாதையீடு நேரத்தில் 2 நிமிட இடைவெளியில் 2 கோல்களைப் போட்டு ஜேர்மனியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

2018 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் 8 நாடுகள் மாத்திரமே உலக சம்பயினாகியிருந்த நிலையில் உலகக் கிண்ணத்தை வென்றிராத பெல்ஜியமும் குரொஏஷியாவும் அரை இறுதிகள் வரை முன்னேறியிருந்தன.

ஒரு அரை இறுதியில் பிரான்ஸிடம் 0 - 1 என்ற கோல் அடிப்படையில் பெல்ஜியம் தோல்வி அடைந்து வெளியேறியது. மற்றைய அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட குரோஏஷியா முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.

இறுதிப் போட்டியில் பிரான்ஸும் குரோஏஷியாவம் சந்தித்தபோது இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன. ஆனால், 35 நிமிடங்களின் பின்னர் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த பிரான்ஸ் இறுதியில் 4 - 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று 2ஆவது தடவையாக உலக சம்பியனானது.

பங்குபற்றிய நாடுகள் 32: ஆர்ஜன்டீனா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேஸில், கொலம்பியா, கொஸ்டா ரிக்கா, குரோஏஷியா, டென்மார்க், எகிப்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஐஸ்லாந்து, ஈரான், ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, மொரோக்கோ, நைஜீரியா, பணாமா, பெரு, போலந்து, போர்த்துக்கல், ரஷ்யா, சவூதி அரேபியா, செனகல், சேர்பியா,  ஸ்பெய்ன், சுவீடன், சுவிட்சர்லாந்து, டியூனிசியா, உருகுவே.  (உலகக் கிண்ண வரலாறு 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.