டி20 உலக கோப்பையில் இந்தியா இடம்பெற்றுள்ள பிரிவு-2 இல் அரையிறுதிக்கு செல்லப்போவது யார் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில் பிரிவு ஒன்றிலும் அதே நிலைமை நீடித்திருக்கிறது.

வலுவான அணியாகவும் கோப்பையை வெல்லப் போகவும் அணியாகவும் கருதப்படும் ஆஸ்திரேலியாவின் கனவைச் சிதைத்துப் போட்டுவிட்டார் ரஷீத் கான். அடிலெய்ட் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு மரண பயத்தை அவர் காட்டினார் என்று சமூக ஊடகங்களிள் எழுதுகிறார்கள்.

அது உண்மைதான்.மிக எளிதாகவும் சுமார் 60 ரன்கள் வித்தியாசத்திலும் வென்று அரையிறுதிக்குள் நுழைந்துவிடலாம் என்றுதான் ஆஸ்திரேலிய அணியினர் நினைத்திருக்கும். ஆனால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.

அடிலெய்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவில் பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பெரிய அளவில் அவை கைகொடுக்கவில்லை. நம்பிக்கையோடு அணியில் சேர்க்கப்பட்ட கிரீனும் ஸ்மித்தும் ஒற்றை இலக்க ரன்களைத்தான் எடுத்தார்கள். மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுக்க முடிந்தது.

ஆப்கானிஸ்தானை குறைந்த 106 ரன்களில் வீழ்த்தினால் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்யலாம் என்ற வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு இருந்தது. அல்லது 119 ரன்களுக்குள் சுருட்டினால் இங்கிலாந்துக்கு நிகரான ரன்ரேட்டை கொண்டிருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டது.

ஆனால் ஒரு கட்டத்தில் நிலைமையை தலைகீழாக மாறியிருந்தது. ஆட்டத்தில் வெற்றி பெறுவதுகூட சந்தேகம் என்றாகிவிட்டது. கடைசி 3 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் ஆடியபோது, நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான ரஷீத் கான் பேட்டிங்கில் அதிரடி காட்டினார்.

கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்றபோதும் அவர் தளரவில்லை. அந்த ஓவரிலும் சிக்சரும் பவுண்டரியும் விளாசினார். ஆயினும் 17 ரன்கள்தான் அவரால் எடுக்க முடிந்தது. அதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ரஷீத் கான் 23 பந்துகளில் 48 ரன்களை அடித்திருந்தார்.

ரஷீத் கானின் பேட்டிங் குறித்து புகழ்ந்து பேசிய அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனாதன் ட்ராட், "அவருடைய ஆடுகள நடவடிக்கை உலகம் முழுவதுமுள்ள வீரர்களுக்கு முன்னுதாரணம்" என்று கூறியுள்ளார்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும் அதன் ரன் ரேட் மைனஸ் 0.173 என்ற அளவில் மிகக் குறைவாக இருக்கிறது. ரன் ரேட் அடிப்படையில் மிக உச்சத்தில் இருக்கும் நியூஸிலாந்து ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. இப்போது ஆஸ்திரேலியாவா, இங்கிலாந்தா என்ற நிலையில் 5 புள்ளிகளைப் பெற்றிருக்கும் இங்கிலாந்து தனது கடைசிப் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது.

5 புள்ளிகளைப் பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் வென்றால், ஆஸ்திரேலியாவை விட ரன் ரேட் அதிகமாக இருப்பதால் அரையிறுதிக்குச் சென்றுவிடும். போட்டியில் இலங்கை வென்றாலோ, போட்டி மழையால் கைவிடப்பட்டாலோ அது ஆஸ்திரேலிவுக்குச் சாதகமாக அமைந்துவிடும்.

இலங்கை அணி 4 புள்ளிகளை மட்டுமே பெற்றிருப்பதால் அந்த அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்குச் செல்ல முடியாது. ஆனால் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியா அரையிறுதிக்குச் செல்வதற்கு உதவலாம்.

முதல் பிரிவு ஆட்டம் இன்றுடன் முடிவடையும் நிலையில், குரூப் 2 பிரிவில் இடம்பெற்றிருக்கும் அனைத்து அணிகளும் தங்களது கடைசி ஆட்டங்களை நாளை ஆடுகின்றன. நாளை நடக்கப்போகும் 3 போட்டிகளுமே புள்ளிப் பட்டியலை தலைகீழாகப் புரட்டிப் போடும் ஆற்றல் கொண்டவை.

குரூப்-2 பிரிவில் என்ன நிலைமை

குரூப்-2 இல் பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்திருக்கிறது. அதனால் 4 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அணியின் ரன்ரேட் 1.117. அடுத்ததாக அந்த அணி வங்கதேசத்துடன் மோத இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்தப் போட்டி நடக்கிறது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணி 6 புள்ளிகளைப் பெறும். எனினும் அடுத்து நடக்கும் இந்தியா-ஜிம்பாப்வே ஆட்டத்துக்காக பாகிஸ்தான் காத்திருக்க வேண்டும். இந்தியா தோல்வியடையும் பட்சத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் சென்றுவிடும்.

இந்தியா தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?

இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இப்போதைக்கு பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவை முந்திவிடும் நிலை ஏற்படும்.

அடுத்த ஆட்டத்தில் இந்தியா குறைந்தபட்சம் ஒரு புள்ளியையாவது பெற வேண்டும். அதாவது மழையாவது பெய்ய வேண்டும்.

அதனால் இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமானால் ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையென்றால் அரையிறுதிக்குச் செல்ல முடியாது.

ஜிம்பாப்வேயுடனான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடக்க இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா அணியின் நிலைமை என்ன?

தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வென்றும் ஒரு போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டும் 5 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அந்த அணியின் ரன் ரேட் 1.441. அடுத்ததாக நெதர்லாந்து அணியுடன் மோதுவதால் அந்த அணிக்கு அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே கருதலாம். ஆனால் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் சிக்கல்தான்.

வங்கதேச அணி இப்போது 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்தாக பாகிஸ்தானுடன் ஆடவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான சிறு வாய்ப்புக் கிடைக்கும். எனினும் தற்போது அந்த அணியின் ரன் ரேட் குறைவாக இருப்பதால், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியிருக்கும்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தவிர பிரிவு-2 இல் உள்ள ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகள் இனி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.

அரையிறுதிக்குத் தகுதிபெறப் போவது யார் என்பதைத் தெரிந்து கொள்ள வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.

பிபிசி தமிழ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.