கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும் வகையில், கால்வாய்களை உடனடியாக சுத்தப்படுத்துவதற்கு QR முறைக்கு வெளியே எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

களனி ஆற்றின் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் நேற்று (3) இலங்கை மகாவலி அதிகாரசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இதனைத் தெரிவித்தார். 

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள  நிலைமையை கட்டுப்படுத்த நீர் வடிந்தோடக்கூடிய வகையில் நீர்ப்பாசன திணைக்களம், இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் மற்றும் விவசாய சேவைகள் திணைக்களம் உட்பட ஏனைய அரச நிறுவனங்களும் இணைந்து அவசர வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.  

மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன் இப்பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் காலத்தில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள், அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்கள் அனைத்தும் புனரமைக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக சுமார் ஐந்து வருடங்கள் கடந்தும் மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.

களனி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்காக கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுகள் விரைவில் புனரமைக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் நிஹால் சிறிவர்தன தெரிவித்தார். கடுவெல மற்றும் ஹன்வெல்ல பகுதிகளுக்கு இடையில் புதிய அணைக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், களனி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த மேல் தெரணியகல ஓயா மற்றும் மீ ஓயா என்ற இரண்டு புதிய நீர்த்தேக்கங்களும் நிர்மாணிக்கப்பட உள்ளன. உலக வங்கியின் உதவியுடன் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பால் தற்போது இரண்டு நீர்த்தேக்கங்கள் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த காணியில் வாழும் மக்களை வேறு பிரதேசத்தில் குடியமர்த்துவதற்கான வழிமுறைகளைத் தேடுமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார். 

நீர்ப்பாசன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர, ஷசீந்திர ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான மேஜர் பிரதீப் உந்துகொட, எஸ்.எம்.மரிக்கார், ஜகத் குமார், பிரேமநாத் சி. தொலவத்த, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் சந்தன ஜயலால், நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் நிஹால் சிறிவர்தன மற்றும் அமைச்சுக்கள், கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.