மல்வானை அநாதை நிலையம் மூடப்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலை தொடர்பில், அதன் பழைய மாணவர் சங்கம் விழிப்புணர்வு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

நாளை (06) இடம்பெறவுள்ள இவ்விழிப்புணர்வு நிகழ்வு, மு.ப. 10.00 மணிக்கு மல்வானை அல்முபாரக் மத்திய கல்லூரிக்கு முன்பாக ஒன்றுகூடி மல்வானை அநாதை நிலையத்தை நோக்கி பேரணியாக செல்லவுள்ளதாக, அந்நிலையத்தின் பழைய மாணவர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாகொல, மல்வான முஸ்லிம் அநாதை நிலையத்தின், பழைய மாணவர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

60 வருடங்களை பூர்த்தி செய்துள்ள இலங்கை முஸ்லிம்களின் ஆரம்ப கால அநாதை நிலையங்களான மாகொல முஸ்லிம் அநாதை நிலையம் மற்றும் அதன் கிளையான மல்வானை அநாதை நிலையம் ஆகியன சுமார் 800 இற்கும் மேற்பட்ட அநாதைகளைக் கொண்டுள்ளன.

இந்த அநாதை நிலையங்கள் முன்னாள் ஆரம்ப கால நிலையான பரிபாலன சபைத் தலைவர் மர்ஹூம் ஜாபீர் ஹாஜியாரின் தலைமையில் கல்வி, மார்க்கக் கல்வி, கைத்தொழில் பாடநெறி கற்கைகளுடன் தூரநோக்குடையதாக சீரும் சிறப்புடன் இயங்கி வந்தன.

கடந்த 2008 இல் ஜாபீர் ஹாஜியாரின் மறைவுக்குப் பிறகு பரிபாலன சபையில் உள்ள தலைவர் உள்ளிட்ட சில உறுப்பினர்களின் அசமந்தப் போக்கான செயற்பாடுகள் காரணமாக, தூரநோக்கற்றதாக, கல்வி, மார்க்கக் கல்வி, கைத்தொழில் பாடநெறி கற்கைகள் உள்ளிட்ட செயற்பாடுகள் சீர் குலைந்தமை காரணமாக அதிலிருந்த பிள்ளைகள் விலக ஆரம்பித்தனர். அந்த வகையில் இன்று மல்வானை அநாதை நிலையம் மூடப்பட வேண்டிய பரிதாபகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

பல மில்லியன் ரூபா நன்கொடைகள் மூலம் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையம், பரிபாலன சபையினரின் அசமந்தப் போக்கு காரணமாக இந்நிலையத்தை 3ஆம் தரப்புக்கு தாரைவார்க்கும் வந்துள்ளது.

அந்த வகையில் இன்று எந்தவிதமான சட்டரீதியான அணுகுமுறைகளும் இன்றி, பத்திரிகை மூலமான முறையான பொது அறிவித்தல்களும் இன்றி அதனை விற்பனை செய்வதற்கும், கூலிக்கு வழங்குவதற்குமென, தமது சொந்த பொக்கற்றுகளை நிரப்பும் வகையில் செயற்படுகின்ற நிலைக்கு வந்துள்ளது. 

அநாதைகளின் சொத்துகளில் அத்து மீறுகின்ற மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஹராமான நடவடிக்கைக்கு சென்றுள்ள இவ்வாறானவர்களின் செயற்பாடுகளுக்கு, எமது விரோதத்தை தெரிவிக்கும் முகமாக இந்த அநாதை நிலையத்தின் பழைய மாணவர்கள் சங்கம் உள்ளிட்ட சமூக கடமைப்பாடு கொண்ட இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். 

அதற்கமைய, இதன் தற்போதைய பரிபாலனசபை உடனடியாக விலகி சட்டரீதியான புதியதொரு பரிபாலன சபையை உருவாக்கி முன்னர் காணப்பட்ட தூரநோக்குடன் கல்வி, மார்க்கக் கல்வி, தொழில் முறைக் கல்வி உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் அதனை கட்டியெழுப்ப, நாட்டின் சகல முஸ்லிம்களுக்கும் இது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளை பழைய மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வு நவம்பர் 06ஆம் திகதி மு.ப. 10.00 மணிக்கு, மல்வானை அல்முபாரக் மத்திய கல்லூரிக்கு முன்பாக ஒன்றுகூடி மல்வானை அநாதை நிலையத்தை நோக்கி பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அநாதை பிள்ளைகள் விடயத்தில் கூடிய கவனம் எடுத்து, மர்ஹூம் ஜாபீர் ஹாஜியாரின் மறைவுக்கு முன்னர் இருந்தாற் போல், இந்நிலையத்தைக் கட்டியெழுப்புமாறும், கடந்த 10 வருட காலமாக பரிபாலன சபையின் அசமந்தப் போக்கை நிறைவுக்கு கொண்டு வருமாறும் பழைய மாணவர் சங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், இச்சபை இது தொடர்பில் எவ்வித அக்கறையும் இன்றி செயற்பட்டதன் காரணமாக இந்நிலையம் இன்று மூடப்பட வேண்டிய பரிதாபகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், இவ்வாறான செயல்களை தடுக்கும் வகையில், 'அநாதைகளின் சொத்துகளைப் பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில், இந்நிலையம் மீண்டும் சிறப்பாக நடைபெற வேண்டுமென, சமூக கடமைப்பாடு உள்ள நாட்டின் சகல முஸ்லிம்களும் துஆ பிராத்தனையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Thinakaran

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.