அப்ரித் வஸீர்

 விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐசிசி டி20 இருபதுக்கு இருபது தொடர் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. சூப்பர் 12 ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. நான்கு அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. சூப்பர் 12 இல் மொத்தமாக 30 ஆட்டங்கள் நடைபெற்றது. குழு ஒன்றில் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் குழு இரண்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் குழு ஒன்றில் நியூசிலாந்து அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தது .இங்கிலாந்து அணி இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு தெரிவாகி அவுஸ்திரேலியாவின் அரையிறுதி கனவினை தகர்த்தது. குழு

 இரண்டில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் முதலாம், இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது எனினும் தென்னாப்பிரிக்கா பாகிஸ்தானுடன் அடைந்த தோல்வியை தொடர்ந்து நெதர்லாந்துடன் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இன்று களம் இறங்கியது. எனினும் 13 ஓட்டங்களால் நெதர்லாந்து வெற்றி பெற்றது. இந் நிலையில் இன்றைய இரண்டாவது போட்டியான பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியில் வெற்றி பெறுகின்ற அணி அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பெறுமன தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மிக விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் ஐந்து விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

அரையிறுதியில் மோதப் போகும் அணிகள் யார்?

அரையிறுதியில் மோதப்  போகும் அணிகள் யார்?என்ற கேள்வி அனைத்து கிரிக்கெட் இரசிகர்களுக்கும் புரியாத புதிராகவே இருந்தது. அந்தவகையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

குழு ஒன்றில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், குழு  இரண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் தெரிவாகியுள்ளது.புள்ளிவிபரங்களின் அடிப்படையில் குழு ஒன்றின் முதல் அணியும்,குழு இரண்டின் இரண்டாவது அணியும் மற்றும் குழு இரண்டின் முதலாவது அணியும் ,குழு ஒன்றின் இரண்டாவது அணியும் அரையிறுதியில் மோதவுள்ளது.

அந்தவகையில் நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதலாவது அரையிறுதியிலும்,இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இரண்டாவது அரையிறுதியிலும் களமிறங்கவுள்ளது.

முதலாவது அரையிறுதி ஆட்டம் நவம்பர் 9ஆம் திகதி சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது அரையிறுதி ஆட்டம் எதிர்வரும் பத்தாம் திகதி அடலய்ட்டிலும் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அரையிறுதியில் தெரிவாகின்ற இரண்டு அணிகளும் எதிர்வரும் 13 ஆம் திகதி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப் போட்டிக்காக களமிறங்க உள்ளது.

எதிர்பார்க்கப்படாத பாகிஸ்தானின்  அரை இறுதி  வாய்ப்பு!

 கடந்த வருடம் அரையிறுதியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி இந்த முறை பெரிதும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியது. எனினும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்திய மற்றும் சிம்பாபேயிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியிருந்தது.பாகிஸ்தானின் அரையிறுதி கனவு நொருங்கிப்போனது என்றாலும் கடுகளவு வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது.  மூன்றாவது போட்டியில் நெதர்லாந்தை வெற்றி பெற்று, தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது எனினும்  தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து கிடையயான போட்டியில் மழை பெய்து போட்டி கைவிடப்பட வேண்டும் அல்லது நெதர்லாந்து தென்னாபிரிக்காவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இன்றைய ஆட்டம் அமைந்திருந்தது. இந்த ஆட்டம் நெதர்லாந்துக்கு முக்கியமில்லை என்றாலும் 2024 ஆம் ஆண்டுக்கான டி20 தொடரில் நெதர்லாந்து நேரடியாக தகுதி பெறுவதற்கு அவர்களுக்கு இன்றைய ஆட்டம் முக்கியமாக இருந்தது மற்ற பக்கம் நெதர்லாந்தின் வெற்றி பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை மேலும் உறுதி செய்வதாக அமைந்தது.அந்தவகையில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தி பாகிஸ்தானி அரை இறுதிக்குள் நுழைந்தது.

பாகிஸ்தானின் இந்த முன்னேற்றம் பாகிஸ்தான் இரசிகர்கள் மற்றும் இன்றி அனைத்து கிரிக்கெட் இரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.பாகிஸ்தான் அணியினர் ஏனைய அணிகளை விட ஆரம்பத்தில் சரிவதும் பின்பு "கம் பேக்" கொடுப்பதுமாக அவர்களுக்கென்று தனி வரலாறு உண்டு என்று சொல்வதில் ஐயமில்லை.

இதுவரை நடைபெற்ற டி20 உலகக்கிண்ண அரையிறுதி ஆட்டங்கள்!

முதலாவது டி20 உலகக்கிண்ணம் 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்றது.இதில் இந்திய,பாகிஸ்தான்,அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகின.

முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.இ்ந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.  

இரண்டாவது டி20 உலகக்கிண்ண அரையிறுதியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலியா  அணிகள் மோதின.இதில் இந்திய அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

இரண்டாவது டி20 உலக கிண்ணம் 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம் பெற்றது. இதில் இலங்கை ,மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தெரிவாகின. முதலாவது அரைஇறுதி ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 உலகக்கிண்ண அரை இறுதியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

மூன்றாவது டி20 உலகக் கிண்ணம் 2010 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவில் நடைபெற்றது.இதில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகின.

முதலாவது அரையிறுதியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.இதில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இரண்டாவது அரையிறுதி ஆட்டம் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.இதில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

நான்காவது டி20 உலகக் கிண்ணம் 2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றது.இதில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகின.


முதலாவது அரையிறுதியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.இதில்  இலங்கை அணி 16  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இரண்டாவது அரையிறுதி ஆட்டம் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையில் நடைபெற்றது.இதில் மேற்கிந்திய தீவு அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவு அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

ஐந்தாவது டி20 உலகக் கிண்ணம் 2014 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்றது.இதில் , தென்னாபிரிக்கா, இலங்கை,நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகின.

முதலாவது அரையிறுதியில் தென்னாபிரிக்கா மற்றும்  நியூசிலாந்து அணிகள் மோதின.இதில்   நியூசிலாந்து அணி 4  விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையில் நடைபெற்றது.இதில் இலங்கை அணி  27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

ஆறாவது டி20 உலகக் கிண்ணம் 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது.இதில், இந்திய, மேற்கிந்திய தீவு, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகின.

முதலாவது அரையிறுதியில் இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின.இதில் மேற்கிந்திய தீவுகள் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இரண்டாவது அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.இதில் இங்கிலாந்து அணி 7  விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் கி்ண்ணத்தை கைப்பற்றியது.

ஏழாவது டி20 உலகக் கிண்ணம் கடந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.இதில் பாகிஸ்தான்,அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகின.

முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.இதில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.இதில் அவுஸ்திரலியா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி கிண்ணத்தை வெற்ற பெற்றது.

இதுவரையில் பாகிஸ்தான் அணி 6 முறை  அரையிறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி 5 முறை அரையிறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.

இலங்கை,அவுஸ்திரேலியா,இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 4  முறை அரையிறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.

இந்த முறை அறையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் எவ்வாறு அமையப்போகும் என்பது தொடர்பில் கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.பொறுத்திருந்து பார்ப்போம் ஆட்டம் எவ்வாறு திசை திரும்பப் போவது என்பதை.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.