வடக்கு ரயில் பாதை சீரமைப்புக்கான அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இதன் காரணமாக ஜனவரி 05 ஆம் திகதி முதல் அநுராதபுரம் - வவுனியா ரயில் பாதை மூடப்படவுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் சேவை இக்காலங்களில் வவுனியா வரை நடைபெறும். கல்கிஸ்சை, கொழும்பு கோட்டையிலிருந்து வடக்கு நோக்கி புறப்படும் யாழ்.தேவி ரயில் உட்பட அனைத்து ரயில்களும் வழமை போன்று அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

அநுராதபுரம் - ஓமந்தை வரையிலான ரயில் பாதை முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும். இத்திட்டம் எதிர்வரும் ஜனவரி (05) முதல் ஆரம்பமாவதால்,05 மாத காலத்துக்கு அநுராதபுரம் - வவுனியாவுக்கிடையிலான ரயில் பாதை முழுமையாக மூடப்படும் என்று சுட்டிக்காட்டினார்.

இந்திய கடனுதவித் திட்டத்தில் சுமார் 33 பில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய திட்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய டெல்கொன் நிறுவனம் இந்நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது. நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இந்த அபிவிருத்திப் பணிகளால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக் கொண்டால், எதிர்வரும் காலங்களில் சிறந்த ரயில் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டம் பூரணப்படுத்தப்பட்டதுடன் வடக்குக்கான ரயில்கள் சுமார் 100 கிலோ மீற்றர் முதல் 120 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும். இதனால், சுமார் ஒரு மணி நேரத்தை மீதப்படுத்த முடியுமென்றும் அமைச்சர் கூறினார்.

இதனால் ரயில் பயணிகள் எந்தவித தடங்களுமின்றி தமது பயணத்தை தொடர விசேட பஸ் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும். அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிப்பதற்காக, ரயில்வே திணைக்களம் விசேட பஸ் சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான நேர அட்டவணையொன்றும் தயாரிக்கப்படும். இக்காலப் பகுதியில் வடக்குக்கான ரயில் சேவை அநுராதபுரம் வரை வழமை போன்று நடைபெறும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.