மினுவாங்கொடை, கல்லொழுவ அல் நிழாமிய்யாஹ் அரபுக்கல்லூரியின் பதினெட்டாவது அல் ஆலிம் மற்றும் அல் ஹாபிழ் பட்டமளிப்பு பட்டமளிப்பு விழா மற்றும் துஆ மஜ்லிஸ் இன்றைய தினம் (22) அரபுக்கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.முனாஸ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் 11 ஆலிம்களும் 07 ஹாபிழ்களுமாக 18 பேர் பட்டம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கௌரவ அதிதியாக அக்குறணை ஜாமிஆ ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி அதிபர் ஷெய்குர் ரஹ்மானிய்யா அஷ்ஷெய்க் ஏ.சி.எம்.ஜிப்ரி ஹஸ்ரத் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

வரவேற்புரையை அதிபர் அஷ்ஷெய்க் நிஜாமுதீன் பஹ்ஜி நிகழ்த்தியதுடன், அதனை தொடர்ந்து அரபுக்கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.முனாஸ் உரையாற்றினார்.

தொடர்ந்து மாணவர் அஜ்மல் தலைமையிலான குழுவினரின் கஸீதாவும் இடம்பெற்றது

கல்வியின் சிறப்பு தொடர்பில் அரபு மொழியில் மாணவர் அர்கமும், தமிழில் மாணவர் ரதானும், சிங்களத்தில் மாணவர் முர்சிதும் உரையாற்றினர். மாணவர் ஸயீதின் கஸீதா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

துஆ பிரார்த்தனையை நிழாமிய்யாஹ் அரபுக்கல்லூரியின் உப அதிபர் அஷ்ஷெய்க் ஜெஸ்மின் தீனி நிகழ்த்தினார். 

நிகழ்வை சியன ஊடக வட்டத்தின் தலைவரும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வரும் தொகுத்து வழங்கினார்.

கல்லொழுவை அல் நிழாமிய்யாஹ் அரபுக்கல்லூரியின் 18வது பட்டமளிப்பு நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உப தலைவர் அஷ்ஷெய்க் ரிழா மக்தூமி உள்ளிட்ட ஜம்இய்யதுல் உலமா உறுப்பினர்கள், பல்வேறு அரபுக்கல்லூரிகளின் உஸ்தாத்மார்கள், கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.டி.எம்.ஆஸிம் உட்பட பாடசாலை ஆசிரியர்கள், அரபுக்கல்லூரி மாணவர்கள் உட்பட பெற்றோர்கள், உறவினர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.