மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க மின்சார சபை தயாராகி வரும் நிலையில், மற்றுமொரு பாரிய மின்சார நெருக்கடி தொடர்பில் பல்வேறு தரப்பினரும் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். 

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான அளவு நிலக்கரியை கொள்வனவு செய்வது தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும்.

கடல் சீற்றம் காரணமாக கப்பல்கள் வருவதில் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னதாக 38 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைய வேண்டும் எனவும் அடுத்த வருடம் அதிக நேர மின்வெட்டுக்கு செல்லாமல் இருக்க அதனை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி BLACK SAND எனப்படும் நிறுவனத்திற்கு நிலக்கரி தொடர்பான விலைமனுவை வழங்கும் போது இலங்கை நிலக்கரி நிறுவனம் உரிய நடைமுறையை பின்பற்றாமையினால் குறித்த விலைமனு இரத்து செய்யப்பட்டது.

ஆறு மாத கால கடன் அடிப்படையில், இந்த விலைமனு வழங்கப்படவிருந்தது.

கொடுக்கல் வாங்கல் இரத்தானதையடுத்து, இலங்கை நிலக்கரி நிறுவனத்தால் மீண்டும் நீண்டகால மற்றும் குறுகிய கால இரண்டு விலைமனுக்கள் கோரப்பட்ட போதிலும் அவற்றில் ஒன்று கூட வெற்றியடையவில்லை.

இதனால் பழைய விநியோகஸ்தரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவிருந்த நிலக்கரியை ஏற்றிய 21 கப்பல்களுக்கு உடனடியாக பணத்தை செலுத்த வேண்டிய நிலை இலங்கை நிலக்கரி நிறுவனத்திற்கு ஏற்பட்டது.

இதனிடையே, கடந்த வருடம் நிலுவையான பணத்தையும் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியேற்பட்டதுடன், அந்நிறுவனத்திற்கு மேலும் 14 மில்லியன் டொலர் பணத்தை செலுத்த வேண்டிய நிலையை இலங்கை நிலக்கரி நிறுவனம் எதிர்கொண்டது.

தற்போதைய நிலையில், கொள்வனவு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாட்டில் ரூபாவோ அல்லது டொலரோ இல்லையென இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாதமொன்றுக்கு 06 கப்பல்கள் வீதம் அடுத்த தவணைக் காலத்திற்கு முன்பாக நிலக்கரிக்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், தற்போது 12 கப்பல்களை நாட்டிற்கு கொண்டுவர வேண்டியுள்ளதாகவும் நிலக்கரி நிறுவனம் சுட்டிக்காட்டியது.

எனினும், டொலர் மற்றும் ரூபாவிற்கான நெருக்கடி காரணமாக அவற்றில் அரைவாசியை மாத்திரமே கொண்டு வருவதற்கான இயலுமை உள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கமைய, தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி தொகையானது எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை மாத்திரமே போதுமானதாக உள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

இதனிடையே, 02 மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை மேலும் 02 நாட்களுக்கு அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியதான இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் தளத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.

அத்துடன், இன்று முதல் தெற்கு வலயம் மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களிலும் இரவு வேளையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாதெனவும் அமைச்சரின் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.