சீனாவில் ஒரே நாளில் 37 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று

சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமிக்ரோனின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. தினமும் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாகவும், உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அரசு தரப்பில் பெரும்பாலான இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சீன அரசின் உயர்மட்ட சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி, இந்த வாரம் ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 37 மில்லியன் (3.7 கோடி) மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், உலகில் இதுவரை இல்லாத அளவில் நோய்த் தொற்று பரவுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 248 மில்லியன் மக்கள் அல்லது கிட்டத்தட்ட 18 சதவீத மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் மனித குலத்திற்கு கவலை அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. இது உண்மையாக இருக்கக்கூடாது என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.

டிசம்பர் 20 அன்று மதிப்பிடப்பட்ட தினசரி 37 மில்லியன் பாதிப்பு என்பதற்கும், அந்த நாளில் சீனாவில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட 3,049 நோயாளிகள் என்ற எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய அளவிலான வித்தியாசம் உள்ளது. தினசரி பாதிப்புக்கான முந்தைய தொகையை விட இது பல மடங்கு அதிகமாகும்.

ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரோன் தோன்றி பல்வேறு நாடுகளில் பரவியதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 19ம் திகதி தினசரி பாதிப்பு 4 மில்லியனை எட்டியது. இதுவே உலக அளவில் அதிகபட்ச தினசரி பாதிப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.