திருமலை மாவட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலங்களைக் கொண்ட கல்வியியல் கல்லூரி தாபிக்கப்பட வேண்டும் - இம்ரான் எம்.பி வேண்டுகோள்
திருமலை மாவட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலங்களைக் கொண்ட கல்வியியல் கல்லூரி தாபிக்கப்பட வேண்டும் - இம்ரான் எம்.பி வேண்டுகோள்.
திருகோணமலை மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாகக் காணப்படுவதற்கு முக்கிய காரணம் ஆசிரியர் பற்றாக்குறையாகும். எனவே, இதனை நிவர்த்திக்கும் பொருட்டு இம் மாவட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலங்களைக் கொண்ட கல்வியியல் கல்லூரி தாபிக்கப்பட வேண்டும். இதன் மூலம் அதிகம் சிங்கள மொழி மூல ஆசிரியர் பற்றாக்குறையுள்ள மொரவௌ, கோமரங்டகடவெல, பதவிசிறிபுர போன்ற பகுதிப் பாடசாலைகளும் பெரும் நன்மையடையும் என சுகாதார அமைச்சு சம்பந்தமான குழுநிலை விவாதத்தில் பாராளுமன்றில் உரையாற்றும் போது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
திருகோணமலை கல்வியில் கல்லூரிக்காக திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் சர்தாபுர பகுதியில் 15 ஏக்கர் காணியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். எனவே, திருகோணமலை கல்வியியல் கல்லூரியை தாபிக்க கௌரவ அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
அடுத்த மாதம் முதல் புதிய கல்வித் திட்டத்தின் நிர்வாக விடயங்கள் அமுலாகின்றன. இதில் வலயக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கையை 120 ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு திருகோணமலை மாவட்டத்தில் முள்ளிப்பொத்தானை, குச்சவெளி ஆகிய இரு புதிய கல்வி வலயங்கள் தாபிக்கப்பட வேண்டும் என அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.
தற்போது தம்பலகமம் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் கிண்ணியா கல்வி வலயத்திலும், தமிழ்ப் பாடசாலைகள் திருகோணமலை வலயத்திலும், சிங்களப் பாடசாலைகள் கந்தளாய் வலயத்திலும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடசாலைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து முள்ளிப்பொத்தானை கல்வி வலயம் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்மொழிகின்றேன். இந்த வலயத்தின் கீழ் 16 முஸ்லிம் பாடசாலைகளும், 8 தமிழ்ப் பாடசாலைகளும், 6 சிங்களப் பாடசாலைகளுமாக மொத்தம் 30 பாடசாலைகள் உள்ளடங்கும்.
அதேபோல திருகோணமலை வலயத்தின் கீழ் வரும் குச்சவெளி பிரதேச பாடசாலைகள் பல்வேறு வழிகளிலும் பின் தங்கிக் காணப்படுகின்றன. திருகோணமலை வலயத்திலிருந்து சுமார் 50 கிலோமீற்றருக்கும் அப்பால் தூரத்திலுள்ள இப்பாடசாலைகளின் முன்னேற்றம் கருதி புதிய குச்சவெளி கல்வி வலயம் தாபிக்கப்பட வேண்டும் எனவும், இந்த வலயத்தின் கீழ் 15 முஸ்லிம் பாடசாலைகளும், 13 தமிழ்ப் பாடசாலைகளும், 4 சிங்களப் பாடசாலைகளுமாக மொத்தம் 32 பாடசாலைகள் உள்ளடங்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அவரது உரையில் இம்மாதம் 31 ஆம் திகதியுடன் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் ஓய்வு பெறுகின்றனர். எனவே, இந்தப் பதவிகளுக்கு சேவை மூப்பு மற்றும் திறமை அடிப்படையில் புதிய அதிகாரிகளை நியமிக்க கௌரவ அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது உரையில் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள்
கருத்துரையிடுக