இனப்பிரச்சினை தீர்வு குறித்து விரைவான தீர்மானம் அவசியம் ; சர்வகட்சி மாநாட்டில் ரவூப் ஹக்கீம்.
எதிர்வரும் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் (13) நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பொது இணக்கப்பாட்டை எட்டும் நோக்கில் ஜனாதிபதி இம்மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்,
75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னதாக, குறைந்தபட்சம் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.
அதன் பிறகு, அனைத்துக் கட்சி மாநாடு மற்றும், தேவைப்பட்டால், சிவில் அமைப்புகளும் பங்கேற்று அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு செல்லலாம். விக்டர் ஐவன் போன்ற சிவில் சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே எம்மை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட வேண்டும். அந்த மாகாணங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கான பிரதான பிரச்சினை அவர்களின் காணிகள் வேறு சிலரால் கையகப்படுத்தப்பட்டமையாகும். இராணுவம் மட்டுமன்றி ஏனைய அரச நிறுவனங்களும் காணிகளை கையகப்படுத்தியுள்ளன. குறிப்பாக வனஜீவராசிகள், வனப் பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் திணைக்களம் இவ்வாறு காணிகளை கையகப்படுத்தியுள்ளது. இது முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல, சிங்கள சமூகத்திற்கும் ஒரு பிரச்சினை ஆகும்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரத்தில், சில மத ஸ்தலங்களின் சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்த முயற்சித்தது. சில இடங்களில் பொலிஸார் தங்கியுள்ளனர். இவ்விடயத்தில் மக்களுக்குப் பிரச்சினை உள்ளது. எனவே இது சஹரான் அல்லது அவரது குழுவினருக்கு சொந்தமான சொத்துக்கள் அல்ல, அவை ஏனைய மத ஸ்தானங்களுக்கு சொந்தமானவை.
இதற்கு பதில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்த மத ஸ்தலமும் அச்சுறுத்தலுக்கு உள்ளானால் எங்களுக்குத் தெரிவிக்கவும். தற்போது சில முஸ்லிம் அமைப்புகளை ஆய்வு செய்து வருகிறோம். சில அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக