2019ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா பரவல் 2022 டிசம்பர் வரை நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தாக்கத்தில் இருந்து விழித்து வரும் போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு திரிபாக பரவி மக்களை மேலும் மேலும் பீதியில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சீனாவில் பரவும் கொரோனா வைரஸின் ஒரு வகை திரிபான ஒமைக்ரானின் BF.7 என்ற புதிய திரிபு உலக மக்களை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது.

முதல் இரண்டு அலைகளை காட்டிலும் தற்போது பரவும் இந்த BF.7 வகை கொரோனாவால் இதுவரை சீனாவில் 25 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி அதிர வைத்திருக்கிறது. இந்த புதிய வகை ஒமிக்ரோன் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. ஆனால் தீவிரமான வீரியமான பாதிப்புகளை புதிய கொரோனா ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் சீனாவில் நாள்தோறும் கோடிக்கணக்கானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் மருத்துவமனைகள் எங்கும் நோயாளிகளாகவே இருப்பதை சமூக வலைதளங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அதே வேளையில் மக்களின் கோரிக்கைக்கு பணிந்து சீன அரசு ஊரடங்கு விதிகளை தளர்த்தியிருக்கிறது. இதுபோக உலக சுகாதார அமைப்புக்கு தங்கள் நாட்டில் பதிவாகும் கொரோனா பாதிப்புகளை இனி வெளியிட போவதில்லை என்றும் சீனா தெரிவித்திருக்கிறது

இந்த நிலையில், புதிய தலைமுறையின் நியூஸ் 360 நிகழ்ச்சியில், சீனாவின் ஜியான்சி மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்கும் சாமுயேல் என்ற மாணவர் பேசியிருக்கிறார். அதில், சீனாவில் கொரோனா பரவல் எப்படி இருக்கிறது என்பதை பகிர்ந்திருக்கிறார். அதன்படி, “பரவாயில்லை என்ற அளவுக்குதான் சீனாவின் நிலை இருக்கிறது. மருத்துவமனையிலும் எந்த பிரச்சனையும் இல்லை. மக்களும் தங்களை சுயமாக கவனிக்க தொடங்கிவிட்டார்கள். கொரோனா மீதான பயம் அவ்வளவாக மக்களிடையே இருக்கவில்லை.

நான் இருக்கும் மாகாண மக்கள் அவ்வளவாக மருத்துவமனைக்கு செல்வதில்லை. வீட்டிலேயே வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள். ஒருவருக்கு தொற்று பாதித்தால் அதிகபட்சம் 3-5 நாட்களுக்குள் குணமாகிவிடுகிறார்கள். ஊரடங்கு எதுவும் இல்லாததால் கொரோனா பரவல் அதிகமாகத்தான் இருக்கிறது.

பாதிப்பு அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு பெரிதாக இல்லை. ஏனெனில் சாதாரண காய்ச்சலை விட சற்று அதிகமான அறிகுறிதான் இருக்கிறது. லாக் டவுன் இல்லாததால் அரசு தரப்பிலிருந்து எல்லா நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அவசர சிகிச்சை என மருத்துவமனைக்கு போனால் எந்த தாமதமும் செய்யாமல் உடனடியாக சிகிச்சை வழங்கப்படுகிறது.” என்று கூறியிருக்கிறார்.

இதேப்போன்று, சீனாவில் வசிக்கும் மலையாளிகள் இருவர் அங்கு கொரோனா பாதிப்பு ஏதும் பெரிதாக இருக்கவில்லை, எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி சீனாவில் நிலவும் சூழல் குறித்து அங்கு வசிப்பவர்கள் பேசியிருக்கும் நிலையில், நாளுக்கு நாள் லட்சக்கணக்கான கோடிக்கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருவது உலக நாடுகளை கவலைக்கொள்ள செய்திருக்கிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.