விபத்தை ஏற்படுத்திவிட்டு டுபாய் சென்ற வர்த்தகரை அழைத்துவர இன்டர்போல் உதவியை நாடியுள்ள பொலிஸ். 

கொள்ளுப்பிட்டியில் சனிக்கிழமை காலை இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது முச்சக்கர வண்டியை மோதி  விபத்தை ஏற்படுத்திய 24 வயதுடைய வர்த்தகரான Mercedes கார் சாரதி  விபத்து இடம்பெற்று மணித்தியாலங்களின் பின்னர் டுபாய் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சந்தேக நபரை அழைத்து வருவதற்கு இன்டர்போல் உதவியை பொலிஸார் நாடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விபத்து இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குப் பின்னர் சனிக்கிழமை காலை 9.55 மணியளவில் சந்தேக நபர் டுபாய்க்கு சென்றுள்ளார்.  சந்தேகநபர் இலங்கையில் தனது பெயரில் மூன்று Mercedes கார்களை வைத்திருப்பதாகவும், அந்த வாகனங்களுக்கான பணம் டுபாயில் இருந்து பெறப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் தாயாரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

 கொள்ளுப்பிட்டியில் இரவு விடுதியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த சொகுசு கார் (Mercedes) முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான 58 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து நடந்ததையடுத்து கார் சாரதி அங்கிருந்து தப்பியோடினார். விபத்தின் போது காரில்  29 மற்றும் 31 வயதுடைய இரு பெண்களும் இருந்துள்ளனர் அவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காரில் பயணித்த ஏனைய இருவரிடமும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

சந்தேகநபர் சாரதிக்கு தெஹிவளை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய இரண்டு முகவரிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் கொழும்பு முன்னணி ஹோட்டல் ஒன்றில் சொகுசு அறையில் தங்கியிருந்துள்ளார்.

சந்தேக நபர் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை 5 மணி வரை கிளப்பில் பார்ட்டியில் ஈடுபட்டதாகவும், விபத்து நடந்த போது காருக்குள் இருந்த  பெண்கள் அவரை இரவு விடுதியில் சந்தித்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.