அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கும் இள வயதுடையோரின் எதிர்பாரா
மரணச்சம்பவங்கள் மனதை அத்தனை நோவினைக்குள்ளாக்கி விடுகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்துப் போகும் மரணங்களானது வாழ்வின் நிலையாமையை எமக்கும் அடிக்கடி ஞாபகமூட்டி செல்கிறது.

சற்று சிந்தித்துப் பாருங்கள். இவர்கள் இவ்வளவு சீக்கிரம் இறந்து விடுவார்களா? என்று எண்ணியவர்கள் பலர் இன்று எம் மத்தியில் இல்லை.
அவர்களும் நம்மைப் போன்று  நாளைய நாட்களை எண்ணி, லட்சியங்களை எண்ணி  பல கனவுகளோடும் முயற்சிகளோடும் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தவர்கள் தானே.
என்றாலும் தனக்கென்ற தவணையை அந்த மரணம் சுமந்து வந்தால், இந்த உலகத்தில் நாம் உயிராக நேசிக்கும் எந்த உறவாயினும் எம் பக்கம் இருந்து 'இறைவா! இப்போதே இவர்கள் உயிரை எடுத்து விடாதே!' என்று மன்றாடி காப்பாற்றி விடத்தான் போகிறார்களா? இல்லை காப்பாற்ற தான் முடியுமா?
யாரிடத்தும் உதவி பெறப்பட முடியாத இறுதித் தருவாயில் உறவுகள் எம்மை பார்த்து அழுது புலம்பினாலும், அருகிலிருந்து தடவி கொடுத்தாலும் அதுவெல்லாம் நம்மை ஆற்றுப்படுத்துமா? எம் நிலையெல்லாம் இறையோடும் நாம் வாழ்ந்த இவ்வுலக நாட்களின் பிரதி பலன்களோடும் உயிரை விட போராடிக் கொண்டிருக்கும்.
அத்தருணத்தை நினைக்கையில்  கண்ணீர் தாரை தாரையாக எழுத்துக்களை கூட மறைத்து விடுகிறது.

பிறரின் மரணச் சம்பவங்கள் செவிகளை வந்தடைந்தாலும் இன்று அதுவெல்லாம் நமக்கு ஒரு பொருட்டல்ல ஒரு செய்தி மட்டுமே.
ஜனாஸாவுக்குரிய கடமைகளை செய்து முடித்த அடுத்த கணமே நாம்,நமது வாழ்க்கை தவறாமல் செய்து கொண்டிருக்கும் பாவங்கள் என்று அனைத்தும் தொடர்ந்து நீண்டு கொண்டு தானே செல்கிறது.
உண்மையைச் சொன்னால் இன்று எம் மனங்கள் கறும்புள்ளிகளை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.
அல்லாஹ் அருள் பாலித்தவர்களைத் தவிர.
அல்ஹம்துலில்லாஹ்! 

ஆதமுடைய மக்கள் பாவம் செய்யக்கூடியவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம் தான். ஆனால் அதில் நிலைத்திருந்து சுவனத்தை எட்ட முடியுமென இறைவன் ஒரு போதும் சொல்லவில்லை. உங்கள் பாவத்தை திருத்திக் கொள்ளுங்கள் என்னிடம் மீண்டு வாருங்கள் அது எவ்வளவு பெரிய பாவமாகவும் இருக்கட்டும் அல்லாஹ்விற்கு இணை வைப்பதை தவிர என்று அவனே நம்மை அல்குர்ஆனிய வார்த்தைகள் மூலம் அழைத்துக் கொண்டிருக்கும் போது நாம் ஏன் தான் இன்னும் இப்படி இருக்கிறோமோ
என்ற கவலை மனதை ஆட்கொண்டு விடுகிறது.

இன்றைய காலத்தை பொறுத்தவரையில்  நம்முடைய மிகப்பெரும் எதிரிகளாக சைத்தான்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.  சைத்தான்களோடு அதிகம் போராடி ஜெயித்து விட வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அனைத்து பாவங்களும் இலகுவாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
நமக்குக் கூட சில விடயங்கள் என்பது சர்வ சாதாரணமாகி போய்விட்டது.
பெரியவர்களாக இருக்கட்டும் இள வயதுடையோராக இருக்கட்டும் யாராக இருந்தாலும் இதுவெல்லாம் இந்த காலத்தில் சர்வ சாதாரணம்தானே என்று கடந்து போய்விடுகிறார்கள்.
சில நேரங்களில் அவ்வாறான வார்த்தைகள் மனதினை காயப்படுத்தி விடுகிறது.

ஏதோ ஒரு வகையில் அல்ஹம்துலில்லாஹ் நம்மில் பலர் இறைவணக்கங்களோடும், நன்மையான விடயங்களோடும் மனிதர்களுடனான தொடர்பில் நன் முறையிலும் 
தொடர்புபட்டு ஈருலக வெற்றிக்காகவும் தம்மை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் அவர்கள் தான் அதிசிறந்த வெற்றியாளர்கள்!
குறுகிய நோக்கமன்றி
சுவனத்துக்காக இறை திருப்திக்காக வாழ்ந்து மரணிக்கப் போகின்றவர்கள்.
அவர்கள் 
இறைநேசர்களோடு நாளை சுவனத்தில் முதலிடத்தில்  அமர்ந்திருக்கும் அந்த காட்சி எத்தனை அழகானதாய்  இருக்கும் அந்தக் கூட்டத்தில் என்னையும் உங்களையும் இறைவன் சேர்த்து அருள்வானாக!
ஆமீன்.

*முனீரா வாஹித்.*
*சில்மியா புர.*

2022.12.14
08.06am

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.