இலங்கை முழுவதும் திடீரென விசேட பாதுகாப்பு நடவடிக்கை!

 இலங்கையில் எதிர்வரும் ந்பண்டிகைக் காலங்களில் மக்களின் பாதுகாப்பிற்காகவும் குற்றம் புரிபவர்களை கைது செய்யவும் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நாட்டில் பல்வேறு குற்றவாளிகள் மற்றும் கொள்ளையர்கள், வாகன திருடர்கள் மற்றும் பணப்பை திருடர்களிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக, சிவில் உடையிலும் காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்களும் மக்கள் கூடும் பகுதிகளிலும், கடைவீதிகளிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கிறிஸ்துமஸ் தினத்தில் ஆராதனைகளை நடத்தும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட திருச்சபை ஆயர்களை சந்தித்து தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் காவல்துறைமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
தேவாலயங்களுக்குள் பிரவேசிக்கும் இனம் தெரியாத நபர்களை அடையாளம் காண விசேட வேலைத்திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

பகலில் தேவாலயங்களுக்குள் நுழைய முயற்சிக்கும் சந்தேகத்திற்கிடமான நபர்களை அடையாளம் காண தேவாலய உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களை பொலிஸ் அமைக்கும். நாடு முழுவதிலும் உள்ள பிரதான தேவாலயங்களில் கடமைக்காக மேலதிக ஆளணியை ஈடுபடுத்தவுள்ளது.
போலி நாணயத்தாள்களின் புழக்கத்தை தடுப்பது மற்றும் பொதுமக்களின் கைகளில் அவை சிக்குவதை தடுப்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பண்டிகைக் காலங்களில் வெளியூர்களில் இருந்து அதிகாரிகள் மேல் மாகாணத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதுடன், திடீர் வீதித் தடைகளில் மக்களையும் வாகனங்களையும் சோதனையிட விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.