கனேடியத் தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கினர்.

கனேடிய தமிழ் காங்கிரஸின் ஆண்டுதோறும் தமிழ் கனேடியர்களின் நடைபவனி ஊடாக பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகிறது.

இலங்கையின் மோசமான நிதிச் சரிவால் உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையை நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் அதிகளவில் எதிர்கொண்டு வருகின்றன.

இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் 2022 செப்டம்பர்11ம் திகதி கனேடிய தமிழ் காங்கிரஸின் 14வது வருடாந்த தமிழ் கனடிய நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் திரட்டப்படும் நன்கொடை மூலம் இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள 6 மருத்துவமனைகளுக்கு உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை வழங்குவது எனத் திட்டமிடப்பட்டது.

இந்த நன்கொடையின் முதற்கட்டமாக கனேடிய தமிழ் காங்கிரஸினால் ஒழுங்கமைக்கப்பட்ட முதற் தொகுதி மருந்துப் பொருட்கள் இன்றையதினம் (20) மாலை 4:30 மணியளவில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கனேடியர் தமிழர் பேரவையின் மனிதநேயப் பணியாளர் சிவம் வேலுப்பிள்ளை, செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமரன், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர்கள், பணியாளர்கள், நலன்புரிச் சங்க உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.