⏩One Stop Unit விரைவு சேவை செயல்பாட்டு பிரிவின் பணி ஆரம்பம்...

⏩அபிவிருத்தி அனுமதிகளுக்கு தேவையான அனைத்து அனுமதிகளும் ஒரே இடத்தில்...

10 - 21 நாட்களுக்குள் குறுகிய காலத்திற்குள் அபிவிருத்தி அனுமதி... 

⏩வியாபார நடவடிக்கைகளுக்கான  குறியீட்டில் முதலிடம் (DB  Index) பெற எதிர்பார்க்கப்படுகிறது...


One Stop Unit விரைவு சேவை செயல்பாட்டு அலகின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்  பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம், பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள அமைச்சு வளாகத்தில் நேற்று (30) இந்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த புதிய முறையின் மூலம் அபிவிருத்தி அனுமதிகளுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் இருந்து விரைவாக பெற்றுக்கொள்ள முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த One zShop Unit விரைவு சேவை அலகின் ஊடாக விண்ணப்பங்கள் குறைந்தபட்ச நேரத்திற்குள் செயலாக்கப்படும் என்று நகர அபிவிருத்தி அதிகாரசபை எதிர்பார்க்கின்றது.

இந்த புதிய முறையின் கீழ், 26 பங்களிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து 10-21 நாட்களுக்குள் அபிவிருத்தி விண்ணப்பங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்.  அதன்படி, அடிப்படைத் திட்டங்களைத் தீர்க்க எடுக்கப்படும் கால அவகாசம் 10 நாட்கள் ஆகும். காணி உப பிரிவிடுகை அனுமதிக்கு 14 நாட்களும், கட்டிட அனுமதிக்கு 21 நாட்களும், உரிமம் செல்லுபடியாகும் கால நீட்டிப்புக்கு 10 நாட்களும், இணக்க சான்றிதழ் வழங்க 10 நாட்களும் கால அவகாசம் எடுக்கப்படும்.

இந்த விரைவு சேவை செயல்பாட்டு அலகு One Stop Unit விண்ணப்பங்களைச் செயலாக்க அதிகாரத்தின் உள் துறைகள் மற்றும் தொடர்புடைய தரப்பினருடன் ஒருங்கிணைக்கப்பட்ட இணையவழி மென்பொருள் அமைப்புடன் நிறுவப்பட்டுள்ளது. மேலும், இணையவழி மென்பொருள் அமைப்பு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் தொடர்பான தெளிவுபடுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளை விரைவாக வழங்குவதால் விண்ணப்பதாரர் குறைந்த நேரத்தில் அனுமதி பெற முடியும்.

மேலும், விண்ணப்பதாரர் இணையவழி மென்பொருள் அமைப்பு மூலம் நேரடியாக தொடர்புடைய அபிவிருத்தி பயன்பாட்டைப் பயன்படுத்துவதற்கான திறனைப் பெறுவதால் விண்ணப்ப செயல்முறை சிக்கலானதாக இருக்காது. ஒழுங்கமைப்புடன் கூடிய முறையான மென்பொருள் அமைப்பு விண்ணப்பதாரருக்கு முழு விண்ணப்ப செயலாக்க செயல்முறையையும் கண்காணிக்க உதவுகிறது. ஒப்புதல் செயல்முறையை கண்காணிக்க உயர் அதிகாரிகளுக்கும் அணுகுவழி வழங்கப்படுவதால், விண்ணப்பங்கள் குறைந்த நேரத்துடன் செயலாக்கப்படுத்தப்படும்.

நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் தற்போது 24 மாநகர சபைகள், 41 மாநகர சபைகள் மற்றும் 208 உள்ளூராட்சி சபைகள் நகர அபிவிருத்தி பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதிகளுக்கான திட்டமிடல் மற்றும் கட்டிட விதிமுறைகள் அதிகாரசபையினால்  தயாரிக்கப்பட்டு  அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அறிவிக்கப்பட்ட அனைத்து நகரங்களும்  ஒருங்கிணைந்த திட்டங்களை தயாரித்து செயல்படுத்துவதற்காக இந்த ஒரு நிறுத்தப் பிரிவு One Stop Unit தொடங்கப்பட்டுள்ளது.

பொதுவாக, அபிவிருத்தியாளருக்கு மற்ற சேவை வழங்குநர்களிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு, அபிவிருத்தி  திட்டத்தின் ஒப்புதல் செயல்முறைக்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும். இது அபிவிருத்தி  திட்டங்களுக்கு தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்துகிறது மற்றும் இந்த நாட்டில் முதலீடு செய்ய எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களை ஆர்வம் குறைய செய்கின்றது.

இதற்கு தீர்வாக கடந்த 2017ம் ஆண்டு அபிவிருத்திகளுக்காக வழங்க இணையவழி விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குள் அபிவிருத்தி அனுமதிகளை வழங்குவதற்கான செயல்முறையை விரைவுபடுத்த உதவியது, ஆனால் முழு பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை. எனவே, தற்போதுள்ள முறைமையின் குறைபாடுகள் மற்றும் பலவீனங்களைப் போக்கி முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த விரைவான சேவைப் பிரிவை நிறுவுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த One Stop Unit விரைவு சேவை இயக்கப் பிரிவு மூன்று கட்டங்களின் கீழ் செயல்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாக முதல் கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கொழும்பு மாநகரசபை மற்றும் ஏனைய அனைத்து நகர அபிவிருத்தி மாவட்ட அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நகர அபிவிருத்திப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட ஏனைய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்கும் வகையில் இதன் மூன்றாம் கட்டத்தை ஜூலை 2024 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை நம்புகிறது.

வியாபாரம் நடாத்தப்படும்  குறியீட்டில் (DB Index) நமது நாடு 66வது இடத்தில் உள்ளது. இந்த விரைவான சேவைப் பிரிவின் மூலம் அபிவிருத்தி விண்ணப்பங்களை திறமையாகவும் விரைவாகவும் செயலாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் நமது நாடு குறியீட்டின் உயர் மதிப்பை நோக்கி நகரும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் www.osu.uda.lk  என்ற இணையத்தளத்திற்குச் சென்று அதற்கான அபிவிருத்தி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தொலைபேசி இலக்கங்களான 011-3883251  011-2874585 அல்லது 071-2076177 என்ற வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) லலித் விஜேரத்ன, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (சுற்றுச்சூழல் மற்றும் தளவடிவமைப்பு ) சாந்தன கலுபஹன நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதாராச்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


ஊடகப் பிரிவு

2022.12.01

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.