நிலைகொண்டிருந்த சக்தி வாய்ந்த தாழ் அமுக்கம், மாண்டேஸ் (Mandous)சூறாவளியாக வலுவடைந்தது

வங்காள விரிகுடாவின் தென் கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த சக்தி வாய்ந்த தாழ் அமுக்கமானது சூறாவளியாக வலுவடைந்துள்ளது.

ஐக்கிய அறபு இராஜியத்தினால் முன்மொழியப்பட்ட " மாண்டேஸ் " என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது தற்பொழுது திருகோணமலையிலிருந்து சுமார் 370 km தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இந்த சூறாவளியானது மேற்கு ‐ வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து நாளை நள்ளிரவு அளவில் தமிழ் நாட்டின் வட கரை , புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தென் பகுதியையும் ஊடறுத்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட இக் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 70 ‐ 80 km வேகத்தில் காற்று வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 90 km ஆக அதிகரித்தும் காணப்படலாம். இதேவேளை இக் கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதுடன் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
ஆகையினால் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறுஅறிவித்தல் கிடைக்கும் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகின்றனர்.

ஏற்கனவே கடலுக்கு சென்றவர்கள் பாதுகாப்பான கரையோரங்களுக்கு திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

வட மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

மேல் மாகாணத்திலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

(கலாநிதி மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி.)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.