ஜித்தா விமான நிலையத்தில் டுபாய் வருவதற்காக காத்திருந்த போது அருகிலிருந்த ஒரு இந்திய இளைஞரிடம் விமான நிலைய WiFi தொடர்பாக ஒரு விடயத்தை கேட்க வேண்டி ஏற்பட்டது.
சரளமாக ஆங்கிலத்தில் கதைத்தார், அறிமுகமானதன் பின் விடுமுறையில் நாடு செல்கிறீர்களா ? என்று கேட்டேன் அதற்கு இல்லை நான் ஆறு மாத கான்டரக்ட் முடித்து விட்டுச் செல்கிறேன் என்றார்.
என்ன தொழில் என அறியலாமா? எனக் கேட்கவே தான் எண்ணெய்க் கப்பலில் தொழில் நுட்ப உதவியாளராக இருந்தேன் என்றார், உங்களது கற்கைத் துறை என்ன ? என்றபோது கடற்பயணவியல் (Nautical Science) என்றார், எங்கு கற்றீர்கள் என்று கேட்டேன் அதற்கு கேரளா கொச்சினினில் என்றார், வயது 22 என்றும் தான் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் உயர்கல்வி கற்பதில் தடைகள் இருந்ததாலும் குடும்ப பொறுப்புக்கள் இருப்பதாலும் குறுகிய கால தொழில்
நுட்பக் கல்வியைத் தெரிவு செய்ததாகவும் கூறினார்.
அவரது வருவாயை அறிந்து கொள்ள விரும்பிய பொழுது ஏனைய இளைஞர்கள் இரண்டு வருடங்கள் உழைப்பதற்கு சமனாக இருப்பதனை அறிய முடிந்தது.
டுபாய் விமான நிலையத்தில் இலங்கைக்கு விமானம் புறப்படும் நுழை வாயல் பகுதிக்கு மிகவும் சோர்ந்த நிலையில் வந்தார், ஏன் இங்கு வந்தீர்கள் ? நாம் கொழும்பு செல்கிறோம் எனக் கேட்டேன் அதற்கு இல்லை உங்கள் விமானம் சென்று ஒரு மணி நேரத்தில் எமது விமானம் புறப்படுகிறது, எனக்கு கடுமையாக தலை வலிக்கிறது என்றார், என்னிடம் பனடோல் மாத்திரைகள் இருந்ததால் கொடுத்து ஒரு ஓரமாய் போய் ஓய்வெடுங்கள் எனக் கூறினேன்.
நான் விமானம் ஏறும் போது அவர் ஓரிடத்தில் நித்திரையில் இருப்பதனை கண்டேன், தொந்தரவு செய்யாது புறப்பட்டு வந்து விட்டேன்.
இலங்கைக்கு வரும் விமானத்தில் ஒரு சிங்கள இளைஞர் அருகில் இருந்தார் அவரிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டபோது எதியோப்பியா அடிஸ் அபாபாவில் இருந்து வருவதாக சொன்னார்.
அங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்ட போது கார்மன்ட்ஸ் பேக்டரி நீராவி தொழில் நுட்ப உதவியாளராக இரண்டு மாத கான்ட்ரக்டில் சென்று வருவதாகவும் சுமார் 5000 டாலர் அளவில் கிடைத்ததாகவும், நிரந்தர தொழில் ஒன்றிற்கான வாய்ப்பு ஒன்றையும் பெற்றுள்ளதாகவும் சொன்னார், அவரது வயது 24 என்றும் ஊர் திரும்பி காதலியைக் கரம்பிடித்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்றும் தான் NAITA வில் கற்றதாகவும் பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
ஆபிரிக்காவின் நோயாளியாக இருந்த எதியோப்பியா இன்றைய வளர்ச்சி அபிவிருத்தி வேகத்தை பற்றியும் எமது நாட்டு களநிலவரங்கள் பற்றியும் கவலையோடு கதைத்தார்..!
பின்னர், விமானம் இறங்கப் போகிறது ஐயே உங்கள் ஆசனத்தை நேராக சரி செய்து கொள்ளட்டுமாம் என நித்திரையில் இருந்த என்னை எழுப்பினார்.. ஐயே அபே முஹுது ஸீமாவ நேத எளியக் எஹம பேனவாத எனக் கேட்டார்.. யன்னல் அருகிலிருந்த நானும் குசும்பாக நேநே மல்லி ரடக்வத் பேன்ட நே..! என்றவுடன் விமானம் அதிர சிரித்து விட்டார், அருகில் உள்ள பலரும் ஏது எனக் கேட்க ரடத் இதுரு வெலா நேஹ்லு பங்.. என அவர் கூறி நாடு திரும்பும் குசியில் குதூகலமாக இருந்தார்.
25- 28 வயது தாண்டியும் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு படிப்பினைகள் இருப்பதால் இந்தப் பயண அனுபவத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!
தம்பி, தொழில்நுட்பம் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
21.12.2022