ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதத்திலும், அதற்கு முந்தைய ஆண்டில் டி20, டெஸ்ட், ஒருநாள் ஆகிய 3 ஃபார்மட்டிலும் சிறப்பாக ஆடிய வீரர்களை கொண்ட ஆடும் லெவனை ஐசிசி அறிவிப்பது வழக்கம். அந்தவகையில், 2022ம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய 11 பேர் அடங்கிய டி20 அணியை அறிவித்த ஐசிசி, இன்று சிறந்த ஒருநாள் லெவனை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியின் தொடக்க வீரர்களாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ள ஐசிசி, பாபர் அசாமை கேப்டனாக நியமித்துள்ளது.

3ம் வரிசை வீரராக வெஸ்ட் இண்டீஸின் ஷேய் ஹோப்பையும், 4ம் வரிசை வீரராக தொடர்ச்சியாக அபாரமாக பேட்டிங் ஆடி இந்திய அணியில் 4ம் வரிசை வீரருக்கான இடத்தை வலுவாக பிடித்துவிட்ட ஷ்ரேயாஸ் ஐயரையும் தேர்வு செய்துள்ளது ஐசிசி. 5ம் வரிசை வீரராக நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டாம் லேதமையும், 6ம் வரிசை வீரராக வங்கதேச ஆல்ரவுண்டர் மெஹிடி ஹசன் மிராஸையும் தேர்வு செய்துள்ளது ஐசிசி. மெஹிடி ஹசன் மிராஸ் கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவிற்கு எதிரான தொடரில் அபாரமாக ஆடி அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபாஸ்ட் பவுலர்களாக இந்தியாவின் முகமது சிராஜ், வெஸ்ட் இண்டீஸின் அல்ஸாரி ஜோசஃப் மற்றும் நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் ஆகிய மூவரையும், ஸ்பின்னராக ஆஸ்திரேலிய ரிஸ்ட் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பாவையும் ஐசிசி தேர்வு செய்துள்ளது. 2022ன் சிறந்த ஒருநாள் லெவனில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது சிராஜ் ஆகிய 2 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2022ம் ஆண்டின் ஐசிசி தேர்வு செய்த சிறந்த ஒருநாள் லெவன்:

பாபர் அசாம் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஷேய் ஹோப், ஷ்ரேயாஸ் ஐயர், டாம் லேதம் (விக்கெட் கீப்பர்), மெஹிடி ஹசன் மிராஸ், அல்ஸாரி ஜோசஃப், முகமது சிராஜ், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா.
 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.