கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை நடப்பு ஆண்டில் பொருளாதார முடக்கத்தை எதிா்கொள்ளும் என்று சா்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவா் Kristalina Georgieva தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவில் தனியாா் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவா் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போா் தொடங்கி 10 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், எவ்வித முடிவும் எட்டியதாகத் தெரியவில்லை. இது தவிர சீனாவில் அதிகம் பரவியுள்ள கொரோனாவால் சா்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படும். இது மேலும் பல நாடுகளுக்குப் பரவினால் பொருளாதாரப் பிரச்சினைகள் மேலும் தீவிரமடைந்து பணவீக்கம் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ள Kristalina Georgieva, இதனால் பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் உள்ளதாகவும் கூறியிள்ளார்.
அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு 2023-ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக கடினமான ஆண்டாகவே இருக்கும் என கூறியுள்ள அவர், உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் நடப்பு ஆண்டில் பொருளாதார முடக்கத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவலால் அடுத்த சில மாதங்களுக்கு சீனா கடுமையான சூழலை எதிா்கொள்ளும் எனவும் இது அந்நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் எனவும் இதனால், பல்வேறு பொருட்களுக்கு சீனாவை சாா்ந்துள்ள நாடுகளும் பாதிப்படையும் எனவும் சா்வதேச நாணய நிதியத்தின் தலைவா் மேலும் தெரிவித்துள்ளார்.