தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வைப்பிலிடுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.


எவ்வாறாயினும் இன்று நண்பகல் 12.00 மணி வரை கட்டுப்பணத்தை வைப்பிலிட முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


நேற்றைய நிலவரப்படி, பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளன.


அத்தோடு உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.


நேற்று 10 அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்தன.


மாத்தளை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளது.


இதற்கு மேலதிகமாக சுதந்திர மக்கள் முன்னணி, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஜனசேத முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய சோசலிசக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனுக்களை நேற்று தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதேவேளை, கட்டுப்பணத்தை வைப்பிலிட்ட நாள் முதல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் சுமார் 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.


அரச அதிகாரத்தை பயன்படுத்தியமை தொடர்பில் கணிசமான எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.


அரசியல் பிரதிநிதிகள் எவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டாலும் தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை ஏற்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் பாதிக்கப்படலாம் என ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.


தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுடன் ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன.


வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் தேர்தலை தாமதப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்தார்.


எவ்வாறாயினும், இந்த சட்டமூலத்தின் ஊடாக தேர்தலை ஒத்திவைக்கும் விருப்பம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அரசியல் குழுக்களின் கருத்துக்கள் அடிப்படையற்றவை என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.