நுவரெலியா, நானுஓயா பகுதியில் நேற்று (20) இரவு அதிவேகமாக பயணித்த பஸ் ஒன்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

விபத்துக்குள்ளான பஸ்ஸில் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் 41 பேரும், அவர்களது பெற்றோர்கள் உட்பட 53 பேரும் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற 7 பஸ்கள் நுவரெலியாவிற்கு கல்வி சுற்றுலாவை முடித்துக்கொண்டு நேற்று (20) கொழும்பிற்கான பயணத்தை ஆரம்பித்திருந்தன.

 

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா, ரதெல்ல குறுக்கு வீதியில் இந்த 7 பஸ்களும் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது முன்னால் வந்த வேன் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் பஸ்ஸில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

 

பஸ்ஸின் அதிவேகம் காரணமாக பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பஸ்ஸின் சாரதி மற்றும் உதவியாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பஸ்ஸின் சாரதி கைது செய்யப்படவுள்ளதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதேவேளை, விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

 

இதன்படி, சிறு காயங்களுக்கு உள்ளான மாணவர்கள் அனைவரும் இன்று (21) விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.