(சுஐப் எம்,காசிம்)


நாட்டின் தேசிய இனப்பிரச்சினையில் அண்மைக்காலமாக இந்தியா எடுத்து வரும் அக்கறையை முஸ்லிம் கோட்பாட்டாளர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது,மற்றுமொரு அடிமைச்சாசனத்துக்கு அடிமையாகும் நிலையை ஏற்படுத்தப்போவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். 


அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் எழுதப்படும் வரை,இதுபோன்றதொரு அறியாமையில் முஸ்லி்ம் கோட்பாட்டாளர்கள் இருந்தனர். இதனால்,இதன் விளைவை இன்று வரை முஸ்லிம்கள் அனுபவிக்கின்றனர்.இந்த 13இல்,வழங்கப்பட்ட காணி,பொலிஸ் அதிகாரங்களே  ஒருமொழியைப் பேசும் சமூகங்களுக்குள்  சிறுபான்மை,பெரும்பான்மை எனும் வேறுபாடுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில்,இதனை மீண்டும் அமுல்படுத்துமாறு இலங்கை அரசுக்கு தொடர்ந்து இந்தியா அழுத்தங்களை  வழங்குவது குறித்து முஸ்லிம் கோட்பாட்டாளர்கள் கவனம் எடுப்பது அவசியம்.


பொலிஸ் அதிகாரங்களால் முஸ்லிம்களுக்கு பெரிதாக பிரச்சினைகள் ஏற்பட்டிராவிடினும், காணி அதிகாரங்கள்தான் இம்மாநிலங்களில் முஸ்லிம்களின் இருப்புக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தின.வடகிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த போதிலும்,தனியாகப் பிரிக்கப்பட்டிருந்த நிர்வாகங்களிலும் இதுகுறித்த நெருக்கடிகளை முஸ்லிம்கள் எதிர்கொண்டனர். எனவே,இவ்வாறான நிலைமைகள்  மீண்டும் ஏற்பட்டு ஒருமொழிச் சமூகங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்படாமல்,இச்சமூகங்களை வழிநடாத்தும் பொறுப்புக்களை ஒரு மொழிச் சமூகங்களது தலைமைகள் பாரமெடுப்பது அவசியம்.இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்தான்,இந்திய - இலங்கை ஒப்பந்த காலத்தில இலங்கைக்கான இந்தியத் தூதுவராக இருந்தவர். இதனால் இது குறித்த அனுபவங்கள் அவரிடம் அதிகமுள்ளன.இதைப் பயன்படுத்துவதில் தமிழ் தேசியம் உச்சளவு கவனம் செலுத்தியிருந்தன. 

ஆனால்,முஸ்லிம் கோட்பாட்டாளர்கள் இவரின் வருகையை இம்முறை கண்டுகொள்ளவில்லை.இதற்கான காரணங்கள்,பின்னணிகளை தெரிந்து கொள்வதில் முஸ்லிம் புத்தி ஜீவிகள் அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இச்சந்திப்புக்களில்,முஸ்லிம் கோட்பாட்டாளர்களைத் தவிர்த்துக் கௌ்ள தமிழ் தேசியம் விரும்பியதா?அல்லது முஸ்லிம் கோட்பாட்டாளர்கள் இதிலிருந்து அக்கறையிழந்து தேர்தல் காலத்துக் களியாட்டங்களில் காலங்கடத்தினரா?
இல்லையென்றால்,முஸ்லிம் கோட்பாட்டாளர்களையும் தமிழ் தேசியத்துக்குள் உள்ளடக்க இந்தியா விரும்புகிறதா இல்லை விரும்ப வைக்கப்படுகிறதா?அவ்வாறு விரும்பவைக்கப்படுவதானால்,அதற்குப்பின்னாலுள்ள பின்னணிகள் எவை?இவைகளைப் புரிந்துகொள்ள முஸ்லி்ம் கோட்பாட்டாளர்கள் கவனம் செலுத்துவது அவசியம்.இம்மாத இறுதியில் ,சர்வகட்சி மாநாடு கூட்டப்படவுள்ளதால்,அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதில் இந்தியா எடுத்து வரும் அக்கறை,செலுத்தி வரும் அழுத்தங்களை அறிவதைத் தவிர வேறு பணிகள் எதும் இந்த முஸ்லிம் கோட்பாட்டாளர்களுக்கு அவசியம் இல்லை.மேலும்,காலத்தை கைவிட்டு கூக்குரலிடுவதில் அர்த்தமும் இல்லை.காரணம்,நிறைவேற்று அதிகாரத்தால் நிறைவேற்றப்படவுள்ள விடயங்களே இவை, எனவே,பாராளுமன்றத்தில் இது குறித்து கவனம் செலுத்தலாம் என்ற எண்ணத்தில் முஸ்லிம் கோட்பாட்டாளர்கள் செயற்படவும் கூடாது,

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.