தினேஷ் சாப்டர், தற்கொலை செய்து கொண்டே உயிரை மாய்த்தார் ;  சி.ஐ.டி யினர் நீதிமன்றுக்கு விபரங்களுடன் அறிவித்தனர்

ஜனசக்தி நிறுவன பணிப்பாளரும் ,தொழிலதிபருமான தினேஷ் சாப்டர்,  தற்கொலை செய்து கொண்டே உயிர்மாய்த்திருப்பதாக தடயவியல் மற்றும் கைரேகை ஆதாரங்களுடன் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

அதேபோல கடன் பிரச்சினைகளால் ஏற்பட்ட  மனஅழுத்தம் காரணமாக , மருத்துவர் ஒருவரிடம் தொடர் சிகிச்சையினை தினேஷ் பெற்று வந்திருப்பதன் ஆதாரத்தையும் சி.ஐ.டி நீதிமன்றுக்கு சமர்ப்பித்துள்ளது.

டிசம்பர் 15 ஆம் திகதி தினேஷ் சாப்டர் பொரளை கனத்தையில் உயிரிழந்திருந்தாலும் , டிசம்பர் 10 ஆம் திகதி இதேபோன்ற முயற்சியொன்றை அவர் கனத்தையின் அதே இடத்தில் மேற்கொண்டிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கான சி.சி.ரி.வி குறிப்பிட்ட முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட அன்ரனா கேபிள்களை கடையில் கொள்வனவு செய்த தினேஷின் வீட்டுப்பணியாளர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அன்ரனா கேபிள்களை வாகன சீட் மற்றும் ஸ்டியரிங்கில் சுற்றி கழுத்தை – கைகளை இறுக்கும் வகையில் சுயமாக தற்கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் , குறிப்பிட்ட வாகனத்தில் தினேஷ் சாப்டரை தவிர வேறு எவரின் கைரேகைகள் இல்லாமையும் பொலிஸார் நடத்திய தீவிர புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்காரணமாகவே கழுத்து இறுகிய நிலையில் தினேஷ் குற்றுயிராக மீட்கப்பட்டதாக தடயவியல் பிரிவு உறுதி செய்திருப்பதாக தெரிகிறது.

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் அலுவலகத்தில் ஊடகங்களை தவிர்த்து நடந்த சாட்சியமளிப்பில் இந்த தகவல்கள் குற்றப் புலனாய்வுப்பிரிவினரால்  தினேஷ் சாப்டரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பில் 84 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அத்துடன் தினேஷ் சாப்டரின் நடத்தைகள் ,அவரின் குணாதிசயங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இது தொடர்பான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இறுதி அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.