தற்போது சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் தலைமை அலுவலகத்தையும் 05 ஜும்ஆப் பள்ளிவாசல்களில் கிளைகளையும் கொண்டு இயங்கும் நமது அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு வட்டியில்லா கடனுதவு நிறுவனமானது 28 அங்கத்தர்வர்களுடன் கடந்த 1996.05.19 ம் திகதி அப்போதைய மஜ்லிஸ் அஷ்ஷுறாவின் கண்ணியத்துக்குரிய அமீர் மர்ஹும். சேகுத் தப்லீக் அல்-ஹாஜ். மௌலவி. எம்.பி. அலியார் ஹஸரத் அவர்களது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து உயர் சபைகளான மஜ்லிஸ் அஷ்ஷுறா, நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யத்துல் உலமா சபை ஆகிய முற்சபைகளின் வழிகாட்டலின் கீழ் இந்நிறுவனம் இன்று வரை 19362 அங்கத்தவர்களையும், நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யதுல் உலமா, ஸகாத் பரிபாலன சபை, தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரி உட்பட பல முக்கிய நிறுவனங்களுடன் 1311 சங்கங்கள், அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் போன்றவைகளையும் அங்கத்தவர்களாகக் கொண்டு கடந்த 26 வருடங்களாக எமது மக்களுக்கு வட்டியில்லாது கடன் வழங்கி மகத்தான சேவையாற்றி வருகின்றது. இந்நிறுவனத்தின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை அதன் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் பங்காற்றிய அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக! ஆமீன்.

ஆரம்ப காலத்தில் இந்நிறுவனம் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் பதிவிலக்கத்தின் கீழும். அதன் பிற்பாடு ஒருங்கிணைந்த பாராளுமன்ற கூட்டிணைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியின் பதிவிலக்கத்தின் கீழும் செயற்பட்டு வந்தது. 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் எமது மக்களுக்கு ஏற்பட்ட அசாதாரண நெருக்கடியைத் தொடர்ந்து மக்களின் பணத்துக்கும், உடமைகளுக்கும் அரசு சட்டத்தின் கீழ் செயற்பட வேண்டும் என்றதொரு அவசியமான தேவையேற்பட்டதால் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் சிக்கன கடனுதவுக் கூட்டுறவுச் சங்கமாக கடந்த 2019ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதால் வட்டி என்ற பெரும் பாவத்துக்குள் குறித்த நிறுவனமும் உள்வாங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டில் எவ்வித உண்மையுமில்லை. மாறாக இதனால் அரச அங்கீகாரமும், மக்களின் வைப்புப் பணத்துக்கும், அடகுப் பொருட்களுக்கும் பாதுகாப்பு கிடைத்துள்ளது.

இன்று, இந்நிறுவனத்தின் ஆரம்ப வரலாறு தெரியாத ஒரு சிலரும், நாட்டின் பொருளாதார நிலமையை அறிந்து கொள்ளாத பலரும் இந்நிறுவனத்தினால் ஒரு சில வர்த்தகர்களுக்கு பெரும் தொகைப் பணம் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தற்போது குறித்த நிறுவனத்தின் கையிருப்பில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அங்கத்தவர்களுக்கு கடன் வழங்க முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளதாகவும் கதைகளைப் பரப்பி வருகின்றனர்.

இவ்வாறான கருத்துக்கள் சிலரால் பேசப்படுவது தொடர்பாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை மற்றும் உலமா சபை என்பவைகளின் நிருவாகிகள் அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு நிறுவனத்துக்கு நேரடியாகச் சென்று இவ்விடயங்களை ஆராய்ந்த போது பின்வரும் தெளிவுகள் எங்களுக்கு கிடைக்கப் பெற்றது. அதாவது 19,362 அங்கத்தவர்கள் மற்றும் நிறுவனங்களினால் வைப்புச் செய்யப்பட்ட சேமிப்புப் பணத்தினைக் கொண்டு கடந்த 2020ம் ஆண்டு 10,238 பேருக்கும், 2021ம் ஆண்டு 11,567 பேருக்கும் ரூபா. ஐயாயிரம் முதல் இரண்டு இலட்சம் வரை 6 மாத கால தவணை அடிப்படையில் கடன் வழங்கியுள்ளது.

இவ்வாறு கடன் வழங்கியும் கடந்த 2020 மற்றும் 2021 காலப்பகுதியில் கையிருப்பு அதிகமாகக் காணப்பட்டமையால், அப்போதிருந்த இயக்குணர் சபை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரமாக மட்டுப்படுத்தப்படிருந்த நகைக் கடனை இரண்டு இலட்சமாக உயர்த்தியதுடன், நிறுவனத்தின் அங்கத்தவர்களான வியாபாரிகளின் வேண்டுகோளைக் கருத்திற்கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை முதலீட்டுக் கடனாக வழங்குவதற்காக 6 1/2 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்து 121 வியாபாரிகளுக்கு உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு அத்தொகையை முதலீட்டுக் கடனாக வழங்கியுமுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட கடன் தொகையில் 31.12.2022 வரையில் 29 இலட்சத்துக்கும் குறைவான தொகையே மீதியாக வரவேண்டியுள்ளது. அத்தொகையும் அவர்கள் கடன் பெறும் போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி நாளாந்தம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இது போன்ற அதிகமான கையிருப்பு மீதி சென்ற 2015ம் ஆண்டு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகரித்த தொகைப் பணம் சுழற்ச்சியில்லாமல் தேங்கியிருப்பது மார்க்கத்தின் பார்வையில் பிழை என்பதனால் ஒரு இலட்சம் ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த நகைக் கடனை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரமாக உயர்த்தியதுடன் அக்காலப் பகுதியில் பெரியவெளி வட்டையில் 5 ஏக்கர் காணி வாங்கப்பட்டு நிறுவனத்தின் பெயரில் உறுதி எழுதப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்துக்குச் சொந்தமான அசையும், அசையாச் சொத்துக்கள் அனைத்தினதும் ஆவணங்கள் நிறுவனத்தின் பெயரிலேயே உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அக்காணி மூலம் இன்றுவரை சுமார் 32 இலட்சம் ரூபா குத்தகையாக கிடைக்கப் பெற்று, இப்பணமும் அங்கத்தவர்களுக்கு அன்பளிப்புடன் சேர்த்து முழுமையாகப் பகிரப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எமது அங்கத்தவர்களின் சேமிப்புத் தொகை கனிஷமாக குறைவடைந்து, சேமிப்பில் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை மீளப்பெறும் எண்ணிக்கையும் கனிஷமாக அதிகரித்துள்ளதுடன், கடன் பெற வருபவர்களின் எண்ணிக்கையும் கடந்த காலங்களை விடவும் இவ்வருடத்தில் அதிகமாக உள்ளது. இதனால் கடன் கேட்கும் அனைவரினதும் கோரிக்கையை ஏற்று அன்றைய தினத்திலேயே கடன் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில். சேமிப்பு செய்துள்ளவர்கள் கேட்கும் போது அவர்களது பணத்தை வழங்குவதற்காகவும் குறிப்பிட்ட தொகையை 05 கிளைகளிலும் கையிருப்பாக வைக்க வேண்டிய நிலையுமுள்ளது.

மேலும், இன்றைய நிலையில் எமது நாட்டில் பணப் பற்றாக்குறை என்பது இந்த நிறுவனத்துக்கு மாத்திரம் ஏற்பட்டுள்ள பிரச்சினையல்ல. ஏனைய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் இவ்வாறான பிரச்சினைகளை அன்றாடம் எதிர்கொண்டுதான் வருகின்றன. இது ஒரு பொதுவான பிரச்சினையாகும். இந்த நிலையிலும் 2022ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் இன்று வரை குறித்த நிறுவனத்தினால் 10,684 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள கடன் தொகையான சுமார் 121 கோடி ரூபா அங்கத்தவர்களால் கடனாக குறித்த நிறுவனத்துக்கு வரவேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன், இவ்வாறு கடன் வழங்கப்பட்டதால் எமது ஊர்மக்களின் பணத்தில் சுமார் 37 கோடி ருபா வட்டியாகச் செலுத்த வேண்டியதையும் இந்நிறுவனம் தடுத்துள்ளது என்பதாகவும் தெரிந்து கொண்டோம். மேலும் இவை அனைத்தும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினால் கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் ரீதியாக நாம் கண்ட - அறிந்த உண்மையான விடயமாகும்.

எனவே, தற்காலத்தில் பொருட்களினதும், சேவைகளினதும் விலையேற்றம் காரணமாக சகலரும் பணத்தேவை உடையவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதனால் தேவையுடைய ஏனையோரும் இந்நிறுவனத்தினால் பயன் அடைய வேண்டும் என்பதற்காக அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யுவில் கடன் பெற்றவர்கள் தங்களது தவணைக் காலமான ஆறு மாதங்கள் நிறைவடைந்ததும் தயவு செய்து தாங்கள் பெற்றுக் கொண்ட கடன் தொகையை அழகிய முறையில் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், வசதிபடைத்த செல்வந்தர்களே! அல்லாஹ் தங்களுக்கு வழங்கியுள்ள செல்வங்களில் ஒன்றான பணத்தில் ஒரு பகுதியையாவது வட்டியில்லாமல் எமது சகோதரர்களுக்கு கடன் வழங்கும் நோக்கில் நல்லெண்ணம் கொண்டவர்களால் - பாவத்திற்கு பயந்து உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தில் வைப்புச் செய்து அல்லாஹ்வின் அருளையும், அன்பையும் பெற்று தங்களது இம்மை, மறுமை வாழ்வுகளில் அபிவிருத்தியையும், பறக்கத்தையும் அடைந்து கொள்ளுங்கள். மேலும், தங்களால் இந்நிறுவனத்தில் சேமிப்பாக வைப்புச் செய்யப்படும் தொகைக்கு கடன் பெறுபவர்களால் வழங்கப்படும் ஹலாலான அன்பளிப்புக்கள் முழுமையாக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை சேமிப்பாளர்களின் கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என்ற நற்செய்தியையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.


அன்பான பொதுமக்களே!

தேவையற்ற ஒருசிலரால் ஆதாரமில்லாமல் அநாவசியமாக முன்வைக்கப்படும் கட்டுக் கதைகளை நீங்களும் நம்பி, அதனை பிறருக்கு சொல்வதால் இந்நிறுவனத்தில் வைப்புச் செய்துள்ளவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலமாக இந்நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயத்தில் நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதோடு, இதுதொடர்பான மேலதிக தெளிவுகள் தேவைப்படுவோர் அந்நிறுவனத்தின் கிளைகளுக்கோ அல்லது தலைமைக் காரியாலயத்துக்கோ நேரடியாகச் சென்று தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

நமது முன்னோர்களால் வட்டியின் விபரீதத்தில் இருந்து இவ்வூரையும், எமது மக்களையும் பாதுகாப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட நமது அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு நிறுவனத்தை மேலும் முன்னேற்றமடையச் செய்வதற்கு சம்மாந்துறை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் பங்களிப்பும் -ஒத்துழைப்பும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

'உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் மீளச்செலுத்துபவர் ஆவார்' (புகாரி)
 'கடன் கொடுப்பதன் மூலம் பதினெட்டு மடங்கு நன்மை கிடைக்கும்' (இப்னு மாஜா) 
 
'கேள்விப்பட்டதை எல்லாம் பரப்புவது அவன் பொய்யன் என்பவதற்கு போதுமான சான்றாகும்' (முஸ்லிம்)

நம்பிக்கையாளர் சபை,
பெரிய பள்ளிவாசல்,
சம்மாந்துறை
ஜம்இய்யதுல் உலமா,
நெல்லுப்பிடி சந்தி,
சம்மாந்துறை
2023.01.01

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.