(சுஐப் எம்,காசிம்)

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியோர் மீது சட்டமும்,நீதியும் நடவடிக்கை எடுத்துள்ளதால் நிரபராதிகள் ஆறுதலடைந்துள்ளனர்.ஆனால், அநாவசியக் கைது,சித்திரவதை, தடுப்புக்காவல் மற்றும் மத விரோதத்தை வௌிப்படுத்தும் வகையிலான பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பது யார்.?முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் இதற்காக முன்வராததையிட்டு, புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.இந்த அப்பாவிகள் மீது இவ்வாறான நெருக்கடிகளை ஏற்படுத்தத் தூண்டிய புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரிகளும் அடையாளங் காணப்பட்டு நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்கின்றனர் இவர்கள்.மட்டுமன்றி சமூக நிந்தனைகளைக் கருவாகக் கொண்டு திரிபுபடுத்தியும், மிகைப்படுத்தியும் செய்திகளை வௌியிட்ட ஊடகங்கள் மீதும் சட்டமும்,நீதியும் தலையிட வேண்டும் என்பதும் இவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.சமூக  நல்லிணக்கங்களைச் சீர்குலைக்கும் இந்தப் பாரிய தாக்குதலுக்கு பின்னால், மிகப்பெரிய அரசியல் பின்புலம் இருந்ததாக அப்போதைய சட்டமா அதிபர் டப்புலடிலிவேரா சந்தேகம் வௌியிட்டிருந்தார்.எனவே, இவர்களின் அசமந்தங்களால் ஏற்பட்ட இந்தத் தாக்குதல்,அப்பாவி முஸ்லிம்களின் இயல்பு நிலையை சில காலம் அலைக்கழிய வைத்ததை முஸ்லிம்கள் மறப்பதற்கில்லை. இன,மதவாதிகளுக்கு மிகச் சந்தர்ப்பமாகப் பயன்பட்ட இந்தத் தாக்குதலை வைத்து இஸ்லாமியர்களின் மத உணர்வுகள் கேலி செய்யப்பட்டன. பர்தா,ஹிஜாப்,ஹராம் மற்றும் ஹலால் போன்ற பேணுதலான வாழ்க்கையைக் கேலி செய்தும்,காயப்படுத்தியும் இனவாதிகள் ஆட்டம் ஆட இந்தத் தாக்குதலால் எழுந்த சூழ்நிலைகளே கால்கோளாகியிருந்தன.எனவே,அடிப்படை ஆதாரங்களின்றி இக்காலச் சூழ்நிலையில் முஸ்லிம்கள் மீது அநியாயமாக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களில் ஈடுபட்டோரின் முகத்திரையைக் கிழிப்பதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் முஸ்லிம் புத்திஜீவிகள் கோரியுள்ளனர்.இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி முஸ்லிம்களின்  சொத்துக்கள் சூறைாயடப்பட்டமை, உயிர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் உள்ளிட்ட சேதங்களுக்கு ஒரு தீர்வைக் கோரும் அல்லது நீதி கோரும் பிரகடனத்தை வௌியிட அரசியல் தலைமைகளோ அல்லது முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களோ முன்வருவது அவசியமானதாகும்.இழந்த உறவுகளுக்காக தமிழர்கள் காணாமல்போன அலுவலகம் கோருவதுடன்,அதற்கான சட்ட அங்கீகாரத்தையும் கோரி நிற்கையில்,ஈஸ்டர் தாக்குதலால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இன்னல்கல், மன உளைச்சல்களுக்கு இழப்பீட்டு நிதியம் அல்லது அலுவலகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதும் முஸ்லிம் புத்தி ஜீவிகளின் கோரிக்கையாக உள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.