இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்!

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய நிறுவனத்தின் 2 இருமல் மருந்துகளையும் தரமற்றவை என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம் (டபிள்யுஹெச்ஓ), அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சோ்ந்த மேரியன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அம்ப்ரோனால், டோக்-1 மேக்ஸ் ஆகிய இருமல் மருந்துகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மேரியன் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை முடக்கி, மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
உஸ்பெகிஸ்தானில் டோக்-1 மேக்ஸ் இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால், 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அண்மையில் குற்றம்சாட்டியது. அத்துடன், மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் ஏற்க இயலாத அளவில் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேரியன் பயோடெக் நிறுவனம், டோக்-1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் ஆகிய இருமல் மருந்துகளை, உஸ்பெகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மட்டுமான உரிமத்தைப் பெற்றதாகும். இந்தியாவில் இந்த இருமல் மருந்துகளை அந்நிறுவனம் விற்பனை செய்வதில்லை.

உரிமம் முடக்கம்: இதனிடையே, மேரியன் பயோடெக் நிறுவனத்தில், மத்திய-மாநில அதிகாரிகள் குழுவினா் வியாழக்கிழமை மீண்டும் ஆய்வு உற்பத்தி, அம்ப்ரோனால் மருந்தின் மாதிரிகளை சேகரித்தனா். மேலும், அந்நிறுவனத்தின் உற்பத்தி உரிமமும் முடக்கப்பட்டது. இதுகுறித்து கெளதம் புத் நகா் மருந்து ஆய்வாளா் வைபவ் பப்பா் கூறுகையில், ‘கடந்த டிசம்பா் 29 ஆம் திகதி உத்தரவின்படி, மேரியன் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், உரிமத்தை முடக்குவதற்கான எழுத்துபூா்வ உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அதனை அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. மத்திய அமைப்புகளால் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை’ என்றாா்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.