அதிக சம்பளம் வாங்குவது யார்..??

இன்றைய கால்பந்து உலகின் தலைசிறந்த 4 வீரர்கள் ஒரே போட்டியில் விளையாடியதைக் கண்ட மகிழ்ச்சியில் அரபு உலகம் திக்குமுக்காடிப் போயுள்ளது.


அந்த நான்கு பேரின் ஆட்டத்தைப் போலவே, அவர்கள் வாங்கும் சம்பளம் குறித்த ஒப்பீடும் கால்பந்து ரசிகர்களிடையே சுவாரஸ்யமாகப் பகிரப்படுகிறது. 



சர்வதேச கால்பந்து அரங்கில் கடந்த 2 தசாப்தங்களாகத் தவிர்க்க இயலாத பெயராக ரொனால்டோ - மெஸ்ஸி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். உலகின் மூலை முடுக்கெல்லாம் இருவரின் பெயர்களும் ரசிகர்களால் உச்சரிக்கப்படுகின்றன.



குறிப்பாக, ஸ்பெயினில் உள்நாட்டு கால்பந்து தொடரான லா லிகா போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோவும் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸியும் களமிறங்கிய ஆட்டங்கள் ரசிகர்களால் எக்காலத்திற்கும் மறக்க இயலாதவை.



ரியல் மாட்ரிட் - பார்சிலோனா இடையே அரசியல், கலாசாரம், வரலாற்று ரீதியாக இருக்கும் மோதல்கள் கால்பந்திலும் ரசிகர்களிடையே அப்படியே எதிரொலிப்பது உண்டு.



அந்த மோதலில் ரொனால்டோ - மெஸ்ஸி ஆகிய இருவரில் யார் சிறந்தவர் என்ற விவாதமும் சேர்ந்து கொள்ள இரு அணிகளும் மோதும் ஆட்டங்களில் அனல் பறக்கும். போட்டி தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே அந்த நாளை எதிர்பார்த்து உலகம் முழுவதுமே கால்பந்து ரசிகர்கள் கனவு காணத் தொடங்கி விடுவார்கள். 



ரொனால்டோ - மெஸ்ஸி ஆகிய இருவரும் எதிரெதிராக மோதும் ஆட்டங்களின் போது மைதானங்களில் மட்டுமின்றி, பெரிய திரைகள், தொலைக்காட்சிகள் வழியாகவும் நேரலையில் போட்டியைக் கண்டு களிக்கவும் ரசிகர்கள் திரண்டு விடுவார்கள். இதனால், பெரிய அளவில் கல்லா கட்டிவிட முடியும் என்பதால் தொலைக்காட்சிகளுமே மகிழ்ச்சி கொள்வார்கள். 



கால்பந்து உலகில் இருபெரும் ஜாம்பவான்கள் உச்சத்தில் இருந்தபோதே, மிக இளம் வயதில் புயலென நுழைந்தவர் எம்பாப்பே. 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்தேறிய உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பதின்ம வயதில் இருந்த எம்பாப்பே, தனது புயல் வேக ஆட்டத்தால் எதிரணிகளைக் கலங்க வைத்தார். 



குறிப்பாக, குரோஷியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியின் 65வது நிமிடத்தில் எம்பாப்பே அடித்த கோல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் இறுதிப்போட்டியில் கோல் அடித்த பதின்ம வயது இளைஞர் என்ற பட்டியலில் பீலேவுடன் அவர் இணைந்து கொண்டார். 



அது முதலே பீலே - எம்பாப்பே குறித்த ஒப்பீடும் ரசிகர்களிடையே தொடங்கிவிட்டது. ரொனால்டோ - மெஸ்ஸி ஆகிய இருவருமே ஏற்கெனவே கால்பந்து வாழ்க்கையின் உச்சத்தைத் தொட்டு 30 வயதைத் தாண்டிய மூத்த வீரர்களாகி விட்டதால், கால்பந்து உலகின் எதிர்காலம் இனி இவரே என்று நிபுணர்களால் கணிக்கப்பட்டார். இவ்விதம், கால்பந்து உலகிற்குத் தனது வருகையை அழுத்தமாகப் பதிவு செய்த எம்பாப்பே, பின்னாட்களில் நிபுணர்களின் கணிப்புகளையும் மெய்யாக்கினார்.



கத்தாரில் நடந்து முடிந்த உலகக்கோப்பையில் ரொனால்டோ - மெஸ்ஸியுடன் எம்பாப்பேவும் கவனிக்கப்படும் வீரராக இருந்தார். ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி காலிறுதியுடன் மூட்டை கட்ட, அந்த அணியின் கடைசி இரு போட்டிகளில் அவருக்குத் தொடக்கத்திலேயே களமிறங்கவே வாய்ப்பு தரப்படவில்லை. 



2014ஆம் ஆண்டில் அர்ஜெண்டினாவுக்கு தலைமையேற்று அரையிறுதி வரை அழைத்துச் சென்ற மெஸ்ஸி, இம்முறை கோப்பையை வென்று தனது வாழ்நாள் கனவை நனவாக்கிக் கொண்டார்.



அர்ஜெண்டினாவுக்கு கோபா அமெரிக்கா கோப்பையை ஏற்கெனவே வென்று கொடுத்துள்ள மெஸ்ஸியை மாபெரும் நாயகனாக அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 



எம்பாப்பேவுக்கு இது இரண்டாவது உலகக்கோப்பையாக அமைந்தது. நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களம் கண்ட பிரான்ஸ் அணி இறுதிப்போட்டி வரை சென்று, அர்ஜெண்டினாவிடம் கடைசி வரை போராடி டை பிரேக்கரில் தோற்றுப் போனது.



எனினும், 2-0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த பிரான்சுக்கு, ஆட்டத்தின் பிற்பாதியில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து உயிரூட்டியவர் எம்பாப்பேதான். இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அவர் அசத்தினார்.



கடந்த உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்தவர் எம்பாப்பே தான். அதிலும் இறுதிப்போட்டியில் கடைசி விநாடி வரை அவர் கடுமையாகப் போராடிய விதம் உலகெங்கும் தேச எல்லைகளைக் கடந்து கால்பந்து ரசிகர்களை கவர்ந்தது.



போட்டி முடிவில் மைதானத்திலேயே தேம்பித் தேம்பி அழுத அவரை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனே நேரில் வந்து ஆற்றுப்படுத்தினார். 



ஐரோப்பிய கிளப் போட்டிகளில் மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ, அணி நிர்வாகத்தை விமர்சித்து அளித்த பேட்டி, உலகக்கோப்பையின்போதே பெரும் விவாதப் பொருளாக மாறியது.



கடந்த உலகக்கோப்பையும் மகிழ்ச்சி தராமல் போக, எதிர்பார்க்கப்பட்ட படியே, சௌதி அரேபியாவை சேர்ந்த அல்-நாசர் அணிக்காக விளையாட அவர் ஒப்புக் கொண்டார். 



இதற்காக, கால்பந்து வரலாற்றில் இதுவரை யாருமே நினைத்துக்கூடப் பார்க்காத ஊதியத்தை ரொனால்டோவுக்கு அள்ளிக் கொடுக்க சவுதி அரேபியா கிளப் முன்வந்தது.



அதன்படி, ரொனால்டோவுக்கு அல்-நாசர் அணி ஆண்டொன்றுக்கு சுமார் 1,800 கோடி ரூபாயை ஊதியமாகக் கொடுக்கிறது. அல்-நாசர் அணிக்காக இரண்டரை ஆண்டு காலம் விளையாடவுள்ள ரொனால்டோ அதற்காக, சுமார் 4,400 கோடி ரூபாயை ஊதியமாக பெறுவார். 



பார்சிலோனா அணியின் பெருமைமிகு தயாரிப்பாகப் பார்க்கப்பட்ட மெஸ்ஸி, அந்த அணிக்காக நீண்ட காலம் விளையாடிய பிறகு யாருமே எதிர்பாராத வகையில் 2021ஆம் ஆண்டு பிரான்சை சேர்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார்.



கடந்த நவம்பரில் வெளியான ஃபோர்ப்ஸ் இதழ் தகவலின்படி, ஆண்டோன்றுக்கு சுமார் 530 கோடி ரூபாயை அவர் ஊதியமாகப் பெறுகிறார்.



2017ஆம் ஆண்டு பார்சிலோனா அணியில் இருந்து நெய்மரை சுமார் 2,200 கோடி ரூபாய் டிரான்ஸ்பர் தொகை செலுத்தி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வாங்கியதை கால்பந்து உலகமே வியந்து பார்த்தது. அப்போதைய நிலையில் மிக அதிக ஊதியம் பெற்றவராகத் திகழ்ந்த நெய்மர் அடுத்து வந்த ஆண்டுகளில் பின்தங்கிப் போனார்.



நெய்மருடனான ஒப்பந்தத்தை 2025-ம் ஆண்டு வரை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி புதுப்பித்துள்ளது. அவர் ஆண்டுதோறும் சுமார் 450 கோடி ரூபாயை ஊதியமாகப் பெறுகிறார் என்கிறது ஃபோர்ப்ஸ் இதழ்.



கால்பந்து உலகில் இளம் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் கிலியான் எம்பாப்பே ஊதிய விஷயத்தில் ஏற்கெனவே ஒருமுறை மெஸ்ஸி, ரொனால்டோவை விஞ்சிவிட்டார். ஃபோர்ப்ஸ் அறிக்கை அடிப்படையில் பார்த்தால், அவர் ஆண்டோன்றுக்கு ஊதியமாக சுமார் 890 கோடி ரூபாயை ஈட்டுகிறார்.



அல்-நாசர் அணியுடனான ரொனால்டோவின் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு வரை எம்பாப்பே தான் உலகில் அதிக ஊதியம் பெறும் கால்பந்து வீரராகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



தற்போதைய நிலையில், ஊதியத்தின் அடிப்படையில் மெஸ்ஸி, எம்பாப்பே ஆகிய இருவரைக் காட்டிலும் ரொனால்டோ மிக உச்சத்தில் இருக்கிறார்.



எனினும், இந்த ஆண்டு பி.எஸ்.ஜி. அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, சௌதி அரேபிய கிளப் போட்டிகளில் விளையாட மெஸ்ஸி தீர்மானித்தால், ரொனால்டோவை அவர் மிஞ்சக் கூடும். இதுதொடர்பாக, ஏற்கெனவே பலவாறாக செய்திகள் உலா வருகின்றன. 



மறுபுறம், கால்பந்து உலகில் இளம் நட்சத்திரமாக வலம் வரும் எம்பாப்பேவை இழுக்க எவ்வளவு வேண்டுமானாலும் கொட்டிக் கொடுக்க பல்வேறு கிளப் நிர்வாகங்கள் தயாராக இருப்பது கண்கூடு.



கால்பந்து வரலாற்றையே திருத்தி எழுதும் திறமையும் இளமையும் கொண்டவராகப் பார்க்கப்படும் எம்பாப்பே, பல சாதனைகளைப் படைப்பது மட்டுமின்றி ஊதியம் பெறுவதிலும் பல உச்சங்களைத் தொடுவார் என்று கால்பந்து நிபுணர்கள் கணித்துள்ளனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.