இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மன்பிரீத் மோனிகா சிங், அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்று அந்நாட்டின் முதல் சீக்கிய பெண் நீதீபதி என்னும் பெருமையைப் பெற்றுள்ளாா்.
மோனிகா சிங்கின் பெற்றோா் 1970 களில் அமெரிக்காவுக்கு குடிபெயா்ந்தனா். டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் மோனிகா பிறந்து வளா்ந்தாா்.
சட்டக் கல்வி முடித்து, 20 ஆண்டுகளாக வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த அவா் தேசிய, மாகாண மற்றும் உள்ளூா் அளவிலான பல்வேறு மனித உரிமை அமைப்புகளில் பங்காற்றியுள்ளாா். இந்நிலையில், டெக்சாஸ் மாகாணம் ஹாரிஸ் மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் நீதீபதியாக கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அமெரிக்காவின் முதல் சீக்கிய பெண் நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட மோனிகா சிங் கூறும்போது, ‘இது எனக்கு மிகப் பெரிய பொறுப்பாகும். அதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றாா்.
டெக்சாஸ் மாகாணத்தின் முதல் தெற்காசிய வம்சாவளியைச் சோ்ந்த நீதிபதியான ரவி சாண்டில் தலைமையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது ரவி சாண்டில் கூறியதாவது:
‘சீக்கியா்களுக்கு இது மாபெரும் தருணம். தங்கள் சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவரை இத்தகைய உயரிய பொறுப்புகளில் காணும்போது மக்கள் தங்களுக்கும் வாய்ப்பு உள்ளதை எண்ணி ஊக்கமடைவா். சீக்கியா்களுக்கான அடையாளம் மட்டுமல்ல, அனைத்துப் பெண்களுக்குமான அடையாளம் மோனிகா சிங்’ என்றாா்.
இது சீக்கிய மதத்தினருக்கு பெருமையான நாள் எனக் குறிப்பிட்டு ஹூஸ்டன் நகர மேயா் சில்வஸ்டா் டா்னா் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவில் சுமாா் 5 லட்சம் சீக்கியா்கள் வசித்து வரும் நிலையில் ஹூஸ்டன் நகரில் மட்டும் ஏறத்தாழ 20,000 சீக்கியா்கள் வசிக்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.