வடகிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.
மன்னார், சிலாவத்துறையில் கடற்படை வியாபித்துள்ள காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். 

சர்வ கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் மு.கா. தலைவர்  ஹக்கீம் வேண்டுகோள் 

மக்கள் பரம்பரையாக வசித்து வந்த கிராமங்களுக்கு அப்பால்  அவற்றிற்குத் தொலைவில் அவர்கள் செய்கை பண்ணிய காணிகளும் உரியவர்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மன்னார், சிலாவத்துறையில் கடற்படை முகாம் அமைந்துள்ள பிரதேசமும் விடுவிக்கப்பட்டு சொந்தக்கார்களிடம்  மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
சர்வகட்சிக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் வியாழக்கிழமை (26) மாலை நடைபெற்றபோதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி அவர்களே, நாட்டில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள், 1985ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வரைப்படத்திற்கு ஏற்ப கிராமங்களின் அமைவிடங்கள்  கண்டறியப்பட்டு அவை ஏதாவதொரு காரணத்தினால் மக்களிடமிருந்து பறிபோயிருந்தால் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைப்பதாக இங்கு கூறினீர்கள். 

முஸ்லிம்களைப் பொறுத்தவரை வட கிழக்கில் அவர்கள் வசித்து வந்த கிராமங்களுக்கு அப்பால் தொலைவில் நிலங்களை சிரமப்பட்டு துப்புரவு செய்து நீண்ட காலமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்தனர். நாடு சுதந்திரமடைவதற்கு முன்னர் இருந்தே இவ்வாறான காணிகளில் அவர்கள் பயிர்ச்செய்கை, விவசாயம் செய்து வந்துள்ள நிலையில் அவற்றின் உறுதிப்பத்திரம் அல்லது அனுமதிப்பத்திரம் ஆகியவற்றையும் வைத்திருக்கின்றனர். 

அவ்வாறிருக்கத்தக்கதாக , 2005 – 2006 ஆண்டு காலப்பகுதியில் அவ்வாறான பல்லாயிரம் ஏக்கர் காணிகள் வனபரிபாலனத்திணைக்களம், வன விலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் போன்றவற்றால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவற்றிற்கு உரித்தானவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் புதர்கள் மண்டி பற்றைக்காடுகளாகவும் அவை காணப்டுகின்றன. அவை சிறிய காடுகளாக மாறியுள்ளன. கமநல சேவைத் திணைக்களமும் இதனோடு சம்பந்தப்படுள்ளது.

அக்காணிகளைப் பயன்படுத்தி அவற்றில் நீண்டகாலமாக செய்கை பண்ணிவந்தவர்கள் அவற்றில் பிரவேசிப்பதற்கு தடுக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தந்த மாவட்டச் செயலாளர்கள்அவற்றை உரிய மக்களுக்கு மீளக் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பல வருடங்களாக இந்த விடயத்தை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். அந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

சிலாவத்துறை ஆக்கிரமிப்பு

மன்னார் மாவட்டத்தில் , சிலாவத்துறையில் பொது மக்களுக்கு சொந்தமான பெருமளவு காணிகள் நீண்டகாலமாக ஆக்கிரமிக்கப்பட்டு அந்தப் பிரதேசத்தில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சிலாவத்துறை கடை வீதி உட்பட பெரும்பாலான நிலப்பரப்பு அதற்காகக் கபளிகரம் செய்யப்பட்டுள்ளது. கட்டிடங்களுடன் அரண்களும் வேலிகளும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

இதனையும் அரசாங்கத்திடம் நெடுங்காலமாக சுட்டிக்காட்டி வந்துள்ளோம். இவ்வாறாக குறிப்பாக வட கிழக்கில் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிப்பது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும்  மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.