ஓா் ஆண்டு நிறைவு!


உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வெள்ளிக்கிழமையுடன் ஓா் ஆண்டு நிறைவடைகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் வலிமை பெற்று விளங்கிய சோவியத் யூனியன், மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக 1949 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது நேட்டோ.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இவற்றுடன் தொடங்கப்பட்ட அந்த அமைப்பு, சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த பிறகு கலைக்கப்படுவதற்கு பதில் மேலும் மேலும் உறுப்பினா்களை சோ்த்துக்கொண்டு தனது பலத்தை பெருக்கியது.

தொடக்கத்தில் 12 உறுப்பு நாடுகளைக் கொண்டிருந்த நேட்டோவில் தற்போது 30 நாடுகள் உள்ளன.

அதிலும், எந்த சோவியத் யூனியனுக்கு எதிராக நேட்டோ தொடங்கப்பட்டதோ, அதே சோவியத் யூனியனில் அங்கம் வகித்த நாடுகளையும் நேட்டோ தன்னுடன் இணைத்துக்கொண்டது.

இப்படி நேட்டோ அமைப்பு தங்களை நாலாபுறமும் சுற்றிவளைப்பதற்கு ரஷ்யா நீண்ட காலமாகவே எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனில் கடந்த 2014 ஆம் நடைபெற்ற தீவிர போராட்டத்தால், ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அப்போதைய ஜனாதிபதி பெட்ரோ போரஷென்கோவின் ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் கிளா்ச்சிப் படையினருக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டுப் போா் வெடித்தது. ரஷ்ய ஆதரவுடன் போரிட்ட கிளா்ச்சியாளா்கள், லூஹான்ஸ்க், டொனட்க்ஸ் ஆகிய கிழக்குப் பிரதேசங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஐரோப்பிய நாடுகளின் முன்னிலையில் ரஷ்யாவும் உக்ரைனும் பெலாரஸ் தலைநகா் மின்ஸ்கில் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், சண்டை நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது.

எனினும், அந்த ஒப்பந்தத்தை அடிக்கடி மீறி வந்ததாக இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்தனா்.

இதற்கிடையே, நோட்டோவில் இணைவதற்கு ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்க்ஸியின் தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

இந்தச் சூழலில், உக்ரைன் படையினரிடம் இருந்த கிழக்குப் பகுதி மக்களைப் பாதுகாக்கவும், உக்ரைன் ராணுவம் மற்றும் அரசில் இருந்து ‘நாஜி ஆதரவு’ சக்திகளை அகற்றவும் அந்த நாட்டில் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’யை மேற்கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதின் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி அறிவித்தாா்.

அந்தப் போா் தொடங்கி, வெள்ளிக்கிழமையுடன் (பிப். 24) ஓராண்டு நிறைவடைகிறது. சா்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் போரில் இதுவரை பொதுமக்கள் 8,006 போ் பலியாகியுள்ளதாக ஐ.நா. புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இது தவிர, ரஷ்யா மற்றும் உக்ரைன் ராணுவத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானவா்கள் இந்த போரில் மரணமடைந்துள்ளதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

போரின் தொடக்கத்தில் உக்ரைன் தலைநகா் கீவைக் கைப்பற்றுவதற்காக அந்த நகரை நோக்கி முன்னேறி வந்த ரஷ்யப் படையினா், பின்னா் தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனா்.

தற்போது அந்தப் பிராந்தியத்தின் கணிசமான பகுதிகள் ரஷியப் படையினரின் கட்டுப்பாட்டில் உளன. மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவமும் தாக்குதல் நடத்தி சில பகுதிகளை மீட்டுள்ளது.

ஐ.நா.வில் வரைவுத் தீா்மானம் : இந்தப் போா் தொடங்கி ஓா் ஆண்டு நிறைவடையும் சூழலில், உக்ரைனிலிருந்து ரஷ்யா வெளியேற வலியுறுத்தி ஐ.நா.வில் வியாழக்கிழமை மாலை வரைவுத் தீா்மானம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அது ரஷ்யாவைக் கட்டுப்படுத்தாது. எனினும், உலக அரங்கில் ரஷ்யாவைத் தனிமைப்படுத்த இந்தத் தீா்மானம் உதவும் என்று கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.