தலைமைத்துவம் பண்பு கொண்ட பெண் (சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு) - Ahamed Bisthamy

தலைமைத்துவம் பண்பு கொண்ட பெண்

  பெண் என்ற எண்ணக்கருவுக்கு concept உயிரியல் Biological நிலை சார்ந்த இயல்புடன் மட்டுமன்றி சமூக கட்டமைப்புடனும் social Structure கட்டிறுக்கமான தொடர்பு கொண்டுள்ளது. இவற்றுடன் இணைந்ததாக “பெண் கல்வி” woman education எனும் சிந்தனை அவளை இன்னும் பலமானவளாக strongest மாற்ற உறுதுணையாய் நிற்கின்றது.

உலக சனத்தொகையில் population ஆண்கள் போலவே பெண்களும் சரியாக அரைவாசி இடத்தை நிரப்பியுள்ளனர். சர்வதேச அளவில் தொழிற்சந்தையிலும் World of work பெண்கள் கணிசமான பங்கை பிடித்துள்ளனர். இவை தவிர சமூக செயற்பாட்டுத்தளங்களிலும் Social activities பெண்களின் பங்குபற்றலானது கடந்த பல தசாப்தங்களாக கணிசமான அளவு அதிகரித்தே வந்துள்ளன. பெண்குலத்தின் விளிப்புணர்வும் சமூக ஈடுபாடும் அவளை செயற்பாட்டாளராக மாற்றியுள்ளது. 

        இஸ்லாம் பெண்களை சுதந்திரமாக விட்டுள்ளது. Freedom இது மேற்குலகு நினைப்பது போல எல்லையற்ற சுதந்திரம் அல்ல. அல்லது சில மதங்கள் வழங்கியுள்ளது போல  விரல்விட்டெண்ண முடியுமான  அற்பமான ஒன்றிரண்டு சுதந்திரமும் அல்ல. வாழும் சுதந்திரம், கற்கும் சுதந்திரம், தொழில் செய்யும் சுதந்திரம், திருமணம் முடிக்கும் சுதந்திரம், பேச்சு, எழுத்து, கருத்து என்று இது விரிந்து செல்கிறது. இஸ்லாம் பெண்களை போஷிக்கிறது.

அவளது விருப்புகளை மதிக்கிறது. உணர்வுகளுக்கு பெறுமானம் கொடுக்கிறது. அவளது கனவுகளை, அபிலாஷைகளை கருத்தில் கொள்கிறது. அவளது திறமைகளை வளர்க்க அனுமதி தந்துள்ளது. பல்கீஸ் மகா ராணி ஓர் அரசையே அழகாக நிர்வகித்து வந்தமையும் இது கண்டு சுலைமான் நபியே மெய் சிலிர்த்து போனமையும் அல்குர்ஆன் சொல்கின்ற அழகிய கதையாகும். பெண் தலைமைத்துவம் (women leadership) என்று இன்று உலகம் பேசுகின்ற விடயம் தொழில், நிர்வாகம் சார் தலைமைத்துவம் மட்டுமன்றி அவளது இயல்பான திறமைகள் அமுலாக்கப்ப்படுமிடங்களான வீட்டுப்பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு இவை போன்ற விடயங்களிலும் இதனை கண்டு கொள்ளலாம்.

பாலர் பாடசாலைகளை நடாத்துவதில் ஆண்களை விட பெண்களே கைதேர்ந்தவர்கள். சிறார்களை வழிநடாத்துவதிலும் அவர்களை நெறிப்படுத்துவதிலும் வல்லவர்கள் அவர்கள். இங்கு அவர்களின் தலைமைத்துவப்பண்பு வெளிப்படும். அதே போல ஆரம்ப வகுப்புகளுக்கு சேரும் மாணவர்களை கற்றலில் மட்டுமன்றி சகல வெளிக்கள துறைகளிலும் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் மேம்படுத்தி விடுவதில் பெண் ஆசிரியைகளின் பங்களிப்பு மகத்தானது. வளரிளம் பிள்ளைகளையும் கூட பெரும்பாலும் தந்தையால் வளைத்துப்பிடிக்க முடியாது. ஆனால் தாய்மாரின் திறமைகள், லாவகமான அணுகுமுறைகள், அன்பு நிறைந்த வார்த்தைகள்  சிறார்களை நெறிப்படுத்த பெரும்பாலும் உதவும். 
  
     பெண்கள் தலைமைத்துவத்துக்கு வர முடியுமா? முடியாதா? என்ற சூடான காரசாரமான விவாதங்களை தாண்டி பெண் எனும் உயர்ந்த ஆளுமைகள் பலரையும் வரலாறு நெடுகவும் உலகம் பிரசவித்துள்ளது. பாடசாலை மட்டத்தில்  தனது கல்வி வாழ்வில் மிகச்சிறந்த கற்றல் பேறுகளை பெற்று பெற்றோருக்கும் பாடசாலைக்கும் ஊருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் பெண்களை நாம் மறந்து விடக்கூடாது. வகுப்புத்தலைவிகளாக இருந்து, மாணவத்தலைவிகளாக இருந்து பெண்கள் ஆற்றுகின்ற சேவைக்களும் இங்கு நினைவு கூறத்தக்கது. திருமணத்தின் பின் தனது கணவனுக்கு சிறந்த மனைவியாக நின்று வீட்டு சூழலை அழகாக அமைதியாக ஆரோக்கியமாக வைத்திருப்பதும் அவளது தலைமைத்துவப்பண்பின் வெளிப்பாடே தான்.

தனது பிள்ளைகளை மிகச்சிறந்த மா மனிதர்களாக மாற்றுவது அவளது வீட்டுச்சூழலில் தனது சிறந்த தலைமைத்துவத்தை நிரூபிக்கும் ஒரு அரிய  ஆரம்ப சாதனையாகும்.

   தந்தை வீட்டில் இல்லாத போது தனது பிள்ளைகளுக்கு பாடங்களை, தையல், சமையல் இதர கலைகளை கற்பிப்பது சிறந்த எதிர்கால ஆளுமைகளை வீட்டிலே உருவாக்கும் உயர்ந்த செயற்பாடுகளும். வெள்ளித்திரைக்கு முன்னால் கதிரை சூடாகும் வரை அமர்ந்து கரிச்சட்டி எரிந்து போகும் வரை வைத்த கண் வாங்காமல் விழி பிதுங்க தொடர் நாடகம் பார்க்கும் இல்லத்தரசிகளை விட சமூகத்துக்கு நல்லறம் புரிகின்ற மனிதர்களாக தனது வாரிசுகளை மாற்ற வேண்டும் என்று இராப்பகலாய் பாடுபடுகின்ற பெண்களும் தமது பிள்ளைகளுக்கு சிறந்த தலைமைத்துவப்பண்புகளை கையளிக்கின்றனர். மேற்படிப்பு, ஆங்கிலக்கல்வி, கணணி அறிவு இவை எதுவுமே இல்லாவிடினும் கூட வீட்டில் முன்மாதிரியான மனைவியாக தாயாக மருமகளாக இருப்பதே இத்தகைய இயல்பான பண்புகள் இளந்தலைமுறைக்கு இலவசமாக கடத்தப்படப் போதுமானது.  

  
   பெண்ணின் செயற்களம் வீடு என்றிருந்த நிலை மாறி இன்று அவள் வீட்டுக்கு வெளியிலும் தனது திறமைகளை ஆற்றல்களை ஆளுமைகளை வளர்த்து காத்திரமான பங்களிப்புகளை வழங்கக் கூடிய சூழமைவு உருவாகியுள்ளமை பாராட்டத்தக்கது. பெட்டிப்பாம்பாய் அவளை அடைத்து வைத்து தந்தையும் கணவனும் மகுடம் ஊதும் போது வெளி வருகின்ற நிலைமை இப்போது அவளுக்கு இல்லை. அவளை அப்படி அடைத்து வைத்து அவளது சுதந்திரத்தை மட்டுப்படுத்தி வைக்கும் படி இஸ்லாம் எங்குமே சொன்னது கிடையாது. முதல் மனிதன் ஆதமை படைத்தது முதல் சுவன வாழ்வில் பங்கெடுக்க ஹவ்வா அவர்களையும் படைத்தமை இங்கு நோக்கத்தக்கது. பெண்ணுக்கும் எல்லையற்ற ஆற்றல்களை அல்லாஹ் வழங்கியுள்ளான். அவளது இயல்பான பலவீன நிலை தவிர்ந்த ஏனைய காலங்களில் அவளால் உத்வேகத்துடன் செயற்பட முடியும்.

   பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை, கடமைகளை பொறுத்த வரை அவளாலும் மிகப்பலமான சமூகப்பணிகளை ஆற்ற முடியும். பாடசாலை மட்டத்திலும் பல்கலைக்கழக மட்டத்திலும் குடும்ப மட்டத்திலும் நடைபெறுகின்ற தலைமைத்துவ பயிற்சி நெறிகளில் பங்கேற்பது அவை சார்ந்த நூல்களை வாசிப்பது போன்றன தலைமைத்துவ பண்புகளை இன்னும் அதிகரிக்கும். வாரத்தில் ஒருமுறையாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தலைப்பில் உரையாடுவது,தமது திறமைகளை வெளிப்படுத்தும் குடும்ப மன்றங்களை நடாத்துவது, கருத்து பரிமாறுவது வீட்டை கலகலப்பாக மட்டுமன்றி களிப்புடனும் களைப்பின்றி வேளை செய்யும் இடமாகவும் மாற்றி அமைக்கும்.

தவிரவும் முதலுதவி சிகிச்சைகள் (first aid) தொடர்பான அடிப்படை அறிவை பெற்றுக்கொள்வது வீட்டில் நடைபெறும் சிறிய விபத்துக்களின் போது பதற்றமடையாமல் இருக்க துணை நிற்கும். சில ஆண் ஸஹாபிகளுக்கு பாடம் நடத்திய பெருமை ஆயிஷா நாயகியை சாரும். அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள். சிறந்த பேச்சாளராக இருந்துள்ளார்கள். முன்மாதிரி வீட்டுப்பெண்ணாகவும் இருந்துள்ளார்கள். இன்று எமது நாட்டில் விஷேட பெண் மருத்துவர்கள், பெண் உளவள நிபுணர்கள், பெண் நிர்வாகிகள், பெண் பேச்சாளர்கள், பெண் எழுத்தாளர்கள், பெண் ஆய்வாளர்கள், பெண் செயற்பாட்டாளர்கள், பெண் மொழிபெயர்ப்பாளர்கள், பெண் தாதிகள் மிகவும் சொற்பமானவர்கள் தான் உள்ளனர். முன்வருகின்ற அதிகமானவர்கள் ஆசிரியைகளாக இருந்து எந்த முன்னேற்றமும் இன்றி ஓய்வு பெறுகின்றனர்(pension).

    இந்த நிலையை மாற்றி பெண்களுக்கு வழிகாட்டுகின்ற குறிப்பான வெற்றிடங்களுக்கு இஸ்லாமிய அறிவுப்பின்புலம் கொண்ட பெண்களை கொண்டுவரும்போது சமூக உருவாக்கம் சாதகமாய் அமையும். பெண்ணை உதறித்தள்ளி அவளுக்கு எல்லையற்ற தடைகளை போட்டு இல்லத்தை ஆளவிடாமல் அவளது இயல்பான திறன்களை சமூக நலப்பணிகளில் பயன்படுத்த ஆண்குலம் உதவி ஒத்தாசை வழங்க வேண்டும்.   
                 
       பெண்களின் தலைமைத்துவப்பண்புகளை இனங்கண்டு அவற்றை வளர்த்து விருத்தி செய்து களத்தில் பயன்படுத்த அவகாசம் வழங்க வேண்டும். ஆண்களால் மட்டுமே அபூர்வமான மாற்றங்கள் நிகழ வேண்டும் என நினைப்பது அறிவுக்கு அப்பாற்பட்டது. அது அவர்களுக்கு இழைக்கின்ற மாபெரும் அநீதமாகவும் வரலாற்று ஓரங்கட்டலாகவும் அமையும். உலகிலேயே முதலாவது முlறையாக பெண்ணை பிரதமராக்கிய பெருமையை கொண்ட நாடு இது. எனவே பெண்களின் உயர்வை தடுத்து நிறுத்துகின்ற கண்ணாடித்தடைகளை(glass ceiling) அகற்ற வேண்டும். பெண்கள் பற்றிய பால் நிலை புலக்காட்சிகளை அகற்ற வேண்டும். கலாசாரத்தின் பெயரில் நிகழும் பொய்மையான தடைகளை களைய வேண்டும். பெண்ணால் ஆற்றப்பட முடியுமான அத்துனை பணிகளையும் ஆற்றுவதற்கு அடிப்படை கடமைகளுக்கு முரண்படாத வகையில் ஆற்றுவதற்கு அவளுக்கு இடம் தர வேண்டும்.இதுதான் நியாயமான பெண் சுதந்திரமாகும்.   

 *Ahamad Bisthamy* 
7/3/2023
(சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு)


கருத்துகள்