- ஐ.ஏ. காதிர் கான் -

   ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள,  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய அத்துடன் அப்பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மற்றும் தகுதிகாண் மாணவர்களைப் பாராட்டி விருது வழங்கும் விழா, இன்று   (12/03/2023) ஞாயிற்றுகிழமை  காலை 9.00 மணி முதல், ம/மா/க/ தேவஹூவ முஸ்லிம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெறுகின்றது. 
   இச்சிறப்பு விழாவில், பிரதம அதிதிகளாக  சிரேஷ்ட மூத்த ஊடகவியலாளரும் நாடறிந்த பிரபல  எழுத்தாளருமான  "கலாபூஷணம்"  எம்.ஏ.எம். நிலாம் (ஈழத்து நூன்) மற்றும் தென்கிழக்குப்  பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.எம் நபீஸ் உள்ளிட்ட பாடசாலை அதிபர் எம். ஐ. இம்தியாஸ் மொஹமத், தினகரன் வாரமஞ்சரி "கவிதைப்பூங்கா" முன்னாள் பொறுப்பாசிரியரும் கண்டி கல்வி வலய ஆலோசகரும் அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளன தேசிய அமைப்பாளருமான ரஷீத் எம். றியாழ், முஸ்லிம் மீடியா போரத்தின் மாத்தளை மாவட்ட இணைப்பாளரும்  அ.இ.இ.எ.ச. தலைவருமான எம். நிஜாமுதீன், கம்பஹா மாவட்ட வெகுஜனத்தொடர்பு கொத்தணியின் செயலாளரும் அ.இ.இ.எ.ச. செயலாளருமான மௌலவி ஐ.ஏ. காதிர் கான், மூத்த பிரபல எழுத்தாளர் கலைவாதி கலீல், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியத்துறை மற்றும் சமூக சேவைப்பணிகளில் ஈடுபாடு கொண்டவர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
    நடைபெறும் இவ்வழாவில்,  பாடசாலை மாணவர்கள் மத்தியில் வாசிப்புத் திறனை விருத்தி செய்யும் நோக்கில் கட்டுரை, கவிதை, பேச்சு மற்றும் இலக்கியச் சொற்பொழிவுகள் போன்ற போட்டி நிகழ்வுகளில், தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளும் கெளரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன..
   அத்துடன், பிரதேச ஊடகவியலாளர்கள், நாட்டுக்காக சமூகப்பணி புரிந்தோரும் இவ்விழாவில் பாராட்டி கெளரவிக்கப்படவுள்ளனர்.
   அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம், 1983 ஆம் ஆண்டு கொழும்பில், முன்னாள் சபாநாயகர் தென்மாகாண ஆளுநர் மர்ஹூம் எம்.ஏ. பாக்கீர் மாக்கார் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 
   கொழும்புக்கும் கொழும்புக்கு வெளியேயும் கண்டி, தர்காநகர் போன்ற இடங்களில் பல மாநாடுகளையும்  விழாக்களையும் நடாத்தி பாராட்டையும் மதிப்பையும் பெற்ற ஒரு சம்மேளனமாகத் திகழ்ந்து, இளம் எழுத்தாளர்களுக்கும் பல இலக்கியவாதிகளுக்கும் அக்காலகட்டத்திலேயே களம் அமைத்துக் கொடுத்துள்ளது.
   இந்த சம்மேளனத்தின் வெற்றிக்காக, முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் எம்.ஏ. பாக்கீர் மாக்கார், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரஃப், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர், முன்னாள் அமைச்சர் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் தேவராஜ், முன்னாள் தினகரன் பிரதம ஆசிரியர் மறைந்த சிவகுருநாதன், மாத்தளை வடிவேலன் மற்றும் தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் போன்றோரின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் பாராட்டத்தக்கது. இந்தப்  பங்களிப்பை என்றுமே மறக்க முடியாது என, சம்மேளனத் தலைவர் எம். நிஜாமுதீன், செயலாளர் ஐ.ஏ. காதிர் கான், தேசிய அமைப்பாளர் ரஷீத் எம். றியாழ் ஆகியோர் தெரிவித்தனர்.
   சம்மேளன மாநாட்டில், இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் அதிகமான இளம் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர் என்பதுடன், தொடர்ந்தும் இம்மாநாட்டை நாடளாவிய ரீதியாக நடாத்தவும்  திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் பல மாநாடுகளும் விழாக்களும் விரைவில் நடாத்தப்படவுள்ளன.
   அண்மையில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவே, இச்சம்மேளன மாநாட்டை தொடர்ந்து நடாத்த முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

- ஐ. ஏ‌. காதிர் கான் -
11/03/2023.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.