நாட்டில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.(இது மார்ச் ,ஏப்ரில் மாதங்களில் இயல்பானது) அடுத்த  வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும்.இந்த நிலைகளில் நோன்பை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பது முக்கியமானது.

குறிப்பாக நோன்பு கடமை இல்லாத சிறுவர்களை இந்த நாட்களில் நோன்பு பிடிப்பதற்கு பழக்க வேண்டாம்.ஏனெனில்  உடலில் நீரின் அளவு குறைவது மிகவும் ஆபத்தானது.அதே போன்று கடுமையான வியர்வை ஏற்படும் வேலைகளை செய்வோர் .நோன்பு இல்லாத நேரங்களில் கூடுதலான அளவு நீர் அருந்துவது முக்கியமானது. நோன்பு நோற்றுள்ள நிலமையில் அதி கூடுதலான அளவு நீர் இழப்பு ஏற்பட்டு சகிக்க முடியாத நிலை ஏற்பட்டால் நோன்பை முறித்து பின்பு கழா செய்வது சிறந்தது. இதற்கான மார்க்க ரீதியான வழிகாட்டல்களை உலமாக்களை அனுகி பெற்றுக் கொள்ளுங்கள்.

 நீடித்த சிறுநீரக நோய் உள்ளவர்கள்,இருதய நோய் உள்ளவர்கள் இந்த நாட்களில் நோன்பு நோற்காமல் இருப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் அதிகளவு நீர் இழப்பு ஏற்பட்டு மரணம் கூட சம்பவிக்கலாம் .இஸ்லாத்தில் நோயாளிகளுக்கு நோன்பு கடமை இல்லை .அவ்வாறு நீங்கள் நோன்பு நோற்க வேண்டும் எனின் கட்டாயம் வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

நோன்பு காலங்களில் கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படைகளை முன்வைக்கின்றேன்.

01.நல்ல போசனையான உணவுகளை உற்கொள்தல் .புரதம் ,பாலுணவுகள்,தானியங்கள் ,பழங்கள் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விற்றமின் C உடைய பழங்களை நோன்பு இல்லாத நேரங்களில் உண்பது மிகவும் முக்கியமானது. தற்போது இலங்கையில் பழங்கள் வாங்குவது மிகவும் கடினமானது 1Kg பப்பாசிப் பழம் 400/= .எனவே பணம் படைத்தவர்கள் ளழைகளுக்கு முடியுமான அளவு வாங்கிக் கொடுங்கள்.

02.இந்த கடுமையான வெப்ப காலங்களில் சஹர் உணவு மிகவும் முக்கியமானது. அதனை தவிர்க்க வேண்டாம்.உணவுடன் சேர்த்து நன்கு போதுமான அளவு நீர் அருந்திக் கொள்ளுங்கள்.

03.நோன்பு இல்லாத நேரங்களில் அடிக்கடி நீர் குடித்துக்  கொள்ளுங்கள் .அடுத்து வரும் நாட்களில் நாட்டின் சிலபகுதிகளில் வெப்பநிலை 35°C  ஐ தாண்ட வாய்ப்பு உள்ளது. இந்தக் காலங்களில் உடல் போதுமான அளவு நீர் கொண்டிராத போது சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம்.

04.வாலிபர்களை இரவு நேர விளையாட்டுகளில் ஈடுபட அனுமதிக்க வேண்டாம் .ஊர்களில் உள்ள இரவு நேர விளையாட்டு நிலையங்களை நோன்பு காலங்களில் மூடி வைப்பது சிறந்தது. பகலில் கடுமையான நீர் இழப்பு ஏற்பட்டு, இரவிலும் பல மடங்கு நீர் இழப்பு ஏற்படும் போது இளவயது மரணங்கள் கூட சம்பவிக்கலாம்.

05.பிள்ளைகள் கடுமையான வெப்பம் நிலவும் நேரங்களில் (காலை 10மணி -மாலை 3 மணி) சைக்களில் சுற்றித்திரிவதை தவிர்ப்பது சிறந்தது.

அன்மைக் காலமாக சூரியனில் ஏற்படும் மின்காந்த சூறாவளி காரணமாக(Geo Magnetic Storm) எமது வளி மண்டலத்தில் UV கதிர்களின் அளவு மிகவும் அதிகமானது.இவை வெப்ப கதிர்களாகும் இதனால் உடல் சுடுபடுவது போன்ற உணர்வு ஏற்படும். அத்துடன் நீண்ட நேரம் கடுமையான வெயிலில் இருப்பதால் தோல் புற்று நோய்,கண்ணில் வெள்ளை தோன்றல் ,நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற நிலைகள் ஏற்படலாம்.

இந்த நிபந்தனைகளை நன்கு விளங்கி உலமாக்கள் ,வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற்று நோன்பு நோற்பதே சிறந்தது.
Ramalan Kareem 

எம்.என். முஹம்மத் 
ஆசிரிய ஆலோசகர் .
விஞ்ஞானம்.

 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.