ரஷ்யாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள சீன ஜனாதிபதி

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகின்ற 20-ம் திகதி ரஷ்யாவுக்கு செல்லவுள்ளார். 



உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஜனாதிபதி புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 



இது குறித்து பெய்ஜிங்கில் ஊடகவியலாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை ஊடக பேச்சாளர் ஹூவா சுன்யிங், ''ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்யா செல்லவுள்ளார். 



வருகின்ற 20-ம் திகதி ரஷ்யா செல்லும் ஜனாதிபதி, வரும் 23-ம் திகதி அங்கிருந்து சீனாவுக்கு திரும்புகிறார்' என்று தெரிவித்துள்ளார். 



இந்த விஜயத்தின் போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர புதினுக்கு ஜி ஜின்பிங் அழுத்தம் கொடுப்பாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஹூவா சுன்யிங், ''பேச்சுவார்த்தைதான் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்பதில் சீனா நம்பிக்கை கொண்டிருக்கின்றது'' என்று தெரிவித்துள்ளார்.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.