பயாஸா  பாஸில்  எழுதிய  "என்  எழுத்துக்கு  ஒரு  தசாப்தம் "   கவிதை  நூலானது,    பெப்ரவரி   மாதம்  இரண்டாம்  திகதி  2023  அன்று  ஸ்கை தமிழ்  ஊடக  வலையமைப்பின்  வெளியீட்டில்  (zoom)  ஒன்லைன்  ஊடாக  மிகவும்  சிறப்பான  முறையில்  இரவு  7.00 மணிக்கு  நடைபெற்றது.

            சிஹானா நௌபர்  நிகழ்ச்சிகளை  தொகுத்து  வழங்க    மூத்த  கவிஞர்  நஜ்முல்  ஹுஸைன்   அவர்கள் தலைமை  உரையினை  நிகழ்த்தினார்.   பியாஸ்  முஹம்மட்  அவர்கள் (former  Editor Meelparvai , Editor Newsnow.lk  )அழகான  முறையில்  நூலாசிரியரை  அறிமுகம்  செய்து  வைக்க   சிறப்பு  அதிதியாக  எம் .எம் .மொஹமட்  (இலங்கை  தேர்தல்  ஆணைக்  குழு  உறுப்பினர் )    மற்றும்  எம் .இஸட்.அஹமட்  முனவ்வர்  (சியன  மீடியா தலைவர்  இலங்கை  வானொலி  முஸ்லிம்  சேவை  முன்னாள்  பணிப்பாளர்)
சிறப்பிக்க
பிரதம  அதிதியாக   மின்னும்  தாரகை  நூலாசிரியர் நூருல் ஐன் நஜ்முல் ஹுஸைன் அவர்களும் கலந்து  நூல்  வெளியீட்டு  விழா  இனிய  முறையில்  நடாத்திட   தனது  கருத்துக்களையும்  பகிர்ந்து  கொண்டார்கள்.
 
        zoom  இன் ஊடாக  ஒரு  நூல்  வெளியீட்டு  விழா  எவ்வாறு  சாத்தியம்  ஆகும்  என்பது  எனது  எண்ணங்களுக்குள்  அடிக்கடி  சிந்திக்கத்தூண்டிய  ஒன்றாக  இருந்தாலும்  இன்றைய  நம்  நாட்டு  நிலமை  காரணமாக  இவ்வாறானதொரு வளர்ச்சி  அடைந்த  தொழில்  நுட்பத்தின்  மூலம்  எழுத்தாளர்கள்  பலரின்  கனவுகள்  மெய்ப்படுகின்றது  என்பதை   நினைக்கும்  பொழுது   மிகவும்   சந்தோஷமாக  உள்ளது.

      என்  எழுத்துக்கு  ஒரு      தசாப்தம்  நூல்  வெளியீட்டு  விழாவிற்கு  நாலா பக்கங்களில்  இருந்தும்  பல வாசிப்புப் பிரியர்கள்  கலந்து  கொண்டமை  சிறப்பம்சமாகும்.

          பயாஸா  பாஸில்  தனது  பத்து  வருட எழுத்துப்  பயணத்தை  "என்  எழுத்துக்கு  ஒரு  தசாப்தம்"   எனும்  கவிதை  நூலின்  மூலம்  தனது  அனுபவங்களை  ,வாழ்க்கையின்  யதார்த்தத்தை  மிக  அழகாக,  தெளிவாக  யாவரும்  படித்துப்  புரிந்து  கொள்ளக்கூடிய  எளிய  மொழி  நடையில்  எழுதியுள்ளமை   வரவேற்கத்தக்க   விடயமாகும். 

             முதற்கவிதையினை  சமர்ப்பிக்கும்  பொழுது  தன்னைப்  படைத்த   நாயன்  முதல்  ஒவ்வொருவரையும்  தன்  வாழ்க்கைக்கு  மூலகர்த்தாவானவர்களை   நினைவு  கூறும் விதம்   உண்மையிலேயே   அருமை.

          பயாஸா பாஸில்  சிறு  வயதாக  இருக்கும்   பொழுதே  தந்தை   இவ்வுலகை  விட்டுப்  பிரிந்து  இருந்தாலும்  "நான்  வளர  வழிகாட்டி  முளையும்  பயிர்  விளைய  வித்திட்டுச்  சென்ற  என் தந்தைத்கு!"  சமர்ப்பணம்  சொல்லும் கவி   நல்ல  அர்த்தமான   வரியாகும்.  நிச்சயமாக  கவிஞரைப்  பாராட்டியே  ஆகவேண்டும்.

       தன்  தந்தையை  இழந்த  வலியை  ஒரு  சில  கவிதைகளில்  வரி  வரியாய்  வார்த்துள்ளார்.
    வாழ்வை  தந்தவன்  எடுத்துக்  கொண்டான்  வாழ  வந்த  எமக்கு  ஜீரணிப்பது  கஷ்டம் .  தந்தை  இல்லாத  வலியை  கவிஞர்  வாழ்  நாள்  முழுக்க  சுகக்கின்றார்  என்பதே  உண்மை.

       தந்தை  பற்றி  மட்டுமல்லாமல்   தன்  தாய்  பற்றியும்  அவர்  எழுதாமலில்லை .எல்லோருக்கும்  தாய்  என்பவள்  எவ்வளவு  முக்கியமானவள்  பயாஸா  பாஸிலும்  "நீயே  என்  ஒளி  விளக்கு  நான்  வாழும்  காலம்  வரை!. என்ற  வரிகளுக்குள்  அவரின்  மொத்த   பிரகாசத்திற்கும்  தாய்  தான்  காரணம்  என்பதை  அழகாக  தொட்டுக்காட்டுகின்றார்.
       
பெண்ணே!  எனும்  கவிதை  தாய்மையை  மேன்மைப்படுத்தி  தீன்  பணிக்காக  தன்  பிள்ளைகள்  வளர்க்கப்பட   வேண்டும்  என்பதை  வலியுறுத்திச் செல்கின்றது.  சிறந்த  கல்வி  சீரான   வளர்ப்பு  எல்லாம்  கொண்டு  அழகாக   வளர்க்கப்படுகின்றாய்  நீ!  அழைக்கின்றது தீன்  எம்மை  தீன்  பணிக்காய் ..என்ற  கவி  வரிகளே  அவை.

        எனதான  அவ்வூர்  கவி வரிகள்  அவர்  பிறந்த  ஊரின்  அழகினை  இவ்வாறு  வர்ணிக்க "பாதையோரமெங்கும்  பச்சை  வயல்...  வயலின்  நடுவே   ஒற்றையடிப்  பாலம்....  பாலம்  கடந்த  பாதை   தாண்டின்  அங்கே   ஜும்மாப்  பள்ளி  அழகாய்  வார்த்தைகளை  அடுக்கிக்  கொண்டு  செல்ல பலவருடங்களின்  பின்  அவரது  ஊரின்  மாற்றம் கண்டு வியந்து போகிறார் கவிஞர்.  

            கவிஞரின்  வாழ்வு  பற்றி  மட்டுமல்லாது    தூர  தேசத்தில்   நடக்கும்  கொடுமைகள்  கண்டு  பேனா  முனை  கொண்டு  எழுதுகிறார்.அய்லான்  குர்தூபிக்காக  வார்த்தைகள்  முடியும்   முன்  வாயார  கூறுகிறேன்    சுவர்க்கத்து  பூஞ்சோலை  சுந்தரனே   உனக்காய்  வஞ்சமில்லா  நெஞ்சத்தோடு  வல்லவனிடம்  கேட்கின்றேன்  !  என்று  அச்சிறுவனை  தன்  நெஞ்சமதில்  நிலை    நிறுத்துகிறார்.

                 எப்போது  மிருகமானாய்  ?..  கவியின்   வரிகள்  எவ்வளவு  ஆழமானது  தெரியுமா?   ஒரு  குழந்தையை  ஒரு  தாய்  தன்  சிசுவை  கருவறையில்  எத்தனை  கனவுகளாடு சுமந்திருப்பாள்  எதையுள்  உணராத  ஒரு  பிள்ளையை  நோக்கி   கேட்கின்றார்  கவிஞர்.  பெற்றவளின்  பாசம்  பெறவைத்தவனின்   நேசம்  எதையும்  உன்னால்   உணர  முடியவில்லை  . எங்கே  தொலைந்தது  உன்  ஆறாம்  அறிவு...?! எனக்  கேட்பதன்  மூலம்  மிருகத்தனமாய்  மாறிய  செயல்  கண்டு கடும்  கோபம்  கொள்கின்றார்.

        முடிவு  உன்னிடமே  எனும்  கவியின்  ஒவ்வொரு  அடிகளின்  ஆழமும்  எம்  அனைவரினதும்  இதயங்களையும்  தட்டி   எழுப்பும்   என்பதில்  எவ்வித  ஐயமும்  இல்லை.
 
        ஓடி ஓடி  உழைப்பதில்  மட்டும்  பயனில்லை  நன்மைகளையும்  அதிகம் அதிகம் செய்ய வேண்டும்  என்பதை  உணர்த்துகின்றது   .முடிவின்றி  நாமும்  ஓடுகின்றோம்,களைப்பின்றி  தினமும்  உழைக்கின்றோம்.  அடுத்து  முடிவது  எல்லாம்  இறையோனே   ..உன்னிடம்  தானே  மன்னவனே..
கையால்  விட்ட  தவறுகளோ  கைசேதம்  என்று  விளங்கிடுமே..
 நன்மை  இன்றே  செய்து  விடில்  நலமும்   அன்றே  கிடைத்துவிடும் . 

இன்னும்  ஏன்  தாமதம்  வாசகர்களே!      நம்   உழைப்பிற்கு   மத்தியில்  நன்மைகளை  அதிகம்  செய்திடுவோம்  .கவிஞரின்  ஆசையும்  அதுவே.!

         பிச்சையும்  இச்சையும்  கவிதை  ஆசைக்கு  அணியும்  கிழிந்த   ஆடையோடும்  பிச்சைக்காரி  அணியும்  ஆடையோடும்  ஒப்பிட்டு   மிக அழகாக  அந்த  அநாகரீக  ஆடையை  எடுத்துக்காட்டுகின்றார்.

         சிறைப்படுகின்றான் மனிதன்  , கவிதையில்   இறைவனை  மறந்து  மனிதன்  மொத்தமாய்  சைத்தானிடம்  சிறைத்தானிடம்  சிறைப்பட்டதை  மிகத்துள்ளியமாக  எடுத்துக்காட்டுகின்றார்.  

              உனக்காக  கண்ணீர் வடிக்கின்றேன்  ! கவிதை   சமூகம்  சார்ந்த  கவிதை  தன்  இயலாமையை  எழுத்துக்களில்  கோர்கிறார்  கவியாக  "துப்பாக்கி   ஏந்த  முடியவில்லை  து ஆக்களையாவது  ஏந்துகின்றோம்  என்று  தன்  பேனாவால்  எழுதுகின்றார்.இந்தப்  பெண்  ஆளுமை  வாழ  வேண்டிய  வயதில்   வாடிச்  செல்லும்  குழந்தைகள்  காணச்சகிக்கவில்லை  ரப்பே !.என்று  தன்  மனக்குமுறலை  கொட்டுகின்றார்.  

       தோற்றுப்போகின்றேன்  கவிதைக்குள்  நுழைந்த  பின்  உண்மையிலேயே  நாங்கள்  தோற்றே  போனோம்  என்பதை  உணர  முடியும்.

       மன்னிப்பழிக்காத  சவூதிப்  பெண்மணியின்  குணத்தால்  தாரை  வார்க்கப்பட்ட  தங்கப்  புதையல் ரிஸானவைப்பற்றி  வாழச்  சென்ற  வாழைக்கன்று  சிறகடித்துப்பறந்த  சிட்டுக்குருவி  என்று  மிக அழகாக  அழைத்து   அவளின்  நிலைதனை வடித்து  எம்  இதயங்களையும்  நிலை  குலையச்  செய்துவிட்டார்  இக்  கவிஞர்.

        ஆங்காங்கே  நடக்கும்  சின்னஞ்சிறுசுகளின்  கற்பழிப்பு  கண்டு  மனம்  கொதித்தெழுந்து    எழுதுகிறார்.  ஒவ்வொரு  சிட்டுக்கள் பற்றியும்  கண்ணீர் துளிகளை  சாட்சியாக்கி  எழுதித்  தள்ளுகின்றேன்.. இருந்தும் என்ன பயன்.எத்தனை  முறை  எழுதிட்டாலும்  முறை தவறி  நடக்கும்  ஆண்களுக்கு  தண்டனை  ஏதும்  இல்லையே..என்பதே  எனது  கவலையும்  கூட.கவிஞரும்  இறைவனே  தண்டனை  கொடுக்க  வல்லவன்  என்று  அவனிடமே  மடல்  அனுப்புகிறார்.

             எம்  கவிஞர்  சமகாலப் பதிவை  கருவாகக்  கொண்டு  கவி  உருவாக்கி  கலை  படைத்துள்ளார்.கொரோனா  தந்த பாடம் கவிதையில் புது  உலகில்  கொரோனா எம்மை  வாழவைத்த புதுமைகளை  அடுக்கிக்கொண்டே  போகின்றார். 

        பாக்கியம்  கவிதையில்  பெற்றோரை  கண்ணியப்படுத்தும்  படி  வழுக்கட்டாயமாக்  கூறுகின்றார்.உண்மையில்  பெற்றோரை  மதிக்காதோர்  பின்னர்  வேதனைப்படுவார்கள்  ஏனென்றால்  கவிஞர்  சொல்வதைப்போல்  அவர்களை  கண்போல  காக்கும்  பாக்கியம்   எல்லோருக்கும்  அமைவதில்லை.

       உள்ளத்திற்கு  உரமாகும்  எழுத்து  கவிதையின்  மூலம்  நல்ல  எழுத்து  எம்  உள்ளத்திற்கு  உரமாகும்  முன்னேற  வாழ்வில்  வெற்றி  பெற  வழியமைக்கும்  .என்பதை  முழு  சமூகத்திற்கும்  உரத்துக்கூறுகின்றார்.

        பேனா  முனையின்  வலிமை  எவ்வாறு  எனில்  நாம்  எழுத  எழுத  ஒரு  மனிதன் பூரண  மனிதனாக  பட்டை  தீட்டப்படுகின்றான்  என்பதில்  எவ்வித  ஐயமும் இல்லை.

          கவிஞர்  பயாஸா  பாஸில்  தன்னை  ஒரு எழுத்தாளராக  அடையாளப்படுத்துவதற்கு   தனது  கவிதைகளை  துளித்துளியாக  சேமித்து   வரிவரியாக  வார்த்து  அத்தனையையும்  கோர்த்து  ஒரு  தசாப்த  காலமாய்  பெரும்பாடு  பட்டு  தன்  கடைசிக் கவியான தன்  துணைவரின்  துணையோடு  "என்  எழுத்துக்கு  ஒரு  தசாப்தம் "நூலை  வெளியீட்டுள்ளார்.
  
        கவிஞர்  பயாஸா பாஸிலின்  ஆசையெல்லாம்  தன்னை  இந்த  சமூகத்திற்கு  ஒரு  ஆலமரமாய்  வளர  வேண்டும்  என்பதே  !  பெருமைக்கோ   பேராசைக்கோ  அவர்  எண்ணவில்லை.
அடுத்தவர்களுக்கு  பயனாக  அமைய  வேண்டும்   என்பதற்காக   அவர்  காயங்களையும்  காயப்பட்ட  ரணங்களையும்  அவர்  உள்ளத்தில்  உரமாக்கி  கிளை பரப்பிடும்  ஒரு  மரமாய்  வளர  தளிராய்  மீண்டு  வந்தார் பயாஸா  பாஸில்  .

    இவரைப்  போல்  தன்  சமூகத்தில்  பல  முஸ்லிம்  பெண்  எழுத்தாளர்கள்  உருவாக  வேண்டும்.அவர்கள்  வளர  மூத்த எழுத்தாளர்கள்  உரமாய்  ஆழம்  விழுதாய்  திகழ  வேண்டும்.
 
           தன்  கவிஞர்களை  கவிஞர்  கோர்க்கும்  எதுகை  மோனை  ஆங்காங்கே   அவரது  கவி  வரிகளை  அழகுறச்செய்கின்றன.
"கருவரையில்  சுகம்  ஜனனித்த  நொடி  தாயவளின்  மடி  தாலாட்டுக்  கவி  ".இக்  கவி வரிகள்  போல் மேலும்  பல வரிகளை   அழகுறச்செய்தது   எதுகை  மோனை.
மேலும்  புறம்  பேசியவர்களையும்  புன்னகை  அணியவைத்தாய்.! மறையை நினைக்காதோரையும்  மார்போடு  அணைக்க  வைத்தாய்  இவ்வரிகளை  அலங்கரித்த  எதுகை  மோனை  என்  இதயத்தை  தொட்டுவிட்டது.
     
       பயாஸா  பாஸில்  தன்னைப்  பற்றி  தன்னைச்  சார்ந்தவர்கள்  பற்றி சமூகத்தைப்பற்றி  சமூகத்திற்கு  அப்பால்  அயல்  நாட்டு  சொந்தங்களைப் பற்றி நாட்டு மக்களின்  பிரச்சினைகள்  பற்றி  மற்றும்  பல  பொதுப்பிரச்சினைகள்  பற்றியெல்லாம்  கவி  வடித்துள்ளார்.

   இவர் இஸ்லாமிய  பெண்  எழுத்தாளர்  என்ற  வகையில்  இஸ்லாமிய கவி புனைவதிலும்  ஆர்வம்  காட்டியுள்ளார்.
சிறைப்படுகின்றான் மனிதன்,என்  சுவாசமே,முடிவு உன்னிடமே,பெண்ணே, இவ்வாறு  பல  கவிதைகள்  எம்  இஸ்லாமிய  சமூகம் பற்றி  அதிகமாய்  சிந்திக்கின்ற  ஒருவராய்  இருக்கின்றார்.எதிர்காலத்தில் பல  இஸ்லாமிய  மற்றும் சிறந்த  கருத்துக்களைக்  கொண்ட  கவிதைகளைத்  தருவார்  என்று  எதிர்பார்க்க  முடிகின்றது.

    இவர்  இன்னும் அதிகமாக  சமூகம்  சார்ந்த  கவிதைகளையும்  எழுத  வேண்டும்  இவரைப் போன்ற  பல முஸ்லிம் பெண்  எழுத்தாளர்கள்  வளர்ந்து  வரும்  பெண்  எழுத்தாளர்களை  இனம் கண்டு வழி நடாத்திச் செல்ல  வேண்டும்.இலை மறை காயாக  இருக்கும்  எழுத்தாளர்கள்  எந்தக் கயிற்றைப்  பற்றிப்  பிடிக்க  வேண்டும்  எனத் தெரியாமல்  தத்தளித்துக் கொண்டு  இருக்கின்றவர்களை
அவர்கள்  கரைதன  தொட்டுச்செல்ல  மூத்த   எழுத்தாளர்கள்  துடுப்பாக  இருக்க  வேண்டும் .

அவ்வாறு  இருந்தால்  தான்  இன்று  உருவாகிய  பயாஸா பாஸிலைப்போன்ற  பெண்  ஆளுமைகள்  பிறப்பிக்கப்படுவார்கள்.

        என்  எழுத்துக்கு  ஒரு தசாப்தத்தை  பிரசவித்த  அன்னை  பயாஸா  பாஸில்  தன்  வாழ்வில்  ஏற்பட்ட  பல  தடைகளையும்  தாண்டி  ஒரு தசாப்தம்  அதன்  வலிகளை  உணர்ந்து  இந்  நூலினை  உயிர்ப்பித்துள்ளார்.என்றும்  இவர்  இஸ்லாமிய  பெண் எழுத்தாளராக  திகழ்ந்து  நம்  சமூக  மக்களுக்கு நற்  தொண்டாற்ற  வேண்டும்  என்று  வாழ்த்துகின்றேன்.


         ✍🏻லுதுபியா  லுக்மான்✍🏻✍🏻


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.